1 ஜன., 2011

மின்னி மறைந்த 365 நாட்கள்

அதிர்ச்சியும், ஆச்சரியமும், ஆனந்தமும் கலந்த நாட்களை அளித்துவிட்டு 2010 ஆம் ஆண்டு விடைப்பெற்றது.
ஃபலஸ்தீன் போராளி இயக்கமான ஹமாஸின் தலைவர்களில் ஒருவரான மஹ்மூத் அல் மப்ஹூஹ் துபாயில் வைத்து மொசாத் ஏஜண்டுகளால் கொல்லப்பட்டது முதல் வெனிசுலா நாட்டின் பிரதிநிதியின் விசாவை அமெரிக்கா ரத்துச் செய்தது வரையிலான சிறியதும், பெரியதுமான என பல சம்பவங்கள் 2010 ஆம் ஆண்டில் நிகழ்ந்தேறின.

காஸ்ஸாவில் இஸ்ரேலின் அக்கிரமமான தடையால் துயரத்தை அனுபவித்து வரும் ஃபலஸ்தீன் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அளிப்பதற்காக துருக்கியிலிருந்து புறப்பட்ட நிவாரண கப்பல் மீது இஸ்ரேல் நடத்திய கொடூரத் தாக்குதலில் 9 துருக்கி நாட்டைச்சார்ந்த மனிதநேய ஆர்வலர்களை படுகொலைச் செய்யப்பட்டதும், மெக்ஸிக்கோ வளைகுடாவில் பிரிட்டீஷ் எண்ணைக் கம்பெனியின் எண்ணைக் கிணறு வெடித்து சிதறியதால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பும், உலக போலீஸ் வேடமிடும் அமெரிக்காவின் அதீத ரகசியங்கள் விக்கிலீக்ஸினால் அம்பலமானதும் கடந்த ஆண்டில் நமது கவனத்தை ஈர்த்த சம்பவங்களாகும்.

கால்பந்து வீரர்கள் மண்டேலாவின் நாட்டில் பந்தை உருட்டியபொழுது உலகம் ஆப்பிரிக்காவை உற்றுநோக்கியது நேற்று நடந்ததுபோல் உள்ளது.

ஹைத்தியிலும், பாகிஸ்தானிலும், சீனாவிலும், தாய்லாந்திலும் தற்பொழுது ஆஸ்திரேலியாவிலும் இயற்கை சீற்றங்களால் ஏற்பட்ட பெரும் பாதிப்பை நாம் கண்டோம். இந்த ஆண்டின் பிந்தைய நாட்கள் நமக்கு மறக்கமுடியாத நிகழ்வுகளை அளித்துச் சென்றது.

அவற்றில் சில:
உலகம் சிரித்தது சிலியுடன்:
அதிர்ச்சியுடன் கேட்ட செய்திக்கு உணர்ச்சிப்பூர்வமான முடிவு. பூகம்பத்தால் தகர்ந்துபோன சிலியின் சான்ஜோஸ் சுரங்கத்தில் 33 தொழிலாளர்கள் உயிருடனிருக்கின்றார்கள் என்பதனை 17 நாட்கள் கழித்து உலகம் அறிந்தபொழுது நம்பமுடியாத செய்தியாக இருந்தது. வெளி உலகினோடு தொடர்பு கொள்ளவியலாமல் 700 மீட்டர் ஆழத்தில் சிக்கிக்கொண்ட தொழிலாளிகளின் உயிரை காப்பாற்றுவதற்கும், மனோநிலை பாதிக்கப்படாமலிருக்கவும் அதிகாரிகள் மிகுந்த கவனம் செலுத்தினர். 69 தினங்களுக்கு பிறகு 33 தொழிலாளர்களும் சுரங்கத்தை விட்டு வெளியேறும் வரை உலகம் மனமுருகி பிரார்த்தித்தது சிலியுடன்.

ஐரோப்பாவில் தனிமனித சுதந்திரத்தின் மீது விழுந்த அடி
முஸ்லிம் பெண்கள் தங்கள் முகத்தை மறைக்குவிதமான புர்காவை அணியக்கூடாது என ஐரோப்பாவில் வலதுசாரிகள் கச்சைக்கட்டி களமிறங்கிய வருடமாக 2010 அமைந்தது.

பிரான்சிலும், ஸ்பெயினில் சில நகரங்களிலும் பெண்கள் புர்காவை அணிவது தடைச்செய்ய சட்டம் நிறைவேற்றப்பட்டது.

