4 அக்., 2010

வண்ணமிகு கலைநிகழ்ச்சிகளுடன் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி துவங்கியது

புதுடெல்லி,அக்.4:19வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நேற்று மாலை கோலாகலமாக நடந்தது. ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர். மெகா சைஸ் பொம்மைகளுடன் நடந்த வண்ணமயமான கண்கவர் கலை நிகழ்ச்சிகள் காண்போரைக் கவர்ந்தது.

சுமார் 7ஆயிரம் பேர் பங்கேற்ற கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் டெல்லியில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. 14ம் தேதி வரை நடக்க உள்ள போட்டியால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

ஜவஹர்லால் நேரு மைதானத்தில் போட்டியின் தொடக்க விழா நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதையொட்டி, டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. முக்கியமான இடங்கள், போட்டிகள் நடக்கும் 11 மைதானங்கள், விளையாட்டு கிராமம் என எல்லா இடங்களிலும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தொடக்க விழா நடந்த ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நேற்று காலையே போலீசார் குவிக்கப்பட்டனர். மைதானம் முழுவதும் போலீசாரும், வெடிகுண்டு செயல் இழப்பு நிபுணர்களும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தி பாதுகாப்பை உறுதி செய்தனர்.நேற்று இரவு 7 மணிக்கு விழா தொடங்கியது.
இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உட்பட முக்கிய விருந்தினர்கள், விழா மேடைக்கு வந்தனர்.

இந்திய பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில், சங்கு ஊதப்பட்டது. இதையடுத்து முரசு மேளங்கள் கொட்டப்பட்டது. பல வாத்தியங்களும் இசைக்கப்பட்டன. 800 க்கும் அதிகமானோர் பல்வேறு வாத்தியங்களை வாசித்தனர். இதில் புதுச்சேரியை சேர்ந்த 7 வயது சிறுவன் கேசவ், தபலா வாசித்து அனைவரின் கவனத்தையும் கவர்ந்தான். இதன்பின், வரவேற்பு பாடலை ஹரிஹரன் தலைமையில் நூற்றுக்கணக்கான பள்ளிக் குழந்தைகள் பாடினர். மேலும் விருந்தினர்களை வரவேற்கும் வகையில் 1000க்கும் மேற்பட்ட குழந்தைகள், வணக்கம் செலுத்தி வரவேற்பது போல் வரிசையில் நின்றனர்.

வரவேற்பு பாடலுக்கு பின் வீரர்களின் அணிவகுப்பு தொடங்கியது. கடந்த காமன்வெல்த் போட்டியை நடத்திய (2006) ஆஸ்திரேலிய அணியினர், முதல் அணியாக அணிவகுத்து வந்தனர். ஆங்கில அகர வரிசைப்படி மற்ற அணிகள் தொடர்ந்து அணிவகுத்தன. போட்டியை நடத்தும் நாடான இந்திய அணி, கடைசியாக அணி வகுத்து வந்தது. பீஜிங் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா தலைமையில் வீரர், வீராங்கனைகள் அணி வகுத்து வந்தனர்.

அணிவகுப்பு முடிந்தபின், சர்வதேச ஒலிம்பிக் சங்க தலைவர் ரோகி, ஒருங்கிணைப்புக் குழு தலைவர் கல்மாடி, காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பின் தலைவர் பென்னல், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் பேசினர். இதன்பின், காமன்வெல்த் ஜோதி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்திலிருந்து ஜோதி கொண்டு வரப்பட்டு, இளவரசர் சார்லசிடம் உலக மல்யுத்த சாம்பியன் சுசில்குமார் வழங்கினார். இதையடுத்து, போட்டியை தொடங்கி வைப்பதாக சார்லஸ் அறிவித்தார். ஜனாதிபதி பிரதிபா பாட்டீலும், தானும் மகிழ்ச்சியுடன் தொடங்கி வைப்பதாக தெரிவித்தார். கலைநிகழ்ச்சிகளுக்கு பின் ஜோதி ஏற்றப்பட்டு போட்டி முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது. இன்று முதல் 14ம் தேதி வரை போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "வண்ணமிகு கலைநிகழ்ச்சிகளுடன் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி துவங்கியது"

கருத்துரையிடுக