17 பிப்., 2011

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 7

அமெரிக்காவின் ஏகாதிபத்தியக் கொள்கைகளைப் பரப்பும் முகமாக அங்கே அனைத்து ஊடகங்களும் வரிந்து கட்டிக்கொண்டு செயல்படுகின்றன என்று சென்ற தொடரில் கண்டோம்.

இனி இந்தியாவை எடுத்துக்கொள்வோம். இங்கேயும் அதிக வித்தியாசம் ஒன்றும் இல்லை.

ஒரு காலத்தில் இந்திய நாளிதழ்கள் துப்பறிவதற்குப் பெயர் போனதாக விளங்கின. எந்தச் சம்பவம் நிகழ்ந்தாலும் உடனே செய்தியாளர்கள் களத்தில் இறங்குவார்கள். பரபரப்பாக இயங்குவார்கள். அலசி ஆராய்ந்து உண்மைச் செய்திகளை உடனுக்குடன் உலகுக்கு தருவார்கள். யாரும் செல்ல முடியாத இடத்திற்கும் 'அலேக்காக' சென்று, எவருக்கும் கிடைக்காத செய்திகளை அள்ளிக் கொண்டு வந்து விடுவார்கள் நமது செய்தியாளர்கள். அவ்வளவு திறமை படைத்தவர்களாக செய்தியாளர்கள் விளங்கினார்கள்.

எனவேதான் "புகை செல்ல முடியாத இடத்திற்குக் கூட பத்திரிகையாளர்கள் சென்று விடுவார்கள்" என்று நம் பத்திரிகையாளர்களைப் பாராட்டும் விதமாகக் கூறுவார்கள்.

ஆனால் இன்று அந்த உயர்ந்த பாரம்பரியம் மங்கி வருகின்றது.பழைய துப்பறியும் ஆர்வமும், துடிப்பும் மாயமாகி வருகிறது.

அதுவும் குண்டுவெடிப்புகள் என்றால் கேட்கவே வேண்டாம். குண்டுவெடிப்பு நடந்து அடுத்த நிமிடமே "முஸ்லிம் தீவிரவாதிகள்தான் இதனைச் செய்தார்கள்" என்று வாய்க்கு வந்த ஏதாவது ஒரு பெயரைச் சொல்லி, "இந்த அமைப்பினரின் அடையாளங்கள் கிடைத்துள்ளன" என்று கையில் மைக்கைப் பிடித்துக்கொண்டு மணிக்கணக்காக தொலைக்காட்சியில் நமது நிருபர்கள் பேசிக் கொண்டிருக்கும் காட்சியைத்தான் இப்பொழுது நாம் கண்டுகொண்டிருக்கிறோம்.

இதற்கெல்லாம் என்ன காரணம்?

சங்கப் பரிவார சனதான ஹிந்துத்துவவாதிகள் இந்த ஊடகத் துறையில் ஊடுருவியதுதான் இதற்கு மிக முக்கிய காரணம்.

அவர்கள் உள்ளே நுழைந்து நமது செய்தித் தாள்களின் பாரம்பரியத்தையே மாற்றி விட்டார்கள். சம்பவங்களை அலசி ஆராய்ந்து, துப்பறிந்து உண்மைக் குற்றவாளிகளை உலகுக்கு உணர்த்திய அந்தப் பாரம்பரிம் இன்று இந்தச் சண்டாளர்களால் சிதைந்து போனது.

இவர்களது ஒரே நிகழ்ச்சித் திட்டம் முஸ்லிம்களைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவது, அவர்களது குடும்பங்களைச் சிதைப்பது. குண்டுவெடிப்புகள் நடந்தபொழுதெல்லாம் இந்தப் பாவிகள் அப்பாவி முஸ்லிம்களைக் கை காட்டினார்கள். உடனே அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். சிறையில் அடைக்கப்பட்டார்கள். சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டார்கள்.

முஸ்லிம்களைக் குற்றம் சுமத்தி செய்திகளையும், கட்டுரைகளையும் வெளியிடும் பிரவீன் சுவாமி போன்ற பத்திரிகையாளர்களுக்கு பாராட்டுகள் மழை போல் குவிந்தன. விருதுகள் வீடு தேடி வந்தன. கைது செய்த காவல்துறை அதிகாரிகளுக்கோ விருதும், பதவி உயர்வும், சம்பள உயர்வும்.

ஆனால் தற்பொழுது என்ன செய்திகள் வெளிவருகின்றன? வைத்த குண்டுகள் அனைத்தும் ஹிந்துத்துவ குண்டர்களின் கைவரிசையே என்பது நிரூபணமாகி வருகின்றது. வரிசையாக அவர்கள் கைது செய்யப்படுகின்றார்கள். இந்தக் குண்டுவெடிப்புகளின் சூத்திரதாரி சுவாமி அசிமானந்தா அனைத்தையும் அம்பலப்படுத்துகிறார்.

இன்ஷா அல்லாஹ் இந்தக் குண்டுவெடிப்புகள் பற்றி விரிவாக பின்னர் பார்ப்போம்.

இந்தியாவில் ஆங்கிலத்தில் வெளியாகும் செய்தித்தாள்கள் அனைத்தும் பெரும் பெரும் வணிக நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன.

இவைகள் "ஜூட் பிரஸ்" என்று அறியப்பட்டன. ஏனெனில் அந்தக் காலத்தில் கல்கத்தாவில்தான் ஜூட் என்ற சணல் தொழிற்சாலைகள் அதிகம் இருந்தன. ஆங்கில செய்தித்தாள்கள் ஆரம்பித்தவுடன் அந்தச் சணல் தொழிற்சாலைகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்கத் துவங்கியது. ஏனெனில் தாள் தயாரிப்பதற்காக செய்தித்தாள் முதலாளிகள் இந்தச் சணலை அதிகம் வாங்க ஆரம்பித்தனர்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆகியவை நாடு முழுவதும் வியாபித்திருக்கும் மிகப் பெரிய ஆங்கில செய்தித் தாள்கள். அவை வலதுசாரி பொருளாதாரக் கொள்கைகளையே ஆதரித்தன. துரதிர்ஷ்டவசமாக, இந்தச் செய்தித்தாள்கள் இஸ்லாம், முஸ்லிம் என்று வரும்பொழுது தங்கள் வெறுப்பையும், துவேஷத்தையும் வெளிக்காட்டத் தவறுவதேயில்லை.

அவை இஸ்லாமியக் கொள்கைகளுக்கும், முஸ்லிம்களுக்கும் மட்டும் எதிரானவை அல்ல. இன்னும் பல விஷயங்களுக்கும் எதிரானவை. அவை என்னென்ன என்பதைப் பார்ப்போம்.
இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில்...
MSAH

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மீடியா உலகில் முஸ்லிம்கள் – 7"

கருத்துரையிடுக