16 டிச., 2010

தொலைத் தொடர்புத் துறையில் பாஜக ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் வெளியிடப்படும்: கபில் சிபல்

புதுடெல்லி,டிச.15:தொலைத் தொடர்புத் துறையில் பாஜக ஆட்சியில் நிகழ்ந்த முறைகேடுகள் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறினார்.

2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு விசாரணைக் குழு (ஜேபிசி) அமைக்க வேண்டும் என்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இவற்றுடன் கம்யூனிஸ்ட் கட்சிகளும் சேர்ந்து வலியுறுத்தியதால், நாடாளுமன்ற கூட்டத்தின் குளிர் காலக் கூட்டத் தொடர் அலுவல் ஏதும் நடைபெறாமல் முடிவடைந்தது.

இந்நிலையில் இத்துறைக்குப் பொறுப்பு ஏற்றுள்ள மத்திய அமைச்சர் கபில் சிபல், அலைக்கற்றை கொள்கை எப்போது வகுக்கப்பட்டது என்பதை அத்வானியிடம் கேட்க விரும்புவதாக கூறினார். காபந்து அரசாக வாஜ்பாய் தலைமையிலான அரசு இருந்தபோதுதான் வகுக்கப்பட்டது என்பது அவருக்குத் தெரியாதா? என்றும் கேட்டார்.

முறைகேடுகள் 1999-ம் ஆண்டுதான் தொடங்கின. அவை என்ன என்பது இன்னும் ஒரு வாரத்திற்குள் முழுமையாக வெளியாகும் என்று கபில் சிபல் கூறினார்.

2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அரசு தயாராக இருந்தது. ஆனால் அதை ஏற்கவில்லை. காங்கிரஸ் விவாதத்துக்குத் தயாராக இல்லை என்று பாஜக கூறுவது தவறான தகவல். நாடாளுமன்றத்தில் விவாதமே செய்யாத போது, காங்கிரஸ் கட்சி எப்படி பதில் அளித்திருக்க முடியும் என்று கபில் சிபல் கேள்வியெழுப்பினார்.

ஊடகங்கள் அனைத்தும் முறைகேடை மட்டுமே பெரிதுபடுத்துகின்றன. ஆனால் தனது அமைச்சகம் செய்த நல்ல விஷயங்களை வெளிப்படுத்தவில்லை என்றும் கபில் சிபல் கூறினார்.

நாட்டில் இப்போது 70 கோடி செல்போன்கள் உள்ளன. இது ஒன்றும் மிகச் சிறிய எண்ணிக்கை அல்ல. செல்போன் கட்டணம் 30 காசு அல்லது 50 காசுகளாக உள்ளன. வேறெந்த நாட்டிலும் இந்த அளவுக்கு செல்போன் கட்டணம் குறைவாக இல்லை. 2001-ம் ஆண்டில் செல்போன் பயன்பாடு 3 சதவீதமாக இருந்தது. இது 2005-ல் 9 சதவீதமாகவும், இப்போது 61 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. இத்தகைய சாதனைகள் ஊடகங்களில் பெரிதுபடுத்தப்படவில்லை என்று அவர் கூறினார்.

ஊழல்களை மட்டுமே ஊடகங்கள் வெளிப்படுத்தும் நேரத்தில் இத்துறையில் நடைபெறும் மிகப் பெரிய மாற்றங்களையும், வளர்ச்சியையும் குறிப்பிட முன்வர வேண்டும் என்றார் கபில் சிபல்.

செய்தி:தினமணி

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "தொலைத் தொடர்புத் துறையில் பாஜக ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் வெளியிடப்படும்: கபில் சிபல்"

கருத்துரையிடுக