5 டிச., 2010

பருவநிலை மாறுபாடு - அமெரிக்காவின் செயல்பாட்டிற்கு இந்தியா கடும் அதிருப்தி

கேன்கன்(மெக்ஸிகோ),டிச.5:பருவநிலை மாறுபாட்டைத் தடுப்பது தொடர்பான ஒப்பந்த விஷயத்தில் அமெரிக்காவின் செயல்பாடுகள் குறித்து இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ளது.

பருவநிலை மாறுபாடு பிரச்னை தொடர்பாக ஐ.நா. ஏற்பாடு செய்துள்ள சர்வதேச அளவிலான பேச்சுவார்த்தை மெக்ஸிகோவின் கேன்கன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் மத்திய சுற்றுச்சுழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கலந்து கொண்டுள்ளார்.

பருவநிலை மாறுபாடு பிரச்னையைத் தீர்ப்பதற்காக கொடுப்பதாக உறுதி அளித்த தொகையை அளிக்க அமெரிக்கா தாமதம் காட்டி வருகிறது.

கேன்கனில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் இது தொடர்பாக கூறியது:

விரைவாக பணத்தை கொடுத்து உதவுவதன் மூலம்தான் சுற்றுச்சுழல் சீர்கேட்டுக்கு எதிராக, பின்தங்கிய நாடுகள் நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும். தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது, இதன் தொடர்விளைவாக புவி வெப்பமடைந்து, பருவநிலை மாறுபாடு பிரச்னை ஏற்பட்டுகிறது. இதனைத் தடுக்க பின்தங்கிய நாடுகளுக்கு நவீன தொழில்நுட்பத்தை வழங்க வேண்டும். இதற்கு பணம் கொடுப்பதாக அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் ஒப்புக்கொண்டன.

3 ஆண்டுகளில் 30 பில்லியன் டாலர்கள் தருவதாக அமெரிக்கை ஒப்புக்கொண்டிருந்தது. ஆனால், முதல் ஆண்டில் இதுவரை 1.8 பில்லியன் டாலர்கள் மட்டுமே தந்துள்ளது. இது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. உலகில் கரியமில வாயு வெளியீட்டில் அமெரிக்காவின் பங்கு மட்டும் 27 சதவீதம்.

அமெரிக்கா அளிக்கும் பணத்தை வாங்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் இல்லை என்றார்.

ஜப்பானும் சரியில்லை: தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ரமேஷ், ஜப்பானின் செயல்பாடுகள் குறித்தும் கவலை தெரிவித்தார். கார்பன் உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வாயு வெளியீட்டை 1991-ல் இருந்ததை விட 5 சதவீதம் குறைத்துக் கொள்வதாக ஜப்பான் ஒப்புக் கொண்டது. இது 2012-ம் ஆண்டில் முடிவடைகிறது. ஆனால் கார்பன் வெளியீட்டைக் குறைக்கும் கியோட்டோ ஒப்பந்தத்தின் இரண்டாவது பகுதியில் பங்கேற்கப்போவதில்லை என்று ஜப்பான் அறிவித்துள்ளது பெரும் கவலை அளிக்கிறது. பருவநிலை மாறுபாடு பிரச்னையைக் குறைக்கும் வகையில் பெரிய ஒப்பந்தங்கள் ஏதும் இங்கு கையெழுத்தாகும் என்று தோன்றவில்லை என்றார்.

வளர்ந்து வரும் நாடுகளான இந்தியாவும், சீனாவும் இதுபோன்ற கார்பன் வெளியிட்டைக் குறைக்கும் ஒப்பந்தத்துக்கு வரவேண்டும் என்று ஜப்பான் கூறியுள்ளது குறிப்பிடத்தக்தது.

அமெரிக்கா விளக்கம்: இதனிடையே குறைவான நிதி அளித்தது தொடர்பாக அமெரிக்கா விளக்கமளித்துள்ளது. இந்த நிதி தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் ஒப்புதல் பெற வேண்டியுள்ளதால் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.

செய்தி:தினமணி

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பருவநிலை மாறுபாடு - அமெரிக்காவின் செயல்பாட்டிற்கு இந்தியா கடும் அதிருப்தி"

கருத்துரையிடுக