17 ஜன., 2011

துனீசியாவில் ஐக்கிய அரசு உருவாக்கத் திட்டம்

துனீஸ்,ஜன.17:மக்கள் போராட்டம் நீடித்துவரும் துனீசியாவில் ஐக்கிய அரசை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் துவங்கியுள்ளன. சர்வதேச பார்வையாளர்களின் மேற்பார்வையில் இரண்டு மாதத்திற்குள் துனீசியாவில் அதிபர் தேர்தல் நடத்துவது என்பது பேச்சுவார்த்தையின் மையக் கருத்தாகும்.

மக்கள் புரட்சியின் காரணமாக துனீசியா அதிபர் ஜைனுல் ஆபீதீன் பின் அலி நாட்டை விட்டு வெளியேறிய பிறகு துனீசிய நாட்டு பாராளுமன்ற சபாநாயகர் ஃபுஆத் மெபாஸா கடந்த சனிக்கிழமை இடைக்கால அதிபராக பதவியேற்றார்.

எதிர்கட்சிகள் உள்பட நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பிரச்சனையை தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக மெபாஸா தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டார். எவரையும் புறக்கணிக்காமல் அனைத்து துனீசிய மக்களையும் அரசியல் செயல்திட்டத்தில் பங்குபெறச் செய்வோம். பதவிப்பிரமாணம் செய்தபிறகு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் மெபாஸா இவ்வாறு குறிப்பிட்டார்.

அரசியல் சட்டத்தின்படி 60 தினங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். பதவியேற்றவுடன் மெபாஸா, பிரதமர் முஹம்மது கன்னோசியிடம் ஐக்கிய அரசு உருவாக்க அழைப்பு விடுத்தார். ஐக்கிய அரசு உருவாக்குவதற்காக பிரதமர் கன்னோசியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக எதிர்கட்சித் தலைவர் நாஜிப் செப்பி தெரிவித்தார்.

தடைச் செய்யப்பட்ட இஸ்லாமிய கட்சியான ஹிஸ்ப் அல் நஹ்தாவின் தலைவர் ராஷித் அல் கன்னோசி ஒரு வாரத்திற்குள் துனீசியா செல்வதாக தெரிவித்துள்ளார்.

வன்முறைச் செயல்கள் குறைந்த பொழுதிலும், தலைநகரான துனீசில் நேற்றும் துப்பாக்கிச் சப்தம் கேட்டது. மோதலை தடுக்க தலைநகரில் பாதுகாப்புப் படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை நகரத்தில் ஏராளமான ஆடம்பர கார்கள் தாக்குதலுக்குள்ளாகின. கடைகளும், வீடுகளும் கொள்ளையடிக்கப்பட்டு தீவைத்துக் கொளுத்தப்பட்டன.

நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட பின் அலி குடும்பத்தாரின் சொத்துக்களைத்தான் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிவைத்துத் தாக்கினர். பின் அலி சவூதிஅரேபியாவில் தஞ்சம் புகுந்ததைத் தொடர்ந்து விமானநிலையங்கள் மீண்டும் செயல்படத் துவங்கியுள்ளன. இருபது ஆண்டுகளாக துனீசியாவை பின் அலி ஆட்சிபுரிந்தார். மனித உரிமை மீறல்களும், கொடுமைகளும் நிறைந்ததாக மாறியது அவருடைய ஆட்சிக்காலம்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "துனீசியாவில் ஐக்கிய அரசு உருவாக்கத் திட்டம்"

கருத்துரையிடுக