27 நவ., 2010

அருந்ததிராய் மீது வழக்குத் தொடர நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி,நவ.27:கஷ்மீர் ஒருபோதும் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதியாக இருக்கவில்லை என்பது வரலாற்று ரீதியான உண்மை என பகிரங்கமாக தெரிவித்த பிரபல எழுத்தாளர் அருந்ததிராய், ஹுர்ரியத் மாநாட்டுக் கட்சியின் தலைவர் செய்யத் அலிஷா கிலானி உள்பட 5 பேர்கள் மீது வழக்குத் தொடர டெல்லி மெட்ரோபாலிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசவிரோத உரை நிகழ்த்தியதாக குற்றஞ்சாட்டி சமர்ப்பிக்கப்பட்ட மனுவை பரிசீலித்த நீதிமன்றம் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.

பேராசிரியர் எஸ்.ஏ.ஆர்.கிலானி, ஜம்மு கஷ்மீர் பல்கலைக்கழக பேராசிரியர் ஷவ்கத் ஹுஸைன், மாவோயிஸ்டு ஆதரவு தலைவர் வரவரராவ் ஆகியோர் மீதும் வழக்குத் தொடர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கை பதிவுச்செய்து விசாரணையை உடனடியாக துவக்க வேண்டுமெனவும், இம்மனுவை மீண்டும் விசாரணைக்கு எடுக்கும் வருகிற ஜனவரி ஆறாம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தேசவிரோத உரை நிகழ்த்தியதாக கண்டறிய முடியாததால் இவர்களுக்கெதிராக வழக்கு தொடர இயலாது என்று அறிக்கையை சமர்ப்பித்த டெல்லி போலீசாரின் கூற்றை நீதிமன்றம் தள்ளுபடிச் செய்தது.

முதல் தகவல் அறிக்கை அளிக்க முடியாது எனவும், நீதிமன்றம் உகந்த முடிவை எடுக்கலாம் எனவும் போலீஸ் தெரிவித்தது. ஆனால், முதற்காட்சியை(prima faciee) பொறுத்தவரை தெளிவான ஆதாரமிருப்பதாகவும், விரிவான விசாரணை தேவை எனவும் மெட்ரோபாலிடன் மாஜிஸ்ட்ரேட் நவித குமாரி பாகா தெரிவித்தார்.

'கஷ்மீருக்கு சுதந்திரமே ஒரே வழி' என்ற தலைப்பில் கடந்த மாதம் டெல்லியில் நடந்த கருத்தரங்கத்தில் ஆற்றிய உரைகள் விவாதத்தை கிளப்பியிருந்தன. இக்கருத்தரங்கில் ஆற்றிய உரைகள் சட்டவிரோதம் எனவும், 156(3) பிரிவின் படி இக்கருத்தரங்கில் உரை நிகழ்த்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென சுசீல் பண்டிட் என்ற நபர் கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி நீதிமன்றத்தை அணுகினார்.

இந்தியாவிற்கு விரோதமாக நடத்தப்பட்ட கருத்தரங்கில் பங்கெடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் அரசு தோல்வியுற்றதாக அவர் தனது மனுவில் குற்றஞ்சாட்டியிருந்தார்.

தொடர்ந்து நீதிமன்றம் டெல்லி போலீஸிடம் விளக்கம் கேட்டது. வழக்கு பதிவுச்செய்ய முடியாது என்ற சூழ்நிலை அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறிய நீதிமன்றம் வழக்கு பதிவுச்செய்ய உத்தரவிட்டுள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அருந்ததிராய் மீது வழக்குத் தொடர நீதிமன்றம் உத்தரவு"

கருத்துரையிடுக