11 ஆக., 2010

ஹஜ் பயணிகள் பாஸ்போர்ட் பெற போலீஸ் சான்றிதழ் தேவையில்லை

சென்னை,ஆக11:ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கு போலீஸ் சான்றிதழ் இல்லாமல் 8 மாத காலத்திற்கான பாஸ்போர்ட் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி முதல் பாஸ்போர்ட் சென்னையில் வழங்கப்பட்டது.

பாஸ்போர்ட் வாங்க ஒருவர் விண்ணப்பம் செய்தால் அவரை பற்றி காவல் துறையினர் விசாரித்து, விண்ணப்பித்த நபர் சரியான முகவரியில்தான் இருக்கிறார், தகவல்கள் சரியாக உள்ளன என்பதை தெரிவிக்கும் சான்றிதழ் வழங்க வேண்டும்.

அப்படி சான்றிதழ் கிடைத்த பின்னர்தான் சம்பநத்ப்பட்டவர்களுக்கு பாஸ்போர்ட் விநியோகம் செய்யப்படும். இதில் காலதாமதம் ஏற்படுவது வழக்கம்.

இந்த நிலையில் ஹஜ் யாத்திரை வருவோர் சர்வதேச பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும் என சமீபத்தில் சவூதி அரேபிய அரசு அறிவித்தது. இதையடுத்து ஹஜ் யாத்ரீகர்களின் நலனுக்காக, துரித கதியில் பாஸ்போர்ட் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.

அதன்படி, போலீஸ் சான்றிதழ் இல்லாமலேயே 8 மாத காலத்திற்கு மட்டும் செல்லுபடியாகக் கூடிய சர்வதேச பாஸ்போர்ட்டை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. தற்போது அது நடைமுறைக்கு வந்துள்ளது.

இதன்படி விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் இந்த பாஸ்போர்ட் வழங்கப்படும். இது தற்காலிக பாஸ்போர்ட்தான். அதேசமயம், இதை நிரந்தரமாக மாற்றிக் கொள்ள விரும்பினால் தனியாக விண்ணப்பிக்க வேண்டும். பிறகு போலீஸ் சான்றிதழ் உள்ளிட்ட நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு அவர்களுக்கு நிரந்த பாஸ்போர்ட்டாக அது மாற்றித்தரப்படும்.

இதுதொடர்பாக அனைத்து பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு மத்திய வெளியுறவுத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,

ஹஜ் கமிட்டியின் கவர் எண் உள்ள அனைத்து உண்மையான ஹஜ் பயண விண்ணப்பத்தாரர்களுக்கு புதிய திட்டப்படி உடனடியாக பாஸ்போர்ட் வழங்க வேண்டும்.

தனியார் ஹஜ் பயண முகவர்களுக்கு 45 ஆயிரம் பயண கோட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் ஆகஸ்டு 13-ம் தேதிக்குள் தகுந்த நிரூபண ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தற்போதைய புதிய திட்டத்தின்படி சென்னையில் விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் ஒருவருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளதாக துணை பாஸ்போர்ட் அதிகாரி கே.எஸ்.தவ்லத் தமீம் அறிவித்தார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஹஜ் பயணிகள் பாஸ்போர்ட் பெற போலீஸ் சான்றிதழ் தேவையில்லை"

கருத்துரையிடுக