2 செப்., 2010

தலிபான்களுடன் பேச்சு நடத்தியதாக வெளிவந்த செய்திக்கு அமெரிக்கா மறுப்பு

வாஷிங்டன்,செப்.2:தலிபான்களுடன் அமெரிக்க சிறப்பு தூதர் ரிச்சர்ட் ஹால்புரூக்கின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தியதாக வந்த செய்திகளை அமெரிக்கா மறுத்துள்ளது.

ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தானுக்கான அமெரிக்காவின் சிறப்பு தூதர் ரிச்சர்ட் ஹால்புரூக்கின் பிரதிநிதிகள் இருவர் சமீபத்தில் ஆஃப்கானிஸ்தானிலுள்ள தலிபான் மற்றும் ஹிஸ்ப்-இ-இஸ்லாமி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் என சில பத்திரிகைகளில் செய்திகள் வெளியாயின.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியவுடன் அங்கு புதிய அரசை அமைப்பது தொடர்பாக இந்த பேச்சுவார்த்தை நடந்ததாகவும் பத்திரிகை செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தன. ஆனால் இந்தச் செய்தியை அமெரிக்கா மறுத்துள்ளது.

இதுக் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: "ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தானுக்கான சிறப்பு தூதர் ரிச்சர்ட் ஹால்புரூக்கின் பிரதிநிதிகள் தலிபான் தலைவர்களை சந்திக்கவில்லை. தலிபான் தலைவர்களோ அல்லது ஹிஸ்ப்-இ-இஸ்லாமி தலைவர்களோ ரிச்சர்ட் ஹால்புரூக்கின் பிரதிநிதிகளை சந்தித்ததாக சமீபத்தில் வெளியான செய்திகளில் உண்மை இல்லை" என்றார் அவர்.

மத்திய கிழக்கிலிருந்து வெளியாகும் பத்திரிகைகளில் இந்த செய்திகள் வெளியாகியிருந்தன. ரிச்சர்ட் ஹால்புரூக்கின் பிரதிநிதிகள் மைக்கேல் சிம்பல் (ஹாலந்து), ஜார்த் டாக்சோயின் (பிரிட்டன்) ஆகியோர் ஜமாத்-உத்-தவா அமைப்பு மற்றும் சல்பி தலிபான் அமைப்புகளின் தலைவர்களை ஆகஸ்ட்-17 மற்றும் 21-ம் தேதிகளில் சந்தித்ததாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த சந்திப்பை ஆஃப்கானிஸ்தானுக்கான முன்னாள் பாகிஸ்தான் தூதர் ருஸ்தம் ஷா முகமது ஏற்பாடு செய்திருந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "தலிபான்களுடன் பேச்சு நடத்தியதாக வெளிவந்த செய்திக்கு அமெரிக்கா மறுப்பு"

கருத்துரையிடுக