9 செப்., 2010

ரமலானே மீண்டும் வா!

மீண்டும் ஒரு ரமலான் நம்மை விட்டும் பறந்தோடிவிட்டது.பகலில் பசித்திருந்தோம். இரவில் விழித்திருந்தோம். பள்ளிவாசலில் தனித்திருந்தோம். ஆனால் பாடம் கற்க மறந்துவிட்டோமோ! என்ற ஒரு நெருடல் எம் நெஞ்சை உலுக்குகிறது.

சோம்பேறியான மனிதர்கள், வெறிச்சோடிய மஸ்ஜிதுகள், எதிரிகளை எதிர்கொள்ள திராணியற்ற சமுதாயம் என ரமலான் நம்மை விட்டும் அகன்றுவிட்டது.

கருத்தியல் களங்கள் குருதிக் களரியாக,எதிரிகளின் தாக்குதலில் வாழ்வைத் தொலைத்த எம் சமூக மக்கள், உயிர்வாழ எதிரிகளின் காலடிகளை நக்கிவாழும் சில முஸ்லிம் தலைவர்கள், தனிமனித வழிபாடே மார்க்கமாக, புரோகிதமே தொழிலாக என எம் சமூகத்தின் அவலநிலையை மாற்றாமலேயே மீண்டும் ஒரு ரமலான் சென்றுவிட்டது.

ஆனாலும் எங்கோ ஒரு நம்பிக்கை கீற்று தென்படத்தான் செய்கிறது. இழப்புகள் எவ்வளவுதான் ஆனாலும் வீரியம் குறையாமல் வீதியில் வந்து போராடும் எம் கஷ்மீரி சகோதரர்கள்! சியோனிஷ பயங்கரவாதத்தால் துயரமே வாழ்க்கையாக மாறிய பொழுதும் உருக்குலையாத உறுதியைக் கொண்ட காஸ்ஸா மக்கள், ஆக்கிரமிப்புகளையும், அட்டூழியங்களையும் கண்டு கலங்கிடாமல் எதிர்த்துப் போராடும் ஈராக், ஆப்கானிஸ்தான் போராளிகள்,எதிரிகளின் மிரட்டல்களுக்கு அஞ்சாமல் வீறு நடைபோடும் ஈரான் தேசம். ஆம் இவை எம் நெஞ்சங்களை சற்றுக் குளிரத்தான் வைக்கின்றன.

ரமலானை பண்படுத்தாமல் பாழ்படுத்திய நம்மவர்களில் சிலர் தமக்குத்தாமே ஆறுதல் கூறுகின்றனர். அடுத்த ரமலானில் பார்த்துக்கொள்வோம்! என ஆயுளைப் பற்றி அவ்வளவு நம்பிக்கை அவர்களுக்கு!

விருந்தோம்பல்களுக்கும் கோலாகலங்களுக்கும் பஞ்சமில்லை நம்மிடம்! துயரில் வாடும் சக முஸ்லிம்களைப் பற்றிய கவலையோ நம் நெஞ்சில் வெற்றிடம்! சுயநலமே வாழ்க்கையாக மாறிவிட்ட அவலநிலையில் எம் சமுதாய மக்கள்! கஷ்டங்களையும்,சிக்கல்களையும் எதிர்க்கொள்வது அவர்களுக்கு வேப்பங்காயாக கசக்கிறது! நோன்பு நோற்பதுக்கூட சிலருக்கு சிரமம்தான். கனவில் வெற்றிக் கனிகளை தட்டிச்செல்லலாம் என சிந்தனை வயப்பட்டிருக்கின்றார்கள்.

ரமலானில் நடந்த நிகழ்வுகளெல்லாம் இவர்களுக்கு நிதர்சனம் அல்ல. அதிசயங்களே! ரமலானே! மீண்டும் வா! எங்களை பண்படுத்திச்செல்! லட்சிய வீரர்களை உருவாக்கிச் செல்! மீண்டும் ஒரு லட்சியசமூகம் உருவாக உயிர் கொடுத்துச் செல்!

பாலைவனத்தூது வாசகர்கள் அனைவருக்கும் எமது இதயங்கனிந்த ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

தகப்பலல்லாஹு மின்னா வ மின்கும்!
அல்லாஹ் உங்கள் செயல்களையும் எம் செயல்களையும் ஏற்றுக் கொள்வானாக!

பாலைவனத் தூது

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ரமலானே மீண்டும் வா!"

கருத்துரையிடுக