22 நவ., 2010

உரிய திருத்தங்களோடு பிரதமர் மீதான ஊழல் புகாரையும் விசாரிக்கும் லோக்பால் மசோதா விரைவில் தாக்​கல்

புதுடெல்லி,நவ.22:பிரதமர் மீதான ஊழல் புகாரையும் விசாரிக்கும் வகையில் உரிய திருத்தங்களோடு லோக்பால் மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும்.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னர் பிரதமர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை விசாரிக்க வழி ஏற்படும். இதற்கு முன்னர் இந்த மசோதாவில் பிரதமருக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. புதிய மசோதாவில் பிரதமரும் சேர்க்கப்பட்டுள்ளார்.

புதிய மசோதாவின்படி லோக்பால் அமைப்புக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியோ அல்லது உச்சநீதிமன்ற நீதிபதியோ தலைமை வகிக்க வேண்டும். லோக்பால் அமைப்பின் 2 உறுப்பினர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அல்லது உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்க வேண்டும்.

புதிய மசோதாப்படி பிரதமர் மீதான ஊழல் புகாரை விசாரிக்க மக்களவைத் தலைவர் அனுமதி அளிக்க வேண்டும். மக்களவைத் தலைவர் அனுமதி அளித்தால்தான் பிரதமர் மீதான புகாரை லோக்பால் விசாரிக்க முடியும்.

லோக்பால் விசாரணையிலிருந்து பிரதமருக்கு விலக்க அளிக்க வேண்டும். பிரதமர் சர்வ அதிகாரங்களை கொண்டவர் என்பதோடு அரசாங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார் என்று அரசியல் சட்ட மறு ஆய்வுக்கான தேசிய ஆணையம் பரிந்துரைத்திருந்தது. நாட்டின் ஸ்திரத்தன்மையின் அடையாளமாக பிரமதர் திகழ்கிறார். எனவே அவரது புகழை கெடுக்கும் வகையில் கொடுக்கப்படும் புகார்களால் இடையூறும் ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் அந்த ஆணையம் கூறியிருந்தது.

ஆனால் இப்போது பிரதமரையும் சேர்த்து விசாரிக்கும் வகையில் மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான புகார்களை இந்த லோக்பால் அமைப்பு விசாரிக்கும். ஊழல் தொடர்பான விசாரணையில் பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் மட்டுமின்றி மற்றவர்களையும் விசாரிக்கும்.

லோக்பால் அமைப்புக்கு நீதிபதிகளை நியமிக்க ஒரு கமிட்டி உருவாக்கப்பட வேண்டும். அந்த கமிட்டியில் குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர், மக்களவைத் தலைவர் உள்துறை அமைச்சர், சட்ட அமைச்சர், மாநிலங்களவை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்கள் அவை முன்னவர் ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெற விதிகளில் வகை செய்யப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதிகளையோ அல்லது உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியையோ லோக்பால் நீதிபதியாக நியமிக்க வேண்டுமானால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் அனுமதி வேண்டும்.

லோக்பால் அமைப்பின் தலைவர், உறுப்பினர் பதவிகளின் காலம் மூன்று ஆண்டுகள் அல்லது 70 வயது வரும் வரை. இவர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவார்கள்.

விசாரணையை முறையாக மேற்கொள்ளவில்லை அல்லது பாரபட்சமாக நடந்து கொண்டால் அவரைப் பதவி நீக்கம் செய்ய குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது.

லோக்பால் மசோதா முதன் முதலில் 1969-ல் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை. அதைத் தொடர்ந்து 1971, 1977, 1985, 1989, 1996, 1998, 2001, 2005, 2008 ஆகிய ஆண்டுகளில் கொண்டு வரப்பட்டுள்ளது. இப்போது பிரதமரையும் விசாரிக்கும் அதிகாரத்துடன் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "உரிய திருத்தங்களோடு பிரதமர் மீதான ஊழல் புகாரையும் விசாரிக்கும் லோக்பால் மசோதா விரைவில் தாக்​கல்"

கருத்துரையிடுக