துருக்கியின் இஸ்லாமிய பாரம்பரியத்தை தகர்த்தெறிந்த முஸ்தபா கமால் பாஷாவின் வழித் தோன்றல்களால் பல்வேறு அடக்குமுறைக்கு ஆளான பிறகும் எவ்வித சமரசத்திற்குமிடையின்றி ஜனநாயக உரிமைகளுக்காக போராட ஐந்து கட்சிகளை உருவாக்க வேண்டிய சூழல் அர்பகானுக்கு ஏற்பட்டது. கடைசியாக நோயால் படுக்கையில் கிடக்கும் வேளையில் ஃபெசிலிட்டி கட்சியின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த பத்தாண்டுகளாக துருக்கியை உலக அரங்கில் சக்திமிக்க நாடாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கும் அந்நாட்டின் பிரதமர் ரஜப் தய்யிப் உருதுகான் மற்றும் அதிபர் அப்துல்லாஹ் குல் ஆகியோருக்கு குரு அர்பகானாவார்.
அர்பகானின் கொள்கைகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் உருதுகானின் இஸ்லாமிய வாதிகளுக்கு ஆதரவான நீதி மற்றும் அபிவிருத்திக்கான கட்சி(ஏ.கே.கட்சி) உருவானது. இக்கட்சி 2002 மற்றும் 2007-ஆம் ஆண்டுகளில் நடந்த பொதுத் தேர்தல்களில் பெரும் வெற்றியை ஈட்டியது. அர்பகான் அரசியல் களத்தில் சந்தித்த சோதனைகள்தாம் ஏ.கே.கட்சிக்கு சக்தி மிகுந்த அடித்தளத்தை துருக்கியில் உருவாக்கியது. இதில் அரசியல் நோக்கர்களுக்கு இரண்டு வித அபிப்ராயம் இல்லை.
ஜெர்மன் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக் எஞ்சீனியரிங் துறையில் பி.ஹெச்.டி பட்டம் பெற்ற நஜ்முத்தீன் அர்பகான் அவர் சார்ந்த துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். அதன் விளைவாக பல்வேறு உபகரணங்களை உருவாக்கினார்.
1965-ஆம் ஆண்டு ஜெர்மனி தயாரித்த லெபேர்ட்ஸ்-1A என்ற பீரங்கியை உருவாக்கிய எஞ்சீனியர்கள் குழுவில் அர்பகான் முதன்மை எஞ்சினீயராக பணியாற்றினார்.
மெக்கானிக்கல் எஞ்சீனியரிங் துறையில் சிறப்புற்று விளங்கிய அர்பகான் 1969-ஆம் ஆண்டு மில்லி கோரஸ்(MilliGorus) (தேசிய பார்வை) என்ற பெயரில் கொள்கை அறிவிப்பை வெளியிட்டு துருக்கி அரசியல் களத்தில் காலடி எடுத்துவைத்தார்.
இஸ்லாத்தின் நீதியைக் குறித்து வாதிட்ட அர்பகான், தொழிற்புரட்சி, முன்னேற்றம், பொருளாதார சுதந்திரம் ஆகியவற்றைக் குறித்த தெளிவான பார்வையை கொண்டிருந்தார். ஐரோப்பாவின் பொது சந்தை என்ற கொள்கை துருக்கியின் இஸ்லாமிய பாரம்பரியத்தை அழித்தொழிப்பதற்கான சதித்திட்டம் என அர்பகான் எச்சரித்தார்.
1970-ஆம் ஆண்டு நேசனல் ஆர்டர் கட்சியை துவக்கி தீவிர அரசியலில் பங்கேற்றார் அர்பகான். ஆனால், மதசார்பற்ற கொள்கைகளுக்கு எதிரானது எனக் குற்றஞ்சாட்டப்பட்ட அக்கட்சி துவங்கி ஒன்றரை வருடத்திற்குள் தடைச் செய்யப்பட்டது.
1972-ஆம் ஆண்டு அர்பகான் நேசனல் ஸால்வேஷன் என்ற கட்சியைத் துவக்கினார். அக்கட்சி மக்கள் ஆதரவைப் பெறத் துவங்கியது. இந்நிலையில் 1973-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அர்பகானின் கட்சி 11.8 சதவீத வாக்குகளைப் பெற்றது. தேசிய அவையில் 48 இடங்களை கைப்பற்றியது. ஆனால், தீவிர மதசார்பற்றக் கட்சிகள், மற்றும் ராணுவத்தின் கடுமையான எதிர்ப்பையும், பிரச்சாரங்களையும் சந்தித்த அர்பகானின் கட்சிக்கு 1977-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வாக்கு சதவீதமும், இடங்களும் குறைந்தன. முந்தைய தேர்தலின் போது கிடைத்ததில் பாதி இடங்களே இம்முறை அக்கட்சிக்கு கிடைத்தது.
1980-ஆம் ஆண்டு ராணுவம் நடத்திய புரட்சியின்போது அர்பகானின் ஸால்வேஷன் கட்சி தடைச் செய்யப்பட்டது.
நெருக்கடிகளால் தளராத அர்பகான் 1987-ஆம் ஆண்டு நீதி நமது லட்சியம் என்பதை அடிப்படையாகக் கொண்டு ரஃபா(சேவை) என்ற பெயரில் கட்சி ஒன்றைத் துவக்கினார். தற்பொழுது அவருக்கு ஆதரவாக அலி துருக்மான், அஹ்மத் தெக்தால் ஆகியோர் உடனிருந்தனர். மேயர் தேர்தல்களில் ரஃபா கட்சி போட்டியிட்டது. மூன்று நகரங்களில் ஆட்சியை கைப்பற்றியது.
