29 டிச., 2010

ஆப்கானில் அசைக்கமுடியாத சக்தியாக மாறும் தாலிபான்கள் - ஐ.நா வடைபடம்

காபூல்,டிச.2:ஆப்கானிஸ்தானில் நாளுக்கு நாள் தலிபான்களின் கை ஓங்கி வருவதால், அங்கு பாதுகாப்புச் சூழல் மோசமடைந்து வருவதாகத் தெரியவந்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு நிலைமை தொடர்பாக ஐ.நா. இரு வரைபடங்களை தயாரித்து ரகசியமாக வைத்துள்ளது.

இந்த வரைபடங்கள் ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புச் சூழல் மோசமடைந்து வருவதை தெளிவுபடுத்தியுள்ளன என்று 'வால் ஸ்ட்ரீட்' பத்திரிகை கூறியுள்ளது.

ஒரு வரைபடம் இந்த ஆண்டின் துவக்கத்தில் அங்கு நிலவிய பாதுகாப்பை பற்றியது. மற்றொரு வரைபடம் இந்த ஆண்டின் அக்டோபர் மாதத்தில் அங்கு நிலவியப் பாதுகாப்பு குறித்தது.

இதில் முதல் வரைபடம், ஆப்கானிஸ்தானின் தென் பகுதியில் தலிபான்கள் கை தொடர்ந்து ஓங்கி வருவதையே காட்டுகிறது. ஆனால் வட, கிழக்குப் பகுதிகளில் 16 மாவட்டங்கள் நேட்டோ பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டுக்கு கீழ் இருப்பதை உறுதி செய்கிறது.

ஆனால் அக்டோபர் மாத வரைபடத்தில் நிலைமை தலைகீழாக உள்ளது. தென்பகுதியில் 90 சதவீதம் தலிபான்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஓரளவுக்கு நேட்டோ படைகளின் ஆதிக்கத்தில் இருந்து வந்த வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உள்ள 16 மாவட்டங்களையும் தலிபான்கள் தங்கள் வசம் கொண்டுவர தீவிர முயற்சி மேற்கொண்டு, அதில் அவர்கள் முன்னேற்றம் கண்டுவருவதும் தெளிவாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிரான நேட்டோ படையின் நடவடிக்கைக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது என்று அமெரிக்கா கூறிவருகிறது.

2014-ல் அந்நாட்டை காக்க வேண்டிய பணியை அந்நாட்டு பாதுகாப்புப் படையிடம் முழுமையாக ஒப்படைத்துவிட்டு நேட்டோ படை வாபஸ் பெறப்படும் என்றும் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துவிட்டார்.

ஆனால் இதுபோன்ற நிலையில், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அசைக்க முடியாத சக்திகளாக உள்ளனர். அவர்கள் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்றனர் என்பதை ஐ.நா. வரைபடங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதனால் ஆப்கானிஸ்தானின் உண்மையான பாதுகாப்பு நிலவரம்தான் என்ன என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

அமெரிக்கா சொல்வதுபோல் தலிபான்கள் உண்மையிலேயே ஒடுக்கப்பட்டுள்ளனரா, இல்லை ஐ.நா. வரைபடம் சுட்டிக்காட்டியுள்ளது போல் அவர்கள் தொடர்ந்து அசைக்க முடியாத சக்திகளாக உள்ளனரா என்ற வினாவும் எழுந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த 9 ஆண்டுகளாகத் தலிபான்களுக்கு எதிரான நடவடிக்கையை அமெரிக்கா தலைமையிலான அந்நிய ஆக்கிரமிப்பு படை முடுக்கிவிட்டுள்ளது. அங்கு சுமார் 1,40,000 வீரர்கள் தலிபான்களுக்கு எதிரான அதிரடி வேட்டையின் பெயரால் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஆப்கானில் அசைக்கமுடியாத சக்தியாக மாறும் தாலிபான்கள் - ஐ.நா வடைபடம்"

கருத்துரையிடுக