28 அக்., 2010

அணு விபத்து நஷ்டஈடு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து

வியன்னா,அக்.28:அணு விபத்து நஷ்டஈடு ஒப்பந்தத்தில் இந்தியா புதன்கிழமை கையெழுத்திட்டது.

வியன்னாவில் உள்ள சர்வதேச அணுசக்தி நிறுவன அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் இந்த ஒப்பந்த கையெழுத்தானது. இன்னும் ஒரு வாரத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியா வருவதையொட்டியே இந்த ஒப்பந்தம் அவசர அவசரமாக கையெழுத்திடப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதை அடுத்து அமெரிக்க நிறுவனங்கள் இந்திய அணுசக்தித் துறையில் முதலீடு செய்ய முன்வரும் என்று தெரிகிறது.

மிகவும் சர்ச்சைக்கிடையே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அணுசக்தி நஷ்டஈட்டு சட்ட மசோதா மீது அமெரிக்க அணுசக்தி நிறுவனங்கள் சந்தேகம் தெரிவித்திருந்தன.

இந்திய அணுசக்தி நஷ்டஈட்டு சட்டத்திலிருந்து அமெரிக்க நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அளிக்கவே இந்தியா இப்போது அணு விபத்து நஷ்டஈடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த ஒப்பந்தப்படி சர்வதேச விதிகளின்படி நஷ்டஈடு அளித்தால் போதுமானது. இந்த ஒப்பந்தப்படி அணு உலைகளை அல்லது அணு மின் திட்டத்தை செயல்படுத்தி வரும் நிறுவனம் தர வேண்டிய நஷ்டஈட்டு நிதி காலவரையறை, சட்டப்படியாக எடுக்கக் கூடிய நடவடிக்கைகள், இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டதாக உள்ளது இந்த ஒப்பந்தம்.

இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அணுவிபத்து நஷ்டஈட்டு சட்டம் குறித்து சந்தேகங்களைத் தெரிவித்த அமெரிக்க நிறுவனங்கள் அதற்கு நிவாரணமாக இந்தியா அணு விபத்து நஷ்டஈடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று நெருக்கடி கொடுத்தன.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியாவுக்கு வருவதற்கு முன்னர் இப்பிரச்னைக்குத் தீர்வு ஏற்பட்டால்தான் அவரது இந்திய பயணத்தின் போது புதிய அணு மின் திட்டடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட முடியும் என்று எண்ணத்தில் இந்தியா அணு விபத்து நஷ்ட ஈடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட நிர்பந்திக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் உள்ள சர்வதேச அணுசக்தி நிறுவனத்தில் புதன்கிழமை நடந்த நிகழ்ச்சியில் அணு விபத்து நஷ்டஈட்டு ஒப்பந்தத்தில் அணுசக்தி நிறுவனத்தின் இந்தியப் பிரதிநிதியும் ஆஸ்திரிய நாட்டுக்கான இந்தியத் தூதருமான தினகர் குல்லார் கையெழுத்திட்டார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அணு விபத்து நஷ்டஈடு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து"

கருத்துரையிடுக