15 ஜன., 2011

பள்ளிகளில் சினிமா பாடல்களுக்கு மாணவ, மாணவிகளை ஆட வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ்

சென்னை,ஜன.15:பள்ளிகளில் சினிமா பாடல்களுக்கு மாணவ, மாணவிகளை ஆட வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

பாமக சார்பில் சென்னை அமைந்தகரை குஜ்ஜி நாய்க்கன் தெருவில் சமய நல்லிணக்க சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அதில் சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் மத வேறுபாடு இன்றி பொங்கல் வைத்தனர். விழாவில் தமிழர்களின் பண்பாட்டு மரபை வெளிப்படுத்தும் கோலாட்டம், கும்மியாட்டம், கரகாட்டம், மான் கொம்பு ஆட்டம், புலியாட்டம், சிலம்பாட்டம், சாட்டைக் குச்சியாட்டம் என ஏராளமான கிராமிய கலை நிகழ்ச்சிகளும், வீர விளையாட்டுகளும் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் ராமதாஸ் பேசுகையில், தமிழர்களின் வாழ்வு முழுவதும் கலையோடு தொடர்புடையது. தமிழர்களின் வாழ்வின் எல்லா நிலைகளிலும் அதாவது மகிழ்ச்சி, சோகம், களைப்பு என எல்லா சூழல்களிலும் பாட்டுகளை பாடும் மரபு, தமிழர்களுடையது.

அதேபோல் எவ்வளவோ வீர விளையாட்டுகள் இருந்திருக்கின்றன. பெண்களுக்காக மட்டுமே 30க்கும் மேற்பட்ட விளையாட்டுகள் இருந்துள்ளன. ஆனால், இன்று தமிழர்கள் தங்கள் கலைகளை, வீர விளையாட்டுகளை இழந்திருக்கிறார்கள். நாம் நமது பண்டைய கலைகளை காப்பாற்றியாக வேண்டும்.

எனவே, குழந்தைகளை மாலை நேரங்களில் கட்டாயம் விளையாடச் செய்யுங்கள். மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு நம்முடைய பாரம்பரிய விளையாட்டுகளை சொல்லிக் கொடுக்க வேண்டும்.

அதேபோல் நம் வீர விளையாட்டுகளெல்லாம் மறைந்து, இப்போது ஊரெல்லாம், தெருவெல்லாம் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். கிரிக்கெட் ஒரு சூதாட்ட விளையாட்டு. எனவே, கிரிக்கெட் விளையாட்டை தமிழகத்திலிருந்தே ஒழிக்க வேண்டும். இதற்காக மாநிலம் தழுவிய பிரசார இயக்கத்தை மேற்கொள்ள உள்ளோம்.

இங்கே கிராமத்தில் இருந்து பாரம்பரியம் நகரம் நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அதே வேலையில் நகரத்தில் இருந்து கிராமத்திற்கு குத்துபாட்டு சென்று கொண்டிருக்கிறது.

பள்ளிக்கூடங்களில் நடைபெறும் விழாக்களின் போது சினிமா பாடல்களை பாட வைத்து ஆடுகிறார்கள். இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம்.

மதுவை ஒழிக்க பா.ம.க. தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. மதுவினால் தமிழ்நாட்டில் ஏராளமான பெண்கள் இளம் வயதிலேயே விதவையாகி வருகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும் என்று வருகிற சட்டமன்ற தேர்தல் முடிந்த பின்பு தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு பூட்டுப்போடும் போராட்டத்தை பா.ம.க. நடத்தும். இந்த போராட்டத்திற்கு பெண்கள் முழு ஆதரவு தர வேண்டும். நானே நேரடியாக இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வேன் என்றார்.

விழாவில் கிருஷ்ணமூர்த்தி ஆதீனம், கத்தோலிக்க பேராயர் சின்னப்பா, இ.சி.ஐ. பேராயர் எஸ்றா சற்குணம், புதுப்பேட்டை பள்ளிவாசல் இமாம் தாஜீதீன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தட்ஸ் தமிழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

3 கருத்துகள்: on "பள்ளிகளில் சினிமா பாடல்களுக்கு மாணவ, மாணவிகளை ஆட வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ்"

மாஷ் சொன்னது…

முஸ்லிம் பள்ளிகள் இதனைக் கவனிக்குமா?

