5 டிச., 2010

கிலானி உள்ளிட்ட தலைவர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் - பிரதிநிதிக்குழு

ஸ்ரீநகர்,டிச.5:கஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக தெஹ்ரீக்-இ-ஹுர்ரியத் தலைவர் செய்யத் அலிஷா கிலானி உள்ளிட்ட போராட்ட தலைவர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தையை துவக்க வேண்டும் என எம்.பிக்களும் சமூக ஆர்வலர்களடங்கிய பிரதிநிதிக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. உண்மைநிலையை கண்டறிவதற்காகத்தான் இக்குழு கஷ்மீருக்கு வருகைத் தந்தது.

செப்டம்பர் மாதம் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் தலைமையில் அனைத்துக் கட்சிக்குழு கஷ்மீருக்கு வருகைத் தந்ததன் தொடர்ச்சியாக இக்குழு கஷ்மீருக்கு வந்ததாக கிலானியுடன் சந்திப்பு நடத்திய பிறகு இக்குழுவின் தலைவரும் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான் ராம்விலாஸ் பஸ்வான் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது: 'அனைத்துக் கட்சி பிரதிநிதிக் குழுவினரின் வருகைக்குப் பின்னர் கஷ்மீர் அமைதியடைந்துள்ளதற்கு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஆனால், அரசு அறிவித்த எட்டு அம்ச திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அறிகுறி தென்படவில்லை. சமூகத்தில் பல்வேறு தரப்பு மக்களை சந்திப்பதற்காக மத்தியஸ்த குழுவை மத்திய அரசு நியமித்ததிலும், அதன் செயல்பாட்டிலும் எங்களுக்கு அதிருப்தியுண்டு.

மத்தியஸ்த குழுவில் அரசியல் பிரதிநிதிகள் இடம்பெறவில்லை. கஷ்மீர் தலைமையைக்கூட கவனத்தில் கொள்ள அவர்களால் இயலவில்லை. பொது பாதுகாப்புச் சட்டத்தின்படி கைதுச் செய்யப்பட்ட கஷ்மீர் இளைஞர்களின் எண்ணிக்கையையும், எட்டு அம்சதிட்டம் சென்றடைந்தவர்களின் எண்ணிக்கையையும் அரசு வெளியிடவேண்டும். எத்தனை பாதுகாப்பு பங்கர்கள் இங்கிருந்து அகற்றப்பட்டன என்பதுக் குறித்து அரசு தெளிவுப்படுத்த வேண்டும்.

கிலானி அறிவித்த ஐந்து அம்ச திட்டங்களில் கஷ்மீரை சர்ச்சைக்குரிய பகுதியாக அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார். இவ்விஷயத்தில் சிரமம் இருப்பதனால் இதர நான்கு திட்டங்களை நடைமுறைப்படுத்தி அரசு பேச்சுவார்த்தையை துவக்கலாம். கிலானியை தொடர்ச்சியாக சிறைவைத்தது தவறாகும். இதனைக் குறித்து பாராளுமன்றத்தில் எழுப்புவோம். இக்காரியம் மறைக்க முடியாது என்றால் அரசு அதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவேண்டும். இவ்வாறு பஸ்வான் கூறினார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கிலானி உள்ளிட்ட தலைவர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் - பிரதிநிதிக்குழு"

கருத்துரையிடுக