29 நவ., 2010

அப்துல் நாஸர் மஃதனி:சாட்சிகளிடம் பேட்டியெடுத்த டெஹல்கா பெண் நிரூபர் மீது கர்நாடகா போலீஸ் வழக்கு

கோழிக்கோடு,நவ.29:பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கேரள மாநில பி.டி.பி கட்சித் தலைவர் அப்துல்நாஸர் மஃதனிக்கு எதிராக சாட்சியளித்ததாக கூறப்படும் நபர்களை நேரில் சந்தித்து பேட்டியெடுத்த டெஹல்கா பத்திரிகையின் கேரள பெண் நிரூபர் ஷாஹினா மீது கர்நாடகா மாநில குடகு போலீசார் வழக்கு பதிவுச் செய்துள்ளனர்.சாட்சிகளை மிரட்டியதாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு பெங்களூரில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் அப்துல் நாஸர் மஃதனியை 31-வது குற்றவாளியாக இணைத்து கைதுச் செய்ய கர்நாடகா போலீசார் ஆதாரமாக காட்டியது குடகு பகுதியைச் சார்ந்த கே.கே.யோகானந்த் மற்றும் கெ.ரஃபீக் ஆகிய இருவரின் சாட்சி மொழிகளாகும்.

குண்டுவெடிப்புக் குறித்து திட்டம் தீட்டுவதற்காக இவ்வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள தடியன்றவிட நஸீர் குடகு பகுதியில் லக்கேரி எஸ்டேட்டில் வைத்து நடத்தியதாக கூறப்படும் ரகசியக் கூட்டத்தில் அப்துல்நாஸர் மஃதனி பங்கேற்றார் என இவர்கள் சாட்சியம் அளித்திருந்தனர் என போலீஸ் கூறுகிறது.

இவ்வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டுதான் கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி பெங்களூர் விரைவு செசன்ஸ் நீதிமன்றம் மஃதனியின் ஜாமீன் மனுவை தள்ளுபடிச் செய்தது.

ஆனால் சாட்சிகளை நேரில் கண்டு பேட்டியெடுத்த டெஹல்காவின் பெண் நிரூபரிடம் யோகான்ந்தும், ரஃபீக்கும் தாங்கள் அப்துல் நாஸர் மஃதனிக்கு எதிராக சாட்சியம் அளித்ததாக கூறுவதை மறுத்துள்ளனர். இதனைக் குறித்த ஆய்வுக் கட்டுரை டெஹல்காவின் புதிய வெளியீட்டில் வெளியாகியுள்ளது.

பா.ஜ.கவைச் சார்ந்த யோனாந்திற்கு அப்துல்நாஸர் மஃதனியின் மீது சுமத்தப்பட்டுள்ள வழக்கில் தான் சாட்சி என்பதுக்கூட தெரியாது என ஷாஹினா தெரிவிக்கிறார்.

லக்கேரி எஸ்டேட்டில் பணிபுரிந்து வந்த தன்னை போலீசார் கைதுச் செய்து 15 தினங்கள் சித்திரவதைச் செய்ததாக யோனாந்த் தெரிவிக்கிறார். மின்சார அதிர்ச்சி உள்ளிட்ட சித்திரவதைகளை செய்ததால் அதனை தாங்கமுடியாமல் தான் தான் அப்துல் நாஸர் மஃதனிக்கு எதிராக வாக்குமூலம் அளித்ததாக தெரிவிக்கிறார் யோகானந்த்.

வாக்குமூலம் அளிக்காவிட்டால் வழக்கில் சிக்கவைப்போம் என போலீஸ் மிரட்டியதாக யோகானந்த் தெரிவிக்கிறார். கடந்த நவம்பர் 16 ஆம் தேதி ஷாஹினா தனது இரு உதவியாளர்களுடன் கர்நாடகா மாநிலத்தில் ஹாஸன் மாவட்டத்தில் ரகசிய இடத்தில் வைத்து இன்னொரு சாட்சியான ரஃபீக்கை சந்திக்கிறார். இத்தகவலை அறிந்த ஹொஸத் தொட்டா பகுதி வட்டார போலீஸ் ஆய்வாளர் தலைமையிலான குழு இத்தகைய செயல்பாடுகள் இங்கு கூடாது என தடுத்துள்ளனர். அப்பொழுது அவ்விடத்தை விட்டு நகர்ந்த ஷாஹினா தலைமையிலான நிரூபர் குழு பின்னர் வேறொரு வாகனத்தில் சென்று ரஃபீக்கை சந்தித்துள்ளனர். இரவு திரும்பிவரும் வழியில் வைத்து ஃபோனில் தொடர்புக் கொண்ட வட்டார போலீஸ் ஆய்வாளர், நீ ஒரு தீவிரவாதியா? எனக் கேட்டதாக ஷாஹினா தெரிவிக்கிறார்.

தனக்கெதிராக வழக்கு பதிவுச் செய்ததுக் குறித்து அறிவிப்பு ஒன்றும் இதுவரை கிடைக்கவில்லை என ஷாஹினா தேஜஸிடம் தெரிவித்துள்ளார். இது ஒரு தனிப்பட்ட நபருக்கெதிரான நடவடிக்கையாக தான் கருதவில்லை எனவும் போலீசாரின் பொய்க் கதைகளுக்கு எதிராக செயல்படும் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் எதிரான எச்சரிக்கை இது எனவும் ஷாஹினா தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அப்துல் நாஸர் மஃதனி:சாட்சிகளிடம் பேட்டியெடுத்த டெஹல்கா பெண் நிரூபர் மீது கர்நாடகா போலீஸ் வழக்கு"

கருத்துரையிடுக