1991-ஆம் ஆண்டு தீவிர தேசியவாத கட்சியான நேசனலிஸ்ட் மூவ்மெண்ட் கட்சி, ரிஃபார்மிஸ்ட் டெமோக்ரேடிக் கட்சி ஆகியவற்றுடன் சேர்ந்து பாராளுமன்றத் தேர்தலில் ரஃபா கட்சி போட்டியிட்டது. 1995-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மஸ்ஊத் இல்மாஸ், முன்னாள் பிரதமர் தான்ஸு சில்லரு ஆகியோரின் தலைமையிலான கட்சியில் ஏற்பட்ட தகராறு ரஃபா கட்சிக்கு ஆதாயமாக மாறியது. சில்லரின் பாத் கட்சியுடன் கூட்டணி அமைத்த அர்பகான் தேர்தலில் ரஃபா கட்சிக் கூட்டணியை வெற்றி வாகை சூடவைத்தார். முஸ்லிம் துருக்கியின் வரலாற்றில் முதன்முதலாக ஒரு இஸ்லாமியவாதி அந்நாட்டின் பிரதமரானார்.
முஸ்லிம் நாடுகளுடன் நெருக்கத்தை அதிகப்படுத்தும் விதமாக கொள்கைகளை வகுத்தார் அர்பகான். இதன் ஒரு பகுதியாக எட்டு முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பான டி-8 என்ற அமைப்பை உருவாக்கினார் அவர்.
சியோனிஸ்டுகளுடன் எவ்வித சமரசத்திற்குமிடமில்லை என அர்பகான் பிரகடனப்படுத்தினார். ஆனால், அவரது எதிரிகள் அடங்கியிருக்கவில்லை. அர்பகானை பதவியிலிருந்து இறக்குவதற்கு ராணுவத்தின் உயர்மட்டத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவாக பதவியேற்று ஒரு வருடம் கழித்து ராஜினாமாச் செய்யவேண்டிய நிர்பந்தமான சூழல் அர்பகானுக்கு ஏற்பட்டது.
ரஃபா கட்சிக்கு மட்டுமல்ல அர்பகானின் அரசியல் வாழ்க்கைக்கும் புதிய அரசு தடைவிதித்தது. ரஃபா கட்சியின் தடையை 1998-ஆம் ஆண்டு ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம் உறுதிச்செய்த போதிலும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் என்ற மனித உரிமை அமைப்பு கடுமையாக விமர்சித்தது.
1998-ஆம் ஆண்டு அர்பகான் உருவாக்கிய வெர்ச்சு கட்சிக்கும் அதிக ஆயுள் நீடிக்கவில்லை. 2001-ஆம் ஆண்டு அரசியல் சட்ட நீதிமன்றம் அக்கட்சியை தடைச் செய்தது. இப்பொழுதும் அவர் மதசார்பற்ற கொள்கைகளை மீறிவிட்டார் என குற்றம் சுமத்தப்பட்டது. அர்பகானின் ஆதரவாளர்கள் ஃபெசிலிட்டி கட்சியை உருவாக்கிய பொழுது அவருடைய கொள்கைகளில் கருத்து வேறுபாடுக் கொண்டவர்கள் 'நீதி மற்றும் அபிவிருத்திக்கான கட்சி'யை(ஏ.கெ.கட்சி) துவக்கினர்.
இஸ்லாமிய சித்தாந்தங்களுடன் தாராளமயமாக்கல் தத்துவங்களையும் பிரச்சாரம் செய்து களமிறங்கிய ஏ.கே.கட்சியின் முயற்சிகள் சரியானதுதான் என்பதை கடந்த இரண்டு தேர்தலுகளும் நிரூபித்து வருகின்றன.
பிரதமர் உருதுகான் கட்சிக்கு துருக்கி பாராளுமன்றத்தில் 334 இடங்கள் உள்ளன. எதிர்கட்சியான ரிபப்ளிகன் கட்சிக்கு 101 இடங்களே உள்ளன.
அரசியலில் தளத்தில் இஸ்லாமிய கொள்கைகளை இறுகப் பற்றிய அர்பகான் தனிப்பட்டரீதியில் பல்வேறு சோதனைகளை சந்தித்தார். ராணுவத்தின் வாள் முனையில் அவர் அரசியலை நடத்திக்கொண்டிருந்தார்.
1960 முதல் 1997 வரை துருக்கி ராணுவம் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்புகளில் பலிகடாவான ஒரே தலைவர் அர்பகானாவார். தற்பொழுது துருக்கியில் ஜனநாயகம் தழைத்தோங்கி ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட ராணுவ அதிகாரிகள் விசாரணையை சந்தித்து வருகின்றனர். இத்தகையதொரு சூழலுக்கு நஜ்முத்தீன் அர்பகான் அளித்த சேவையை பாராட்டித்தான் ஆகவேண்டும்.
ASA
0 கருத்துகள்: on "நஜ்முத்தீன் அர்பகான் - மறக்கமுடியாத இஸ்லாமிய ஆளுமை"
கருத்துரையிடுக