24 நவ., 2010

ஸ்பெக்டர்ம் ஊழல்: பாராளுமன்றக் கூட்டுக்குழு விசாரிக்கட்டும்

பா.ஜ.கவும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் இரண்டாவது தலைமுறை அலைக்கற்றை ஊழல் என அழைக்கப்படும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலைக் குறித்து பாராளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை வேண்டும் எனக்கோரி கடந்த பல நாட்களாக பாராளுமன்றத்தை அமளி துமளியாக்கி வருகின்றன.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இரண்டாவது பெரிய கட்சியான திரிணாமுல் காங்கிரஸும், ராஷ்ட்ரீய ஜனதாதளம், சமாஜ்வாதி உள்ளிட்ட ஆளுங்கட்சியா? எதிர்கட்சியா? என தங்களுக்கே தெரியாத பல கட்சிகளும் பாராளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கோரி பிரதமருக்கு நிர்பந்தம் அளித்துவருகின்றன.

லைசன்ஸ் ராஜ் என்ற அதிகாரவர்க்க ஆட்சியின் முட்டாள்தனமான கொள்கைகளுக்கு முடிவுக்கட்டப் போவதாக கூறி புதிய தாராளமயமாக்கல் கொள்கை இந்தியாவில் அடியெடுத்து வைத்தது.

சுதந்திர வியாபார சந்தை என்ற கபட நாடகத்தின் பின்னணியில் சில பணக்கார குடும்பங்கள் நாடு முழுவதையும் தங்கள் வசப்படுத்துதவற்கான முயற்சிகளை துவங்கி இருபது ஆண்டுகளாகின்றன.

இஸ்லாமிய தீவிரவாதிகளையும், கனிமவளங்களை தொட அனுமதிக்காத மாவோயிஸ்டுகளையும் இரும்புக்கரம் கொண்டு அடக்கி ஒடுக்கவில்லை என கவலைப்படும் வியாபார நோக்கங்கொண்ட ஊடகங்கள் கொண்டாடிய கார்ப்பரேட் முதலைகளின் ஊழல் லீலைகள் சமீபத்தில் வெளியாகியுள்ளன.

இரண்டாவது தலைமுறை அலைக்கற்றை ஊழலில் ஏறத்தாழ ஒன்றேமுக்கால் லட்சம் கோடி வரலாறு காணாத ஊழலுக்கு சொந்தக்காரரான ஆ.ராசாவின் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தானையத் தலைவர் கலைஞர் கருணாநிதியும் அவரின் புத்திரர்களும், புத்திரிகளும், மருமக்களும் இணைந்து தமிழக முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான பெரும் ஊடக-வியாபார சாம்ராஜ்யத்தை உருவாக்கி வருகின்றார்கள்.

ஏமாந்த வாக்காளர்களுக்கு நோட்டைக் கொடுத்தும், எதிர்ப்பவர்களுக்கு வேட்டு வைத்தும் எப்படியாவது அடுத்த ஆட்சியை நிலை நிறுத்துவதில்தான் கருணாநிதி குடும்பம் குறியாக உள்ளது.

காங்கிரஸின் கரம் பிடித்தாவது ஆட்சியை பிடித்து ஊழல் சாம்ராஜ்யத்தை தன் வசப்படுத்தலாம் என கனவுக் காணும் ஜெயா கருணாநிதிக்கு எதிராக பெருந்திரள் மக்களை திரட்டி ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றார்.

தமிழகத்தில் எந்த ஆட்சி வந்தாலும் ஊழல் சாம்ராஜ்ஜியத்திற்கு ஓய்வு இருக்கப் போவதில்லை என்பதே உண்மை. காங்கிரஸ் அரசின் ஊழலை எதிர்த்து போர்க்கொடி உயர்த்தும் பா.ஜ.கவின் கடந்த கால ஆட்சியில் வீசிய ஊழல் முடை நாற்றத்தை நாட்டு மக்கள் மறந்துவிட்டார்கள் என மமதையில் அக்கட்சியின் தலைவர்கள் திரிகின்றனர்.

போதாக்குறைக்கு, பா.ஜ.கவின் கர்நாடகா தவப் புதல்வர் எடியூரப்பா தனது மகன்களுக்கு அரசாங்க நிலங்களை தாரைவார்த்துக் கொடுத்த ஊழல் புகாரால் திக்குமுக்காடிப் போயுள்ளது. அதுமட்டுமல்ல, பா.ஜ.கவின் அரசின் அங்கத்துவம் வகிக்கும் பெல்லாரி ரெட்டி சகோதரர்கள் நடத்திய கோடிக்கணக்கான ரூபாய் மோசடியும் எவராலும் எளிதில் மறந்துவிட முடியாத ஒன்று.

பரிசுத்தம் வேடம் போடும் கம்யூனிஸ்ட் கட்சியோ பிரபலமான லாவ்லின் ஊழல் வழக்கில் கேரள மாநிலத் தலைவரை பாதுகாப்பதிலேயே குறியாக உள்ளது.

ஊழல் புகார்களைக் குறித்து எந்த குழு விசாரித்தாலும், பொருளாதார-அரசியல் கொள்கைகளில் போதிய மாற்றங்களை ஏற்படுத்தாவிட்டால், மீண்டும் பாராளுமன்றம் முடங்குவதைத் தவிர இத்தகைய கமிட்டிகளின் விசாரணையால் என்ன பயன் விளைந்துள்ளது?

கடந்த 1991 ஆம் ஆண்டு பங்குச்சந்தை ஊழல் குறித்து அன்று பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை மேற்கொண்டிருந்தது. விசாரணையின் முடிவில் சுவையான பல சிபாரிசுகளை முன்வைத்தது பாராளுமன்ற கூட்டுக்குழு. ஆனால், அதன் பிறகுதான் இந்தியாவின் விவசாய-வியாபார குத்தகைதாரர்கள் மிக பெரிய அளவிலான ஊழல்களில் ஈடுபட்டனர். அதுவும் பங்குச் சந்தைகளின் மூலமாகவே.

ஆனால், ஸ்பெக்ட்ரம் ஊழலைக் குறித்து பாராளுமன்றக் கூட்டுக்குழு விசாரிக்கட்டும். காரணம், அப்பாவிகளான இந்திய குடிமக்களுக்கு ஜனநாயகம் நடைமுறையில் உள்ளது என்ற திருப்தியுடன் தூங்கலாம் அல்லவா?

விமர்சகன்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஸ்பெக்டர்ம் ஊழல்: பாராளுமன்றக் கூட்டுக்குழு விசாரிக்கட்டும்"

கருத்துரையிடுக