அரை நிர்வாணத்துடன் பெண்கள் சுற்றித் திரிவதை சுதந்திரம் எனக்கூறும் மேற்கத்திய உலகம் தங்களது முகத்தை தாமாகவே மறைக்க விரும்பும் முஸ்லிம் பெண்களின் தனிமனித சுதந்திரத்தில் தலையிட்டு தனது இரட்டை முகத்தை பகிரங்கப்படுத்தியது.

புர்காவை தடைச் செய்ததற்கு ஆட்சியாளர்கள் கூறிய காரணம் பொது இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு என பதிலளித்தனர்.

இத்தாலியும், நெதர்லாந்தும் பிரான்சின் முட்டாள்தனத்தை பின்பற்றியது. ஒடுக்கப்பட்ட ரோம இனத்தவரை நாடு கடத்தப் போவதாக பிரான்சு மிரட்டியது.

பார்ஸல் குண்டுகள் ஐரோப்பாவின் பல நகரங்களிலும் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பான செய்தியாக மாறியது. ஆனால், அதன் பெயரால் நிரபராதிகளான முஸ்லிம் இளைஞர்களை சிறையிலடைத்து கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதற்கு ஊடகங்கள் எவ்வித முக்கியத்துவத்தையும் அளிக்கவில்லை.

தோற்றுப்போன மேற்காசிய அமைதி முயற்சி
அமெரிக்காவின் தலைமையில் அக்டோபர் 2-ஆம் தேதி ஃபலஸ்தீன் மற்றும் இஸ்ரேலுக்கிடையேயான அமைதி பேச்சுவார்த்தை வாஷிங்டனில் துவங்கியது.

இஸ்ரேல் குடியேற்ற நிர்மாணங்களை தொடர்ந்தால் பேச்சுவார்த்தையிலிருந்து விலகுவோம் என ஃபலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸ் எச்சரிக்கை விடுத்தது எவ்வித பலனையும் தரவில்லை.

10 மாத மொரட்டோரியத்திற்கு பிறகு இஸ்ரேல் மீண்டும் குடியேற்ற நிர்மாணத்தை துவக்கியபொழுது பேச்சுவார்த்தை தோல்வியைத் தழுவியது. அமைதியை விரும்பாத இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடியும் என ஏற்கனவே ஹமாஸ் முன்னறிவிப்பு செய்திருந்தது. அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சியை நிறுத்திவைப்பதாக அமெரிக்காவும் அறிவித்தது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான்
அமெரிக்காவின் ஆதரவுடன் போராளிகளுக்கு எதிரான நடவடிக்கை என்றபெயரில் தினந்தோறும் அப்பாவி மக்களுக்கு கொலைக் களமாகும் பாகிஸ்தானை 2010 ஜூலை மாதம் ஏற்பட்ட வெள்ள பிரளயம் பிடித்து உலுக்கியது.

செப்டம்பர் மாதம் வரை தொடர்ந்த பெய்த மழையால் 2 கோடி பேர் பாதிக்கப்பட்டனர். 69 ஆயிரம் சதுர கிலோமீட்டர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கின. இரண்டு லட்சம் கால்நடைகள் செத்து மடிந்தன. விவசாயத்துறை முற்றிலும் சீர்குலைந்த பாகிஸ்தானுக்கு உலக நாடுகள் உதவுமாறு ஐ.நா கோரிக்கை விடுத்தது.

சுனாமி, ஹைத்தி பூகம்பம் ஆகிய இயற்கை சீற்றங்களுக்கு உலக சமூகத்திடமிருந்து கிடைத்த ஆதரவு, பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட பாதிப்பிற்கு கிடைக்கவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானதாகும்.

ஆக்கிரமிப்பின் மீதிக்கதை
2003 ஆம் ஆண்டு துவங்கிய அமெரிக்காவின் ஈராக் ஆக்கிரமிப்பு பாதியளவு முடிவடைந்த பொழுது மீதமாக அமைந்தது அரசியல் ஸ்திரத்தன்மை அற்ற நிலை. மார்ச் மாதத்தில் அதிபர் தேர்தல் முடிவடைந்த பொழுதிலும் எட்டு மாதத்திற்கு பிறகுதான் ஷியா, சுன்னி, குர்து பிரிவினர் கூட்டாக இணைந்து புதிய அரசை உருவாக்கினர்.

