22 ஆக., 2010

எம்.பி.க்கள் போர்க்கொடி எதிரொலி: சம்பளம் ரூ.80 ஆயிரமாக உயர்கிறது?

புதுடெல்லி,ஆக.22:நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் சம்பளம் ரூ.80 ஆயிரமாக உயர்த்தப்படும் என தெரிகிறது.

எதிர்க்கட்சி தலைவர்களுடன் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி சனிக்கிழமை நடத்திய ஆலோசனையில் இது தொடர்பான உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

எம்.பி.க்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை பரிசீலிப்பதாக பிரணாப் முகர்ஜி உறுதியளித்தார் என்று கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில் ஐக்கிய ஜனதா தள கட்சித் தலைவர் சரத் யாதவ் கூறினார்.

அரசுடன் உடன்பாடு எட்டப்பட்டதால்,இனி ஊதிய உயர்வு கோரி நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட மாட்டோம் என உறுப்பினர்கள் உறுதி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஊதிய உயர்வு கோரி வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இப்பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக மத்திய நிதி அமைச்சர் சனிக்கிழமை பாஜக, ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜவாதி கட்சி ஆகிய கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது உறுப்பினர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி, சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத், ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

எம்.பி.க்களுக்கு மாதாந்திர ஊதியம் ரூ.16 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்த மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்தது. ஆனால் அரசுத் துறைச் செயலர்களின் ஊதியம் ரூ.80 ஆயிரமாகும். எனவே கூடுதலாக ரூ.1-வது செயலர்களை விட கூடுதலாக தங்களுக்கு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை ரகளையில் ஈடுபட்டனர். கூச்சல், குழப்பத்துக்கு இடையே மருத்துவக் கவுன்சில் தொடர்பான மசோதா விவாதமின்றி நிறைவேறியது. இதையடுத்து நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

இதன் பிறகு ஒத்திகை நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடத்தினர். இதில் பிரதமராக லாலு பிரசாத் இருந்தார். பாஜக-வின் கோபிநாத் முண்டே துணைத் தலைவராக இருந்து ஒத்திகை நாடாளுமன்றத்தை நடத்தினார். அப்போது எம்.பி.க்களின் ஊதிய உயர்வு குறித்து நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பரிசீலிக்க ஒப்புக் கொண்டதாக கோபிநாத் முண்டே கூறினார்.

பிரணாப் முகர்ஜியை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) ஒருங்கிணைப்பாளர் சரத் யாதவ் கூறியது: 'ஊதிய உயர்வு குறித்து பரிசீலிப்பதாக பிரணாப் கூறினார். அத்துடன் விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்ட மருத்துவ மசோதா குறித்து விவாதிக்கலாம் என்று கூறினார். விவாதத்தின் போது கூறப்படும் கருத்துகள் பரிசீலிக்கப்படும் என்றும் பிரணாப் கூறினார்' என்றார் சரத் யாதவ்.

ஒத்திகை நாடாளுமன்றத்தை மக்களவைத் தலைவர் மீரா குமார் ஏற்கவில்லை. பாஜக மூத்த தலைவர்களும் தங்கள் கட்சி உறுப்பினர்கள் ஒத்திகை நாடாளுமன்றத்தில் பங்கேற்றதற்கு அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "எம்.பி.க்கள் போர்க்கொடி எதிரொலி: சம்பளம் ரூ.80 ஆயிரமாக உயர்கிறது?"

கருத்துரையிடுக