21 டிச., 2010

அடுத்த 10 வருடங்களுக்கு ஆட்சி மோகம் பா.ஜ.கவுக்கு வேண்டாம் - ப.சிதம்பரம்

புதுடெல்லி,டிச.21:அடுத்த 10 வருடங்களுக்கு பா.ஜ.கவுக்கு அதிகாரம் கிடைக்குமென்ற பேராசை வேண்டாமென்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநாடு டெல்லி புறநகரில் நடந்து வருகிறது. இம்மாநாட்டில் கலந்துக்கொண்டு உரைநிகழ்த்திய ப.சிதம்பரம் கூறியதாவது: 'இன்னும் பத்து வருடத்திற்கு, ஏன் அதற்கு மேலும் கூட ஆகலாம், பாஜகவால் ஆட்சியைப் பிடிக்க முடியாது. அடுத்தடுத்து வரப் போவது காங்கிரஸ் ஆட்சி அல்லது காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிதான்.

காங்கிரஸ் கட்சி ஆளும் கட்சியாக உள்ளது. எனவே அது நன்கு திட்டமிட்டு செயல்பட வேண்டியது அவசியம். உள்ளடங்கிய வளர்ச்சிக்கு காங்கிரஸ் அதிக கவனம் செலுத்த வேண்டும். அனைவருக்கும் நல்ல சுகாதார வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அனைவருக்கும் கல்வி கிடைக்க வகை செய்ய வேண்டும். ஒவ்வொரு குடிமகனும், சிறந்த வாழ்க்கையைப் பெற உதவ வேண்டும்.

காங்கிரஸ் மீது ஏன் பாஜக இப்படி காட்டமாகவே இருக்கிறது என்பது எனக்குப் புரியவில்லை. ஒருவேளை மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் கட்சியாகவும், மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படும் கட்சியாகவும் காங்கிரஸ் இருப்பதால் அவர்களுக்கு கோபம் வரலாம் என்று கருதுகிறேன்.

நாட்டை முழுமையாக ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சி புரியக் கூடிய தகுதி படைத்த ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே. பாஜகவுக்கு மக்கள் வாய்ப்பளித்தார்கள். ஆனால் அது தோல்வி அடைந்து விட்டது. இதனால்தான் காங்கிரஸைப் பார்த்து பாஜக பொறாமைப்படுகிறது. எப்படி ஆட்சி புரிய வேண்டும் என்பது காங்கிரஸுக்கு மட்டும்தான் தெரியும். எப்படி மீண்டும் ஆட்சிக்கு வருவது என்பதும் காங்கிரஸுக்கு மட்டும்தான் தெரியும்.

காங்கிரஸ் கட்சி மட்டுமே நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லதைச் செய்வதாலும், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வளர்ச்சியைக் கொண்டு வர முடிவதாலும், காங்கிரஸ் மீது பாஜக கோபத்துடன் இருக்கிறது.

நான் பிரதமர் மன்மோகன் சிங்கை இந்த இடத்தில் கேட்டுக் கொள்கிறேன், ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒருமுறை அமைச்சர்களின் செயல்பாடுகள், அவர்களது துறையின் சாதனைகளை ஆய்வு செய்யுங்கள். அதேபோல காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அரசிடமிருந்து அறிக்கையைக் கேட்டுப் பெற வேண்டும்.

3 மாதத்தில் நீங்கள் செய்தது என்ன என்று ஒவ்வொரு அமைச்சரையும் பிரதமர் கேட்க வேண்டும். அதேபோல ஆறு மாதத்தில் நீங்கள் சாதித்தது என்ன என்று அரசிடம் சோனியா காந்தி கேட்க வேண்டும்.

சில மாநிலங்களுக்கு எங்களுக்கு நிதிப் பற்றாக்குறை இருப்பதாக கூறுகிறார்கள். அது உண்மையல்ல. 2 நாட்ளுக்கு முன்பு அனைத்து மாநிலங்களிடமும் மொத்தமாக ரூ.95,398 கோடி கையிருப்பு உள்ளதாக கணக்கிடப்பட்டது. இது மிகப் பெரிய பணம். எனவே எந்த அரசாவது எங்களிடம் பணம் இல்லை என்று சொன்னால், எங்களிடமும் பணம் இல்லை என்று மத்திய அரசு கூற வேண்டும். இன்னும் வெளிப்படையாக சொல்வதாக இரு்நதால், அப்படிச் சொல்லும் அரசை நீங்கள் (பிரதமர்) சற்றும் நம்பாதீர்கள்.

அரசுகளிடம் போதிய பணம் உள்ளது. அதை எப்படிச் செலவிட வேண்டும் என்பதும் அவர்களுக்குத் தெரியும். இல்லாவிட்டால், அதை எப்படிச் செலவிட வேண்டும் என்பதையும் அவர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது அவர்கள் 6.4 சதவீத வளர்ச்சியை எட்டினார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி, பெரும் பொருளாதார மந்த நிலை காணப்பட்டபோதிலும் கூட 6.7 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. எனவே இதுதான் உண்மையான சாதனை என்றார் ப.சிதம்பரம்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அடுத்த 10 வருடங்களுக்கு ஆட்சி மோகம் பா.ஜ.கவுக்கு வேண்டாம் - ப.சிதம்பரம்"

கருத்துரையிடுக