91 இடங்களை கைப்பற்றிய நூரி அல் மாலிகி பிரதமரானார். இயாத் அல்லாவியின் கட்சிக்கு 89 இடங்கள் கிடைத்தன. ஷியா அறிஞர் முக்ததா அல் ஸத்ரின் ஆதரவு கிடைத்ததன் மூலம் நூரி அல் மாலிகி ஈராக் அதிபராக மீண்டும் பதவியேற்றார். நவம்பரில் பதவியேற்ற அதிபர் ஜலால் தலபானி மாலிகியை மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுத்தார். ஆனால், ஈராக்கில் பாதுகாப்பு மேம்பட்டதாக கூறும் அமெரிக்காவின் கூற்று பொய் என்பதை நிரூபிக்கின்றன அந்நாட்டின் வீதிகளில் அடிக்கடி நடைபெறும் குண்டுவெடிப்புகள்.

அம்பலமான ரகசியங்கள்
அமெரிக்க தூதரகச் செய்திகளை ஆஸ்திரேலிய குடிமகன் ஜூலியன் அஸென்ஜே ஸ்தாபித்த விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டதை உலக போலீஸ் வேடமிடும் அமெரிக்கா அதிர்ச்சியுடன் நோக்கியது.

உலகின் ஒவ்வொரு நாடுகளில் செயல்படும் அமெரிக்க தூதரகங்கள் வழியாக அந்நாட்டின் செயல்பாடுகளை அமெரிக்கா கண்காணித்து வருகிறது என்பதுதான் விக்கிலீக்ஸ் வெளியிட்ட செய்திகளின் சாராம்சம்.

2006 முதல் விக்கிலீக்ஸின் ரகசிய கண்கள் பல்வேறு நாடுகளின் ரகசியங்களில் நோட்டமிட்டன. பல செய்திகளையும் அவர்கள் வெளியுலகிற்கு அளித்தனர். ஆனால், 2007 ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவம் ஈராக்கில் அப்பாவி மக்களை குண்டுவீசிக் கொல்வதன் வீடியோ காட்சியை இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட்டதுடன் விக்கிலீக்ஸ் இணையதளம் உலகின் பார்வையை தன் பக்கம் நோக்கி இழுத்தது.

ஆப்கானில் அமெரிக்காவின் செயல்பாடுகள் தொடர்பாக அதிர்ச்சியளிக்கும் விபரங்களை வெளியிட்டதன் மூலம் விக்கிலீக்ஸும் அதன் ஸ்தாபகர் ஜூலியன் அஸென்ஜேவும் அமெரிக்காவினால் குறி வைக்கப்பட்டனர்.

நவம்பரில் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட ரகசியங்களை வெளியிட்டது விக்கிலீக்ஸ். சுவீடனில் பதிவுச் செய்யப்பட்ட பாலியல் பலாத்கார வழக்கில் ஜூலியன் கைதுச் செய்யப்பட்டு பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுதலைச் செய்யப்பட்டார்.

உஸாமா பின் லேடனுக்கு அடுத்து அமெரிக்காவின் சர்வதேச பயங்கரவாதியாக ஜூலியன் அஸென்ஜே மாறியுள்ளார்.

இஸ்ரேல் நடத்திய கூட்டுப்படுகொலை
காஸ்ஸாவில் இஸ்ரேலின் அக்கிரமமான தடையால் துயரத்தை அனுபவித்துவரும் ஃபலஸ்தீன் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அளிப்பதற்காக துருக்கியில் புறப்பட்ட நிவாரண கப்பல் மீது இஸ்ரேல் நடத்திய கொடூரத் தாக்குதலில் 9 துருக்கி நாட்டைச் சார்ந்த மனிதநேய ஆர்வலர்களை படுகொலைச் செய்தது இஸ்ரேல்.

சுய பாதுகாப்பிற்காக சுட்டதாக இஸ்ரேல் தனது அக்கிரம செயலை நியாயப்படுத்தியது. இஸ்ரேல் மன்னிப்புக்கோர வேண்டும் எனவும், இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் துருக்கி விடுத்த கோரிக்கையை இஸ்ரேல் மதிக்கவேயில்லை. இஸ்ரேலின் கொடூர ராணுவ நடவடிக்கையை உலக நாடுகள் கண்டித்தன.

