1 ஜன., 2011

மேற்கு வங்கத்தில் அரசியல் கொலைகள்: சிதம்பரம் எச்சரிக்கை

புதுடெல்லி,ஜன:மேற்கு வங்கத்தில் அரசியல் கட்சித் தொண்டர்கள் கொலை செய்யப்படுவது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேற்குவங்கத்தின் பல பகுதிகளில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாகவும் அந்த மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்ஜிக்கு எழுதியுள்ள கடிதத்தில் சிதம்பரம் கூறியுள்ளார்.

சிதம்பரத்தின் கடிதங்களை மேற்கு வங்க அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதில் மாநிலத்தில் இப்போது தொடர்ந்து வன்முறைகள் நிகழ்ந்து வருகிறது. அங்கு நிலவும் சூழ்நிலைகள் திருப்திகரமாக இல்லை என்று கூறியுள்ள சிதம்பரம், கூலிப்படை மூலம் சில குறிப்பிட்ட கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் கொல்லப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸூக்கு ஆதரவாக செயல்படும் மாவோயிஸ்டுகள், கம்யூனிஸ்ட் தொண்டர்களை கொலை செய்து வருவதாக புத்ததேவ் கூறியுள்ளார்.

அதே நேரத்தில் திரிணமூல் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் கம்யூனிஸ்ட்களால் கொலை செய்யப்படுவதாக அந்த இரு கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன.

பல இடங்களில் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்புப் பணி என்ற பெயரில் அராஜகத்தில் ஈடுபடுகின்றனர் என்பதும் திரிணமூல் காங்கிரஸின் குற்றச்சாட்டு. இந்தக் குற்றச்சாட்டுகளை மத்திய அரசிடம் மம்தா எடுத்துச் சென்றார்.

இதையடுத்து மேற்கு வங்கத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து சிதம்பரம் கடும் விமர்சனங்களுடன் கடிதம் எழுதினார். இதற்கு புத்ததேவ் எதிர்ப்புத் தெரிவித்து பதிலளித்தார். மேற்கு வங்க அரசிடம் சிதம்பரம் பாரபட்சமாக நடந்து கொள்கிறார் என்றும் குற்றம்சாட்டினார்.

டெல்லி வந்து தன்னை சந்திக்குமாறு பட்டாச்சார்ஜிக்கு கடிதத்தில் சிதம்பரம் அழைப்பு விடுத்திருந்தார்.

அஞ்சல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை: இதனிடையே சிதம்பரத்தின் கடிதம் மேற்கு வங்க அரசுக்கு தாமதமாக செல்ல காரணமாக இருந்த கொல்கத்தா அஞ்சல் துறை அலுவலர்கள் 7 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 2 பேர் பணியிடமாற்றம் செய்ப்பட்டனர்.

ஆனால் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொல்கத்தாவில் அஞ்சல் ஊழியர்கள் வெள்ளிக்கிழமை மதியம் வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக சிதம்பரம் எந்த கடிதமும் தனக்கு அனுப்பவில்லை என்று பட்டாச்சார்ஜி கூறியிருந்தார். அஞ்சல் துறையால் தான் சிதம்பரத்தின் கடிதம் தாமதமாக வந்தது பின்னர் தெரியவந்தது.

தினமணி

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மேற்கு வங்கத்தில் அரசியல் கொலைகள்: சிதம்பரம் எச்சரிக்கை"

கருத்துரையிடுக