24 ஜன., 2011

முஸ்லிம் நாடுகளில் பரவுகிறது அரசுக்கெதிரான மக்கள் திரள் போராட்டம்

சன்ஆ/அல்ஜீர்ஸ்,ஜன.24:துனீசியாவில் சர்வாதிகாரி ஜைனுல் ஆபிதீன் பின் அலியின் ஆட்சியை கவிழச்செய்து அவரை நாட்டைவிட்டு துரத்தக் காரணமான ஜனநாயக வழியிலான மக்கள் திரள் போராட்டம் அயல் நாடுகளிலும் பரவுகிறது.

அல்ஜீரியா, ஜோர்டானைத் தொடர்ந்து யெமனிலும் மக்கள் அரசுக்கெதிராக வீதிகளில் இறங்கி போராடத் துவங்கியுள்ளனர்.

பட்டினியாலும், வேலையில்லா திண்டாட்டத்தாலும் துயரத்தில் ஆழ்ந்துள்ள மக்கள் ஊழலில் திளைத்துள்ள அரசுகளுக்கெதிராக போராட களமிறங்கியுள்ளனர்.

அல்ஜீரியாவின் தலைநகரான அல்ஜீர்ஸில் நேற்று நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற போராட்டத்தை போலீஸ் கடுமையாக எதிர்கொண்டது. பொதுக்கூட்டங்களை தடைச் செய்யும் புதிய சட்டத்தை வாபஸ்பெற வேண்டுமென்பது மக்களின் கோரிக்கையாகும்.

போராட்டம் பரவாமல் தடுக்க தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும் அதனையும் மீறி போராட்டக்களத்தில் குதித்துள்ளனர் மக்கள். இது ஆட்சியாளர்களை சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. போலீசாரின் நடவடிக்கையில் 40 பேர்களுக்கு காயமேற்பட்டது.

'ராலி ஃபார் கல்சர் அண்ட் டெமோக்ரஸி' கட்சியின் தலைவர் ஸய்யத் ஸாதி உள்பட ஏராளமானோர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். அக்கட்சியின் பாராளுமன்றத் தலைவர் உஸ்மான் அமாசுசும் கைதுச் செய்யப்பட்டவர்களில் ஒருவராவார்.

மறைமுகமாக ராணுவ ஆட்சி நடைபெறும் அல்ஜீரியாவில் விலைவாசி உயர்வுக்கும், வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு எதிராகவும் இம்மாதம் துவக்கத்தில் மக்கள் தங்கள் போராட்டத்தை துவக்கினர்.

துனீசியாவில் நிகழ்ந்தது போலவே தங்கள் நாட்டிலும் நிகழ வேண்டுமென்பதை விரும்புவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

யெமன் நாட்டில் அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் ராஜினாமாச் செய்யவேண்டுமனக் கோரி அந்நாட்டில் போராட்டங்கள் தொடர்கின்றன.

நேற்று ஸன்ஆ பல்கலைக்கழகத்தில் நடந்த கண்டனப் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். மாணவர்கள், சமூகசேவர்கள், எதிர்கட்சியினர் கலந்துக்கொண்ட பிரமாண்டமான கண்டனப் போராட்டம் யெமனில் முதன் முறையாக அப்துல்லாஹ் ஸாலிஹிற்கு எதிராக நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

2500 மாணவர்கள் பங்கேற்ற கண்டனப் பேரணியில் போராட்டக்காரர்கள் அதிபருக்கெதிராக பலத்த கோஷங்களை எழுப்பினர்.

துனீசியாவின் முன்னாள் அதிபர் பின் அலியுடன் போராட்டக்காரர்கள் அப்துல்லாஹ் ஸாலிஹை ஒப்பிட்டனர்.

துனீசியாவில் இதுபோல மக்கள் வறுமையில் உழன்றபோது அரசு ஊழலில் திளைத்து கொழுத்தது என போராட்டக்காரர்கள் கூறினர். போராட்டகாரர்களுக்கெதிராக போலீஸ் கண்ணீர் புகைக்குண்டை வீசியது. 30க்கும் மேற்பட்டோர் கைதுச் செய்யப்பட்டனர்.

துறைமுக நகரமான ஏதனிலும் போராட்டம் நடந்தது. போராட்டக்காரர்கள் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர்களுக்கு காயமேற்பட்டது. 22 பேர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். அதிபர் ஆயுள் முடியும்வரை ஆட்சிபுரிய வழிவகைச் செய்யும் வகையிலான சட்டம் மக்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

துனீசியாவில் நடந்த மக்கள் புரட்சிக்கு பிறகு விலைவாசியை கட்டுப்படுத்தவும் வரிவிதிப்பை பாதியாக குறைக்கவும் அப்துல்லாஹ் ஸாலிஹ் உத்தரவிட்டிருந்தார். அத்துடன் போராட்டத்தை எதிர்கொள்ள முக்கிய இடங்களில் அதிக அளவிலான போலீசாரையும், ராணுவத்தினரையும் அனுப்பியிருந்தார்.

கடந்த 30 ஆண்டுகளாக யெமனை ஆட்சி புரிந்துவரும் அப்துல்லாஹ் ஸாலிஹின் ஆட்சியின் கீழ் பாதிக்கும் மேற்பட்ட மக்களும் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளனர்.

இதற்கிடையே துனீசியாவில் இடைக்கால அரசுக்கெதிரான மக்கள் எதிர்ப்பு பேரணி தலைநகரமான துனீஸை வந்தடைந்தது. மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டைவிட்டு வெளியேறிய பின் அலியின் கீழ் பிரதமராக பதவி வகித்த முஹம்மது கன்னோசி தற்போது பிரதமராகவே தொடர்கிறார். இதற்கு எதிராகத்தான் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கன்னோசி ஐக்கிய அரசை உருவாக்குவதாக அறிவித்திருந்தாலும், பின் அலியின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அனைவரும் ராஜினாமாச் செய்யவேண்டுமென்பது தான் எதிர்கட்சிகள் மற்றும் மக்கள் நல இயக்கங்களின் கோரிக்கையாகும்.

போராட்டத்தில் போலீஸ்காரர்களும் பங்கேற்கின்றனர். துனீசியாவில் நடந்த போராட்டத்தில் 78 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் தெரிவித்திருந்தாலும், 100க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என ஐ.நா கூறுகிறது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "முஸ்லிம் நாடுகளில் பரவுகிறது அரசுக்கெதிரான மக்கள் திரள் போராட்டம்"

கருத்துரையிடுக