27 டிச., 2010

வெட்கங்கெட்ட, மிருகத்தனமான தீர்ப்பு

தீர்ப்பை தீர்மானித்துவிட்டு விசாரணையை மேற்கொள்ளும் நீதிமன்றத்தை கங்காரு நீதிமன்றம் என மேற்கத்தியர்கள் கூறுவார்கள்.

மனித உரிமை ஆர்வலரும், பிரபல குழந்தைகள் நல மருத்துவருமான பினாயக் சென்னிற்கு ஆயுள்தண்டனை விதித்த சட்டீஷ்கர் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பை என்னவென்றுக் கூறுவது என தெரியவில்லை.

நமது நீதிபீடத்தின் பாரபட்சமற்ற தன்மை கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது என வேண்டுமானால் கூறிக்கொள்ளலாம். இந்திய நீதிபீடத்தின் பாரம்பரியத்தில் நம்பிக்கை வைத்துள்ள எவரும் இந்த தீர்ப்பை கேட்டு அதிர்ச்சியும், நிராசையும் அடைவர்.

எதிர்தரப்பு வழக்கறிஞர் கூறுவதுபோல், பினாயக் சென் ஒரு தடைச் செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சார்ந்தவர் என்பதை நிரூபிக்க அரசு தரப்பால் இயலவில்லை. பினாயக் சென் மாவோயிஸ்டுகளின் சித்தாந்த குரு என அழைக்கப்படும் நாராயணன் சன்யாலை சிறையில் வைத்து சந்தித்தார் என்பது அவர் மீதான இன்னொரு குற்றச்சாட்டு.

மனித உரிமை ஆர்வலர் மற்றும் மருத்துவர் என்ற நிலையில் அவர் சிறைக்கு சென்றிருக்கிறார்.ஆனால், அவருக்கும் சன்யாலுக்குமிடையேயான சந்திப்பு சிறை அதிகாரிகளின் கண்காணிப்பில்தான் நடந்துள்ளது. இருவரும் தேசத்திற்கு விரோதமாக எதனையும் உரையாடுவதற்கு வாய்ப்பில்லை. ஆதலால், பினாயக் சென்னிற்கு சன்யால் எழுதியதாக கூறி ஒரு தட்டச்சு செய்யப்பட்ட கடிதத்தை அரசுதரப்பு நீதிமன்றத்தில் ஆதாரமாக தாக்கல் செய்தது. ஆனால், அக்கடிதத்தில் பினாயக் சென்னின் கையெழுத்துக்கூட இல்லை.

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயுடன் பினாயக் சென்னினை தொடர்புபடுத்திய நமது போலீசாரின் முட்டாள் தனத்தை நினைத்து சிரிப்புதான் வருகிறது. இவர்களின் வாதப்படி டெல்லியில் இந்தியன் சயன்ஸ் இன்ஸ்டியூட்டில் பணிபுரியும் அனைவரும் ஐ.எஸ்.ஐ உளவாளிகளாக மாறிவிடுவர்.

டாக்டரின் மனைவி இலீனா டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தியன் சோஷியல் இன்ஸ்டியூட்டிற்கு அனுப்பிய மின்னஞ்சல் காரணமாக சென்னிற்கும் ஐ.எஸ்.ஐக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக போலீஸார் ஆதாரமாக கூறியதை நீதிபதி கண்ணை மூடிக்கொண்டு ஒப்புக்கொண்டுள்ளார்.

மாவோயிஸ்டுகள் நடத்தும் கொலைகளை எடுத்துக்காட்டி சட்டீஷ்கர் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி பினாயக் சென்னிற்கு கருணை காண்பிக்க இயலாது என தீர்ப்பில் கூறியுள்ளார்.

பினாயக் சென் மாவோயிஸ்ட் உறுப்பினர் என்பதை நிரூபிக்கப்படாத வரைக்கும், மாவோயிஸ்டுகள் நடத்தும் எவ்வித அக்கிரமத்திற்கும் அவர் பொறுப்பாகமாட்டார்.

பினாயக் சென்னிற்கு மாவோயிஸ்டுகளுடனான தொடர்பை நிரூபிக்காமல் அவர் மீது குற்றஞ் சுமத்துவது மிகப்பெரும் அநீதமாகும். டாக்டர் சென் இத்தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடுச்செய்தால் ஒருவேளை விடுதலை கிடைக்கலாம். ஆனால், நீண்ட 2 ஆண்டுகள் சிறைவாசத்தை ஆதாரமற்ற இவ்வழக்கிற்காக அனுபவித்துள்ளார் சென்.

தங்களுக்கு முன்வைக்கப்படும் ஆதாரங்களை ஆய்வுச்செய்து சொந்த விருப்பு வெறுப்புக்களையும், நிர்பந்தங்களையும் புறந்தள்ளிவிட்டு பாரபட்சமற்ற முறையில் தீர்ப்பளிக்கத்தான் நீதிபதிகள் அமர்த்தப்படுகின்றார்கள்.

போலி ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பளிக்க இவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை. கோடிகளை கொள்ளையடித்தவர்களும், கொடூர கொலைகளை திட்டமிட்டு நிகழ்த்தியவர்களும் சுதந்திரமாக சுற்றித்திரியும் வேளையில் அப்பாவி மக்களையும், ஏழைகளுக்காக உழைக்கும் மனித உரிமை ஆர்வலர்களையும் சிறையிலடைத்துவிட்டு இந்தியாவை காட்டுமிராண்டி தேசமாக மாற்றுவது என ஆட்சியாளர்களும், நீதிபதிகளும் தீர்மானித்துவிட்டார்களா?

விமர்சனம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "வெட்கங்கெட்ட, மிருகத்தனமான தீர்ப்பு"

Mohamed Ismail MZ சொன்னது…

I think this is the best vimarsanam heading!

கருத்துரையிடுக