23 பிப்., 2011

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 8

தி இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆகிய ஆங்கில நாளிதழ்கள் இஸ்லாமியக் கொள்கைகளுக்கும், முஸ்லிம்களுக்கும் மட்டும் எதிரானவை அல்ல. இன்னும் பல விஷயங்களுக்கும் எதிரானவை என்று சென்ற தொடரில் பார்த்தோம்.

இந்த ஆங்கில நாளிதழ்கள் கூட்டாட்சி, இடஒதுக்கீடு, தன்னாட்சி, ஏழைகளுக்கு மானியம் வழங்குதல், நாட்டு நலப்பணித் திட்டங்கள் போன்ற மக்களுக்கு நன்மை சேர்க்கும் அனைத்துக் கொள்கைகளுக்கும் எதிரானவை.

அதிகார வர்க்கம் என்ன எண்ணுகிறதோ அவையே இந்த நாளிதழ்களில் பிரதிபலிக்கும்.

தேசிய அளவில் தரமான ஆங்கில நாளிதழ்களே இப்படி இயங்குகின்றன என்றால் உள்ளூர் பத்திரிகைகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். அவை இன்னும் மோசமாக இயங்குகின்றன.

ஆங்கில நாளிதழ்கள்தான் இப்படி என்றால் ஆங்கில வாரப் பத்திரிகைகளும், மாதமிரு பத்திரிகைகளும் இவற்றிற்கு கொஞ்சமும் சளைத்தவையல்ல.

பிரபல ஆங்கில வாரப் பத்திரிகையான இந்தியா டுடே பட்டவர்த்தனமாக முஸ்லிம்களுக்கெதிராக எழுதும் பத்திரிகை. அது குரல் கொடுக்கும் பொருளாதாரக் கொள்கை என்பது மேல்தட்டு வர்க்கத்தினருக்கு மட்டுமே நன்மை சேர்ப்பவை. இந்தியாவின் ஏழைகளுக்கு அது எந்தவிதத்திலும் உதவப் போவதில்லை.

ஆங்கில நாளிதழ்களுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிகம் படிக்கப்படுபவை ஹிந்தி நாளிதழ்கள். இவை முஸ்லிம்களுக்கெதிரான இனப் படுகொலைகளைத் தூண்டி விடுவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. அதேபோல் "முஸ்லிம் பயங்கரவாதிகள்" என்று பக்கம் பக்கமாகக் கதைகள் எழுதி பீதியை உண்டுபண்ணுவதிலும் ஹிந்தி நாளிதழ்கள் முன்னிலை வகிக்கின்றன.

ஏன் இந்தப் பாரபட்ச நிலை?
இந்தக் கேள்விக்கு விடை தேட வேண்டுமென்றால் முக்கிய நாளிதழ்களில் பணி புரியும் பத்திரிகையாளர்களைப் பற்றிப் பார்க்க வேண்டும்.

இந்த மக்களில் பெரும்பாலோர் நகரங்களில் வாழும் உயர் ஜாதிக்காரர்களே! அவர்கள் தங்கள் மதத்தையும், தாங்கள் சார்ந்திருக்கும் கலாச்சாரப் பாரம்பரியங்களையும் செய்தி அறைகள் (News Rooms) வரை கொண்டு வந்து விடுகிறார்கள்.

முஸ்லிம் விரோதக் கருத்துகளையும், தலித் விரோதக் கருத்துகளையும் எழுதுவதையும், ஒலி-ஒளி பரப்புவதையும் தங்கள் பிறந்த கடனாகவே இத்தகையவர்கள் கருதுகிறார்கள்.

தலித்துகளுக்கும், முஸ்லிம்களுக்கும் இந்திய நாளிதழிகளின் ஆசிரியர் குழுக்களில் (Editorial Boards) உரிய பிரதிநிதித்துவம் கொடுக்கப்படவில்லை என்பது நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. அதில் எந்த அதிசயமும் இல்லை.

இந்திய காட்சி ஊடகங்களில் செய்தியாளர்களாக ஒரு தலித் கூட இல்லை என்று முன்பு சொல்வார்கள். இப்பொழுது அந்த நிலை மாறியுள்ளதா என்று தெரியவில்லை.

இந்தக் காட்சி ஊடகங்கள் இந்திய சமூகத்தைப் பற்றிய தவறான பிம்பத்தைப் பிரதிபலிக்கின்றன. அவை இந்திய சமூகத்தைப் பகட்டானதாக காட்சிப்படுத்தும், ஆடம்பரமானதாகக் காட்டும்.

குறைந்த வணிகர்களே கோலோச்சும் சந்தையை ஆலிகோபோலி (Oligopoly) என்று குறிப்பிடுவார்கள். இந்த ஆலிகோபோலியை நிலைநிறுத்தும் விதமாகவே இந்தியக் காட்சி ஊடகங்கள் அமைந்திருக்கின்றன.

ஹிந்துத்துவா ஃபாசிசம் வளர்ச்சியடைந்ததன் விளைவை சமீபத்தில் நாம் காட்சி ஊடகத்தில் கண்டோம். அதுதான் ராமாயணா தொடர்! ராமாயணா தொடர் உண்மையில் உதவி புரிந்தது ஹிந்துத்துவா ஃபாசிஸ்டுகளுக்குத்தான்.

ஆம்! அந்தத் தொடர் வந்தபின்தான் ஹிந்து வசீகரம் இந்தியா முழுவதும் பட்டாசு போல் வெடித்தது. அந்தத் தொடர் வந்தபின்தான் ஹிந்துத்துவா ஆட்சியில் ஏறி அமர்ந்தது. ஆறு ஆண்டுகள் நாட்டை நாசப்படுத்தியது. இவர்கள் ஆட்சிக்கு வந்த பின் ரணகளமானது மொத்த தேசம் மட்டும் அல்ல, மொத்த மீடியாவும்தான். அது எப்படி என்று அடுத்தடுத்து பார்ப்போம்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
MSAH

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மீடியா உலகில் முஸ்லிம்கள் – 8"

கருத்துரையிடுக