இதனை முஸ்லிம்கள் நடத்தும் பள்ளிக்கூடங்கள் கவனிக்க வேண்டும். காயல்பட்டணம் போன்ற முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் ஊர்களில் கூட பள்ளி விழாக்களில் சினிமா பாடல்களுக்கு குழந்தைகளை ஆட வைக்கும் அவலங்கள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.

இந்தக் கொடுமையில் மேடையில் தங்கள் குழந்தைகள் ஆடுவதைப் பார்த்துப் பரவசமடையும் பெற்றோர்களை என்னவென்று சொல்வது? இதற்காக பள்ளி ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கான ரூபாய்களுக்கு வண்ண வண்ண ஆடைகளைப் பெற்றோர்களிடம் வாங்கச் சொல்கிறார்கள். எந்தவிதத் தயக்கமும் இன்றி கடனை உடனை வாங்கியாவது அந்த ஆடைகளை வாங்கிக் கொடுக்கின்றார்கள் நம் சமுதாயக் கண்மணிகள்.

10, 15 ரூபாய் கொடுத்து ஓர் இஸ்லாமியப் பத்திரிகையை வாங்கிப் படிக்கத் தயங்கும் சமுதாயம், 50, 100 ரூபாய் கொடுத்து நல்ல நல்ல இஸ்லாமிய நூல்களை வாங்கிப் படிக்கத் தயங்கும் சமுதாயம் வீணான அனாச்சாரச் செலவுகளுக்கு ஆயிரக்கணக்கில் கொட்டுகிறது.

இஸ்லாமிய வரலாறு உன்னதக் கலாச்சாரத்தைக் கொண்டது. நமது கலாச்சாரத்தைக் கலைகளாக வெளிப்படுத்த எத்தனையோ வழிகள் உண்டு. அதனை விட்டு விட்டு சமுதாயத்தைச் சீரழிய வைக்கும் "மானாட மயிலாட" (இந்த அருவறுப்பு நிகழ்ச்சிக்கு நல்ல தமிழ்ப் பெயர் வேறு!) போன்ற தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகள் பாணியில் குழந்தைகளை அரைகுறை ஆடைகளை அணிய வைத்து ஆட வைப்பது எந்த வகையில் நியாயமாகும்?

முஸ்லிம் பெற்றோர்கள் உணர்வார்களா?

செய்யத் சொன்னது…

காயல்பட்டினத்தில் மட்டுமல்ல தமிழகத்தின் பல்வேறு பள்ளிக்கூடங்களிலும் இதேக்கூத்துதான் நடக்கிறது.நிகழ்ச்சிகளிலும், ஆடை விஷயத்திலும் வேண்டுமானால் வித்தியாசம் இருக்கலாம்.ஆனால், சினிமா கலாச்சாரம் பெரும்பாலான பள்ளிக்கூடங்களில் கொடிக்கட்டித்தான் பறக்கிறது.

Unknown சொன்னது…

பள்ளிக் கூடங்கள் என்பது குழந்தைகளுக்கு நல்லொழுக்கங்களைக் கற்ப்பிக்கும் பாசரைகளாகும்/ சினிமாவிற்கும் நாளொலுக்கதிர்க்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது / ஒழுக்க கேடுகள் நிறைந்ததே சினிமா / கலை என்ற பெயரில் குப்பைத் தனமான கூத்துகளை தான் சினிமா உலகம் காட்டிக் கொண்டு இருக்கின்றது / இந்த குப்பை கிடங்க்கில் இருந்து குழந்தைகளை அகற்றி வளர்க்க பெற்ற்ரோர்களும் / ஒழுக்கக் கேடுகளைத் தவிர்க்க ஆசிரியர்களும் சூளுரைக்க வேண்டும்

கருத்துரையிடுக