12 பிப்., 2011

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

இஸ்லாமாபாத்,பிப்.12:இரண்டுபேரை சுட்டுக்கொன்ற வழக்கில் கைதான அமெரிக்க தூதரக அதிகாரி ரேமண்ட் டேவிஸை உடனடியாக விடுதலைச் செய்யாவிட்டால் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமெரிக்கா பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பெயர் வெளியிட விரும்பாத இரண்டு பாகிஸ்தான் அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஏ.பி.சி செய்தி சேனல் இதுத் தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் பாகிஸ்தானின் தூதர் ஹுஸைன் ஹக்கானியை வெளியேற்றுவோம் எனவும், பாகிஸ்தானில் அமெரிக்க தூதரகங்களை இழுத்து மூடப்போவதாகவும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டாம் டோனிலன் மிரட்டல் விடுத்துள்ளதாக அச்செய்தி கூறுகிறது.

அமெரிக்காவிற்கு செல்லவிருக்கும் பாகிஸ்தான் அதிபரின் சுற்றுப்பயணத்தை ரத்துச்செய்யப் போவதாகவும் டோனிலன் எச்சரித்துள்ளதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அதேவேளையில் ஏ.பி.சி சேனல் வெளியிட்ட செய்திகளை வெள்ளைமாளிகை செய்தித் தொடர்பாளர் டோமி பீட்டர் மறுத்துள்ளார். இப்புதிய சர்ச்சையை ஹக்கானியும் ட்விட்டரில் மறுத்துள்ளார். அமெரிக்க அதிகாரிகளோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகரோ தன்னை மிரட்டவில்லை என ஹக்கானி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்துவரும் கோடிக்கணக்கான டாலர் மதிப்பிலான நிதியுதவி இதனால் பாதிக்கப்படும் என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்கா பாகிஸ்தானுடனான அனைத்து உறவுகளையும் முறித்துவிட்டதாக வாஷிங்டன் போஸ்ட் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது.

ஆனால், இச்செய்தியை மறுத்துள்ள வெள்ளைமாளிகை வட்டாரங்கள், ரேமண்ட் டேவிஸின் விடுதலைத் தொடர்பாக பேச்சுவார்த்தை தொடருமெனவும், பாகிஸ்தானுடன் நல்ல உறவு அமெரிக்காவுக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை"

கருத்துரையிடுக