27 செப்., 2010

மத்திய அரசின் எட்டு அம்ச திட்டம் - யானைப் பசிக்கு சோளப்பொரி

கஷ்மீரில் அண்மையில் நடைபெற்ற எதிர்ப்புப் போராட்டங்கள் சாதாரணமானதாக இருந்திருந்தால் ஒருவேளை மத்திய அரசு அறிவித்துள்ள எட்டு அம்ச திட்டம் கஷ்மீரிகளை திருப்திப்படுத்தும் என்று கூறலாம். ஆனால், மதிப்புமிக்க நூற்றுக்கும் மேற்பட்ட மனித உயிர்களை பலிகொடுத்து கஷ்மீரிகள் நடத்திய போராட்டம் அவர்களின் ஆழமான சுதந்திரதாகத்தின் பிரதிபலிப்பாகும்.

கஷ்மீரில் நடந்த போராட்டத்தின் பொழுது கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் இழப்பீடு, சிறையிலடைக்கப்பட்ட மாணவர்களையும், இளைஞர்களையும் விடுதலைச் செய்வது, கல்வித்துறை மேம்பாட்டிற்காக 100 கோடிரூபாய் திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் தீர்மானம் கஷ்மீரிகளின் விஷயத்தில் வழக்கமில்லாத ஒன்றானதால் இதனை ரசனைக்குரிய அணுகுமுறை என்று வேண்டுமானால் கூறிக் கொள்ளலாம்.

ஆனால் கஷ்மீரில் போராட்டத்திற்கு தலைமை வகித்த ஹூர்ரியத் தலைவர்களிடம் எட்டு அம்ச திட்டம் செல்லும் முன்பே தோல்வியுறும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

இந்தியர்கள் கஷ்மீரிலிருந்து வெளியேற வேண்டும், கஷ்மீரை சர்வதேச சர்ச்சைக்குரிய பகுதியாக அங்கீகரிக்க வேண்டும் என்ற நிலைப்பாடுகள் மத்திய அரசால் எச்சூழலிலும் அங்கீகரிக்கப்படாது என்பது உறுதியான பொழுதிலும், கஷ்மீரில் ராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ள வரம்பற்ற அதிகாரத்தை கட்டுப்படுத்துவது, மாநிலத்திற்கு பகுதியளவிலான சுயாட்சி அதிகாரம் வழங்குவது தொடர்பாக எட்டு அம்ச திட்டம் முற்றிலும் மெளனத்தையே சாதிக்கும் சூழலில் இத்திட்டம் வெற்றிபெறும் என்பதில்
நம்பிக்கைக் கொள்ளாமலிருப்பதே சிறந்தது.

வளர்ச்சித் திட்டங்களுடன் வந்து கஷ்மீரிகளின் கண்ணில் மண்ணைத் தூவவேண்டாம் என்ற உண்மையை முன்னரே அறிவித்திருந்தார் ஹூர்ரியத் தலைவர் செய்யத் அலிஷா கிலானியை போன்றவர்கள் உறுதிப்பட கூறியிருந்தனர்.

மத்திய அரசின் புதிய திட்டத்தைக் குறித்து உமர் அப்துல்லாஹ் உற்சாகம் அடைந்துள்ளது உண்மைதான். எனினும், ஹூர்ரியத்தின் மிதவாதிகளோ, தீவிர கருத்தையுடையவர்களோ இதனைக் குறித்து ஆதரவாக கருத்து தெரிவிக்காத சூழலில் உமரின் அபிப்ராயம் கஷ்மீரிகளின் உணர்வின் வெளிப்பாடாக கருத இயலாது.

ராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ள வரம்பற்ற அதிகாரம் கஷ்மீரை மட்டும் பாதிக்கக்கூடிய விவகாரம் அல்ல. மணிப்பூரில் இரோம் ஷர்மிளா என்ற பரிதாபத்திற்குரிய பெண்மணி இக்காரணத்தினாலேயே 10 வருடங்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்கிறார். அவருடையை நிலை மிகமோசமாக உள்ளதாக கடைசியாக கிடைத்த தகவல் தெரிவிக்கிறது.

தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் கண்ணில் காணும் இளம் பெண்களையெல்லாம் பாலியல் வன்புணர்வு செய்வதற்கு எதிராகத்தான் ஷர்மிளா போராடி வருகிறார்.

கஷ்மீரில் இந்திய ராணுவத்தின் பாலியல் வெறிக்கு ஆளாகாத கஷ்மீரி பெண்களே இல்லை என கிலானியின் அறிக்கை சற்று மிகைப்படுத்தப்பட்டதாக தோன்றலாம். ஆனால் பரவலான பாலியல் வன்புணர்ச்சிகள் கஷ்மீரில் நடந்தது நிதர்சனமான உண்மையாகும்.

பதவி உயர்வையும், பதக்கம் பெறுவதையும் நோக்கமாகக் கொண்டு அப்பாவி மக்களை வேட்டையாடி அவர்களுடைய இறந்த உடல்களோடு ஏ.கெ-47 துப்பாக்கிகளை சேர்த்துவைத்து பயங்கரவாதிகளாக சித்தரித்து ராணுவம் நடத்திவரும் அட்டூழியங்களை கண்டும் காணாமல் நடிப்பதற்கு ஒரு ஜனநாயக நாட்டின் குடிமகனுக்கு எவ்வாறு சாத்தியமாகும்?

விமர்சகன்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மத்திய அரசின் எட்டு அம்ச திட்டம் - யானைப் பசிக்கு சோளப்பொரி"

கருத்துரையிடுக