ஹைத்தி துயரத்தின் பூமி
ஜனவரி 12 ஆம் தேதி ஹைத்தியின் தலைநகரான போர்ட்டோ பிரின்ஸில் பூகம்பம் ஏற்பட்டது. இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்களின் உயிர் பலிவாங்கப்பட்ட ஹைத்தியில் பின்னர் நடந்த அதிபர் தேர்தலிலும் தீவிர வன்முறை வெடித்தது. சில மாதங்களுக்கு பின் ஏற்பட்ட வெள்ளப் பிரளயத்தில் பலரும் வீடுகளை இழந்தனர்.

ஹைத்தி அகதிமுகாம்களில் தூய்மையற்ற நிலையின் காரணமாக காலரா நோய் வேகமாக பரவுகிறது. நோயால் பீடிக்கப்பட்ட 3333 பேர் மரணித்ததாக சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா படையில் நேபாள ராணுவத்தினரிடமிருந்துதான் காலரா நோய் பரவியதாக வெளியான தகவலைத் தொடர்ந்து ஐ.நா பாதுகாப்பு படையினர் மீதும் தாக்குதல் நடந்தது. தீரா துயரத்துடன் ஹைத்தி மக்கள் புதுவருடத்தை வரவேற்கின்றனர்.

சுற்றுச்சூழல் பாதிப்பினால் ஏற்பட்ட துயரம்
மெக்ஸிக்கோ வளைகுடாவில் கரையிலிருந்து 48 மைல்கள் தொலைவிலிருக்கும் பெயாண்ட்(beyond) பெட்ரோலியம் எனப்படும் நிறுவனத்தின் எண்ணை கிணறு கடந்த ஏப்ரல் மாதம் வெடித்தது. அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 11 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். இதனால் எண்ணை கசிவு ஏற்பட்டது.

தினமும் ஆயிரம் பேரல்கள் எண்ணை கசிவதாக கூறப்பட்டது. பின்னர் தினமும் ஐந்து ஆயிரம் பேரல்கள் எண்ணை கசிவதாக கூறப்பட்டது. அதன் பின்னர் வெளியிடப்பட்ட ஒளிப்படக் காட்சியின் அடிப்படையில் 25 ஆயிரம் முதல் 80 பேரல்கள் எண்ணை கசிவதாக கூறப்பட்டது.

இச்சம்பவம் பல நாட்களுக்கு பிறகே உலகிற்கு தெரியவந்தது. எண்ணை கசிவு கடலில் கலந்ததால் ஏற்பட்ட விஷத் தன்மையின் காரணமாக இறந்துபோன மீன்கள் அமெரிக்க கடற்கரையில் ஒதுங்கின. எண்ணை கசிவை முற்றிலும் அடைப்பதற்கு பல மாதங்கள் ஆகின. அமெரிக்க மீன்பிடித்துறை - சுற்றுலாத்துறைக்கு பலத்த அடியாக மாறியது இச்சம்பவம். பெயாண்ட் பெட்ரோல் கம்பெனி அமெரிக்காவிற்கு 2 ஆயிரம் கோடி டாலர் நஷ்டஈடு வழங்கியது.

பொருளாதார நெருக்கடி
பொருளாதார நெருக்கடியை சந்தித்த ஐரோப்பிய நாடுகளின் பொதுக்கடனை அடைப்பதற்கு வேலைவாய்ப்பையும், சலுகைகளையும் குறைத்தது பெரும் எதிர்ப்பைக் கிளப்பியது.

போர்ச்சுகல், அயர்லாந்து, இத்தாலி, கிரீஸ், ஸ்பெயின், பிரிட்டன், பெல்ஜியம் ஆகிய நாடுகள் பொதுத்துறை பணியாளர்களின் சலுகைகளை குறைத்தனர். வரியை அதிகரித்தனர். வளர்ச்சித் திட்டங்கள் முடக்கப்பட்டன.

ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்ட இத்தகைய பொருளாதார சீர்திருத்தங்களை மக்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். வீதியில் இறங்கி போராடிய மக்களை போலீஸ் எதிர்கொண்டது. இதனைத் தொடர்ந்து பொருளாதார சீர்திருத்தங்களின் கடுமைய தளர்த்த ஐரோப்பிய யூனியன் தீர்மானித்தது.

செய்தி:செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "மின்னி மறைந்த 365 நாட்கள்"

ansari சொன்னது…

good information

கருத்துரையிடுக