சீனாவின் பூந்தோட்ட நகரமான குவாங்ஷுவில் ஆசியாவிலேயே மிகப்பெரிய வர்ணமயமான விளையாட்டுக் கோலாகலம் முடிவடைந்த பொழுது சீனப்பெண்கள் உரக்கக் கூறினார்கள்: 'ஸாய் ஜியான்! ஸாய் ஜியான்!' (பொருள்:குட்பை! குட்பை!).விளையாட்டுத் துறையைப் போன்றே விருந்தினர்களை உபசரிப்பதிலும், எடுத்த காரியத்தை கச்சிதமாக நிறைவேற்றுவதிலும், சுறுசுறுப்பிலும் தாங்கள் உலகில் எவருக்கும் சளைத்தவர்களல்லர் என்பதை சீனாவின் இளைய சமூகம் உலகிற்கு நிரூபித்த நாட்கள்தான் ஆசிய விளையாட்டுப் போட்டி நடந்த தினங்கள்.
மொழி அவர்களுக்கு ஒரு தடையே அல்ல
ஆங்கில மொழியின் மேதாவித்தனமோ இறுமாப்போ இன்றி விளையாட்டு உலகை தங்களால் அடக்கி ஆள முடியும் என்பதை நிரூபித்தது சீனா. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் எட்டாவது தடவையும் அனாயசமாக முதலிடத்தை பிடித்து தங்களின் திறமையை பிறநாடுகள் தொடுவதற்கு இன்னும் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிவரும் என்பதை எடுத்துக் கூறியது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் முடிவடையும் வேளையில் சீனாவின் கணக்கில் 199 தங்கம், 119 வெள்ளி, 98 வெண்கலம் ஆகியன வரவு வைக்கப்பட்டன. தங்கப் பதக்கங்களில் இரட்டை சதம் அடிக்க ஒன்று மட்டுமே குறைவு. கொரியாவை தவிர்த்தால் இதர நாடுகளின் ஒட்டுமொத்த பதக்கங்களை கூட்டினாலும் சீனாவை முந்தமுடியாது என்பதை எடுத்தியம்பியது.
மக்கள் தொகையில் சீனாவின் அடுத்த இடத்தில் இருக்கும் இந்தியா பதக்க வேட்டையில் சீனாவின் நான்கில் ஒரு பகுதி பதக்கங்களைக் கூட பெற முடியவில்லை என்பது துரதிர்ஷ்டவசமான செய்திதான். எவரெஸ்ட் சிகரத்தைப் போன்று விளையாட்டுத் துறையில் உச்சத்தில் உள்ளது சீனா. கடின முயற்சியும், முறையான பயிற்சியும் பெற்றாலே அதிக மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவால் சீனாவை நெருங்க முடியும் என்பது நிதர்சனமான உண்மை. என்றாலும் கூட, இந்தியா தனது நிலையை கடந்த போட்டிகளை விட மேம்படுத்தியுள்ளதை மறுக்கவியலாது.
காமன்வெல்த் போட்டிகளை நடத்திய நாடு என்ற நிலையில் பதக்க எண்ணிக்கையில் இந்தியாவுக்கு இரண்டாவது இடத்தை பிடிக்க முடிந்தது. காரணம், சீனா, கொரியா, ஜப்பான் போன்ற பலசாலிகள் இல்லாததுதான் என்பது வேறு விஷயம்.
புகார்களோ, முணுமுணுப்புகளோ இல்லாமல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்திக் காட்டியுள்ளது சீனா. இந்தியாவில் நடந்திருந்தால்? காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் உருவான முறைகேடுகளைக் குறித்த முணுமுணுப்புகள் இதுவரை அடங்கவில்லை. பலரின் பதவிகள் பறிபோயின. பலரின் சட்டைப் பைகளில் பணக்கட்டுகளும் தஞ்சமடைந்தன. இந்தியாவுக்கு மகத்தான வெற்றிகளைப் பெற்றுத்தந்த விளையாட்டு வீரர்களை பாராட்டும் வேளையில் விளையாட்டுத் துறையின் பொறுப்புகளை வகிப்போர் சீனாவிடமிருந்து படிக்க வேண்டிய பாடங்கள் நிறையவே இருக்கின்றன என்பதையும் நினைவூட்டுகிறோம்.
விமர்சகன்
0 கருத்துகள்: on "சீனா தரும் பாடங்கள்"
கருத்துரையிடுக