10 பிப்., 2011

மிரட்டும் சுலைமான், அடம் பிடிக்கும் முபாரக், அசராத மக்கள்

கெய்ரோ,பிப்:எகிப்து சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் பதவி விலகக்கோரி அந்நாட்டு மக்கள் நடத்திவரும் எழுச்சிமிகு போராட்டம் 16-வது நாளை தாண்டிவிட்டது. ஆனால், பதவியை விட்டு விலகாமல் அடம்பிடித்து வருகிறார் ஹுஸ்னி முபாரக். எகிப்தின் முக்கிய எதிர்கட்சியான முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் முபாரக் பதவி விலகியே தீரவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் அந்நாட்டு துணை அதிபராக நியமிக்கப்பட்டிருக்கும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நண்பனான உமர் சுலைமான், ராணுவ புரட்சி ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகளிருப்பதாக மறைமுகமாக மிரட்டியுள்ளார்.

மக்களின் எழுச்சியை எப்படியாவது அடக்கிவிடலாம் என கக்கணங்கட்டிக் கொண்டு செயல்பட்டு வரும் உமர் சுலைமான் எதிர்கட்சியினரை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்புவிடுத்துள்ளார். மேலும் மக்களின் எழுச்சிப் போராட்டம் தொடருமானால் புரட்சி ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும், இது நாட்டின் ஸ்திரத்தன்மையை பாதிக்கும் எனவும் மிரட்டும்
தொனியில் கூறியுள்ளார்.

புரட்சி ஏற்படும் சாத்தியம் என உமர் சுலைமான் கூறியிருப்பது ராணுவப் புரட்சியைத்தான் அதாவது, மக்கள் எழுச்சியை அடக்கி ஒடுக்க ராணுவம் ஆட்சியை கைப்பற்றும் என்பதைத்தான் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார் என கருதப்படுகிறது.

எகிப்தில் நடந்துவரும் வெகுஜன எழுச்சிப் போராட்டம் 16-வது நாளை தாண்டிவிட்டது. நாடுதழுவிய அளவில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. தொழிலாளர் அமைப்புகளெல்லாம் இப்போராட்டத்தில் கலந்துக்கொண்டு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளன. 'முபாரக் வெளியேறும் வரை நாங்கள் வெளியேறமாட்டோம்' என்ற உறுதியுடன் பொதுமக்கள் எழுச்சிப் போராட்டத்தில் கலந்துள்ளனர்.

முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான முஹம்மது முர்ஸி கூறியதாவது: "முபாரக் பதவி விலகியே தீரவேண்டும். புதிய சகாப்தம் துவங்கப் போகிறது. எங்கள் இயக்கம் வெளிப்படையாக அரசுடன் பேச தயாராக இருக்கிறது. சிலர் இந்த பேச்சுவார்த்தையை தனிப்பட்ட ரீதியாக கருதுகிறார்கள். நாங்கள் பெரும்பான்மையில்லை. மாறாக எகிப்திய மக்களுடன் நாங்கள் பெரும்பான்மையாக இருக்கிறோம் ("We are with the majority of the Egyptian people... We are not the majority."). இந்த அரசு தோற்றுவிட்டது. நாங்கள் மக்களின் உறுதிக்கு ஆதரவாக இருக்கிறோம்." இவ்வாறு முர்ஸி தெரிவித்துள்ளார்.

முபாரக் வெளியேறும் வரை எவ்வித பேச்சுவார்த்தைக்கும் நாங்கள் தயாரில்லை. அவர் வெளியேறிய பிறகு அனைத்துப் பிரச்சனைகளைக் குறித்தும் பேசலாம் என எஸ்ஸாம் மக்தி என்ற 35 வயது வழக்கறிஞர் தெரிவிக்கிறார். இவர் கடந்த ஜனவரி 28-ஆம் தேதியிலிருந்து போராட்டத்தில் கலந்துக் கொண்டுள்ளார். இரவில் ராணுவ டாங்கின் அடியில்தான் தூங்குகிறார். இவரைப்போல ஆயிரக்கணக்கான மக்கள் கடுங்குளிரையும் தாங்கிக்கொண்டு இரவு நேரங்களில் தஹ்ரீர் சதுக்கத்தில் ராணுவ டாங்குகளின் அடியில்தான் தூங்குகின்றனர்.

"தளர்ந்துவிடாதீர்கள். சோர்ந்துவிடாதீர்கள். சுதந்திரம் இலவசமாக கிடைக்காது" என பேச்சாளர்கள் மக்களுக்கு எழுச்சியூட்டுகின்றனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மிரட்டும் சுலைமான், அடம் பிடிக்கும் முபாரக், அசராத மக்கள்"

கருத்துரையிடுக