25 ஆக., 2010

அப்துல் நாஸர் மஃதனியை இன்னொரு வழக்கில் சிக்கவைக்க முயற்சி

பெங்களூர்,ஆக25:நான்கு மாதம் முன்பு பெங்களூர் சின்னசுவாமி ஸ்டேடிய மைதானத்திற்கு வெளியே நடந்த குண்டுவெடிப்புகளில் அப்துல் நாஸர் மஃதனியை சிக்கவைக்க கர்நாடகா உள்துறை அமைச்சகம் முயன்று வருகிறது.

சின்னசுவாமி ஸ்டேடியத்தில் நடந்த குண்டுவெடிப்புகள் தனக்கு தெரிந்தே நடந்தது என குற்றத்தை ஒப்புக்கொண்டதாக கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் வி.எஸ்.ஆச்சார்யா நேற்று காலை விதானசவ்தாவில் வைத்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அமைச்சரின் அறிக்கைக்கு வந்த உடனேயே அப்துல்நாஸர் மஃதனியை வடிவாள போலீஸ் முகாமில் சந்தித்த அவருடைய வழக்கறிஞர் ஆச்சாரியாவின் அறிக்கை அடிப்படையற்றது என்றும் இட்டுக்கட்டப்பட்ட பொய் என்றும் தெரிவித்தார்.

பி.டி.பியின் மாநில துணைத்தலைவரும், கோவை குண்டுவெடிப்பு வழக்கில் மஃதனிக்காக வாதாடிய வழக்கறிஞரான அக்பர் அலியும், சிராஜ் என்பவரும் நேற்று மஃதனியை சந்தித்தனர்.

பெங்களூர் குண்டுவெடிப்புத் தொடர்புடைய கேள்விகளை மட்டுமே கேட்டதாகவும், அதற்கான பதில்களை மட்டும் தெரிவித்ததாகவும், சின்னசுவாமி ஸ்டேடிய குண்டுவெடிப்பு பற்றி எவரும் எதுவும் கேட்கவில்லை என்று அப்துல்நாஸர் மஃதனி தெரிவித்ததாக வழக்கறிஞர்கள் தேஜஸிடம் தெரிவித்தனர்.

"எனது முன்பில் ஆஜராக்கப்படாத ரபீஃக்,பிரபாகரன் ஆகிய சாட்சிகள் குடகில் வைத்து தன்னை அடையாளம் காட்டியதாக போலீசும், செய்தி ஊடகங்களும் பொய் பரப்புரைச் செய்வதுப்போன்ற செய்திதான் வி.எஸ்.ஆச்சார்யா வெளியிட்டுள்ளார்' என மஃதனி கூறியதாக அக்பர் அலி தெரிவிக்கிறார்.

கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி பெங்களூர் சின்னசுவாமி ஸ்டேடியத்திற்கு வெளியே குண்டுகள் வெடித்தன. இதில் 15 பேருக்கு காயம் ஏற்பட்டது. இந்தியன் ப்ரீமிய லீகின் லீக் போட்டிகள் முடிவந்த நிலையில் நடந்த குண்டுவெடிப்பு அரையிறுதி ஆட்டங்களை மும்பைக்கு மாற்றுவதற்காக நடத்தப்பட்ட சதித்திட்டம் என கர்நாடக அரசு அறிவித்திருந்தது.

சூதாட்டக்காரர்களுக்கிடையேயான மோதல்தான் சின்னசுவாமி ஸ்டேடிய குண்டுவெடிப்பு என அன்று கர்நாடக உள்துறை அமைச்சர் வி.எஸ்.ஆச்சார்யா கூறியிருந்தார். வி.எஸ்.ஆச்சார்யாவின் நேற்றைய அறிக்கையின் மூலம் கர்நாடக அரசின் மஃதனிக்கு எதிரான வழக்கில் நேரடி தலையீட்டின் முகமூடி கிழிக்கப்பட்டது.

பத்து நாட்களாக போலீஸ் கஸ்டடியில் மஃதனியை விசாரணை நடத்தியதின் விசாரணை அறிக்கை நாளை துணை முதன்மை மெட்ரோபாலிடன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருக்கிறது.

நீதிமன்றத்தில் போலீசார் அறிக்கையை சமர்ப்பிக்கும் முன்பே உள்துறை அமைச்சர் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது கடுமையான சட்டமீறலாகும்.

காவல்துறையையும், நீதிமன்றத்தையும் தாண்டி கர்நாடக அரசு நேரடியாக இவ்வழக்கில் தலையிட்டது மூலம் பா.ஜ.க அரசின் காழ்ப்புணர்வின் காரணமாக இட்டுக் கட்டப்பட்டதுதான் அப்துல் நாஸர் மஃதனிக்கெதிரான வழக்கு என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

பெங்களூர் குண்டுவெடிப்பின் சூத்திரதாரி அப்துல் நாஸர் மஃதனி என்று நேற்று முன் தினம் எல்.கே.அத்வானி கூறியதும்,மறுநாள் கர்நாடக உள்துறை அமைச்சரின் அறிக்கையும் எதிர்பாராமல்
நிகழ்ந்ததல்ல.

அப்துல் நாஸர் மஃதனிக்கு ஜாமீன் கிடைக்காமலிருக்க முயற்சிகள் நடைபெற்றுவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போலீஸ் கஸ்டடியிருக்கின்ற காரணத்தால் மஃதனிக்காக இதுவரை ஜாமீன் மனு அளிக்கப்படவில்லை. நாளை போலீஸ் கஸ்டடி முடிவடைவதால் ஜாமீன் மனுவை செசன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் முயற்சியில் அவருடைய வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை நடந்த புலனாய்வு விசாரணையில் ஆதாரங்கள் ஒன்றும் கிடைக்காததால் இதர மாநிலங்களில் நடந்த குண்டுவெடிப்பு வழக்குகளையும் அப்துல் நாஸர் மஃதனியின் தலையில் கட்டி நீதிமன்றக் காவலை தொடர்வதற்கு சதித்திட்டம் தீட்டப்படுவதாக கூறப்படுகிறது.

அதேவேளையில் அப்துல் நாஸர் மஃதனிக்கு எதிராக வெளியிட்ட அறிக்கை சர்ச்சையைக் கிளப்பியுள்ளதால் கர்நாடக உள்துறை அமைச்சர் தனது அறிக்கையை வாபஸ் பெற்று தலைத்தப்புவதற்கு முயன்றுள்ளார்.

மஃதனி குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தான் கூறவில்லை என வி.எஸ்.ஆச்சார்யா நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அப்துல் நாஸர் மஃதனியை இன்னொரு வழக்கில் சிக்கவைக்க முயற்சி"

கருத்துரையிடுக