14 டிச., 2010

இரத்தக் குழாய் அடைப்பை நீக்க நவீன லேசர் சிகிச்சை

லண்டன்,டிச.14:இரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்குவதற்கு, அதிநவீன லேசர் சிகிச்சையை பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

உலக அளவில் இரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்புகளால், பாதிக்கப்படும் லட்சக்கணக்கானோர் திடீர் மரணங்களை தழுவும் ஆபத்துடன் வாழ்கின்றனர்.இரத்த குழாய் அடைப்பை நீக்குவதற்கு, பல சிகிச்சை முறைகள் உள்ளன. இருப்பினும், நிரந்தர தீர்வுக்கு, பை-பாஸ் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.ஆனால், இந்த அறுவை சிகிச்சை செய்ய பல மணி நேரம் தேவைப்படும். ஆபத்துகளும் அதிகம். நோயாளிகள் குணமாக நீண்ட காலம் தேவைப்படுகிறது.

இந்த நிலையில், இரத்த குழாய் அடைப்பை உடனடியாக நீக்கும் வகையில், புதிய லேசர் சிகிச்சையை பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ள பகுதிக்குள், 'கதீட்டர்’ என்ற நுண்ணிய குழாயை செலுத்தி, அதன் வழியாக சக்தி வாய்ந்த லேசர் கற்றைகள் பாய்ச்சப்படும்.வெப்பம் காரணமாக அடைப்பு ஏற்பட்டுள்ள, பகுதிக்குள் படிந்திருக்கும் தேவையில்லாத படிமங்கள் பொடிப் பொடியாக சிதறி விடும். இந்த லேசர் சிகிச்சைக்கு, 'எக்சைமர்’ என பெயரிடப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம், இரண்டு நோயாளிகளுக்கு இந்த லேசர் சிகிச்சை அளிக்கப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது.இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்தது. மேலும், அந்த நோயாளிகள் சிகிச்சை அளிக்கப்பட்ட மறு நாளே, மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.இந்த சிகிச்சை மூலம் நோயாளிகள் ஆச்சர்யமளிக்கும் வகையில் மிக விரைவில் பூரண குணமடைந்தனர்.

இந்த சிகிச்சைக்கான இறுதி கட்ட பரிசோதனைகள் நடந்து வருகின்றன. இந்த அதிநவீன லேசர் சிகிச்சை நடைமுறைக்கு வந்தால், இரத்தக் குழாய் அடைப்பால், பாதிக்கப்படும் லட்சக்கணக்கானோர் பயனடைய வழி பிறக்கும்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இரத்தக் குழாய் அடைப்பை நீக்க நவீன லேசர் சிகிச்சை"

கருத்துரையிடுக