28 நவ., 2010

நிலமோசடி:எடியூரப்பாவுக்கு லோகாயுக்தா நோட்டீஸ்

பெங்களூர்,நவ.28:அரசு நிலத்தை தனது மகன்களுக்கு சட்ட விரோதமாக அளித்த கர்நாடக மாநில பா.ஜ.க முதல்வர் எடியூரப்பாவுக்கு லோகாயுக்தா நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தெரிவித்துள்ளார்.

மதசார்பற்ற ஜனதாளம் அளித்த புகாரைத் தொடர்ந்துதான் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

முதல்வர் எடியூரப்பாவும், அவரது குடும்ப உறுப்பினர்களும் ரூ.5 ஆயிரம் கோடிக்கு நில மோசடிச் செய்ததாக எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டின. தினமும் நிலமோசடி விவரத்தை மதசார்பற்ற ஜனதாதளம் அம்பலப்படுத்தி வருகின்றது. இம்மோசடித் தொடர்பாக ம.த.ஜவின் செய்தித் தொடர்பாளர் தத்தா லோகாயுக்தாவிடம் 2 முறை புகார் செய்துள்ளார். அவை மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நிலமோசடி தொடர்பாக விசாரிக்க உயர்நீதிமன்ற ஓய்வுப்பெற்ற நீதிபதி பத்மராஜ் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க அரசு உத்தரவிட்டிருந்தது. ஒரு வழக்கில் இரு அமைப்புகள் விசாரிப்பது சட்டவிதிகளுக்கு முரணானது என்று நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கருத்து தெரிவித்திருந்தார். அவருக்கும் அரசுக்குமிடையே உரசல் ஏற்பட்டுள்ளது.

லோகாயுக்தா மீது நம்பிக்கை இல்லையென்றால் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைப் போன்று இங்கும் அவ்வமைப்பை கலைத்து விடலாம் என நீதிபதி தெரிவித்திருந்தார்.

நில ஊழல் தொடர்பாக லோகாயுக்தாவிடம் 14 புகார்கள் அளிக்கப்பட்டிருந்தன. அவற்றில் 8 வழக்குகள் எந்த முகாந்திரமும் இல்லாததால் தள்ளுபடிச் செய்யப்பட்டன. 6 வழக்குகள் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டன என்று கூறிய நீதிபதி சந்தோஷ் ஹெக்டே நான் எக்கட்சியினருக்கும் ஆதரவாளன் அல்ல, இதற்கு முன்பு நான் பா.ஜ.கவுக்கு ஆதரவாளன் எனக் கூறப்பட்டது, இப்பொழுது எடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை விசாரிப்பதால் காங்கிரஸ் ஆதரவாளன் என கூறுகின்றனர், எடியூரப்பாவுக்கு எதிரானவன் என்றால் நான் ஏன் 8 வழக்குகளை தள்ளுபடிச் செய்யவேண்டும் என கேள்வி எழுப்பினார்.

6 வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதில் ஒன்றிற்கு மட்டுமே எடியூரப்பாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். விசாரணை நடத்துவதில் எனக்கு முன் நிபந்தனைகள் எதுவும் இல்லை. பொறுப்பை நிறைவேற்றுவதே எனது வேலை. என பா.ஜ.க எம்.எல்.ஏக்களின் விமர்சனத்திற்கு நீதிபதி சந்தோஷ் ஹெக்டே பதிலளித்தார்.

லோகாயுக்தா சமர்ப்பித்த பல்வேறு அறிக்கைகளுக்கு அரசு எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என நீதிபதி சந்தோஷ் ஹெக்டே மேலும் தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "நிலமோசடி:எடியூரப்பாவுக்கு லோகாயுக்தா நோட்டீஸ்"

கருத்துரையிடுக