21 பிப்., 2011

மும்பை தாக்குதல் வழக்கு கசாபுக்கு தூக்கு உறுதி, ஃபஹீ​ம் அன்சாரி, சபாவுதீன் அஹமது விடுதலையும் உறுதி

மும்பை,பிப்.21:மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாப்புக்கு மும்பை தனி நீதிமன்றம் வழங்கிய தூக்குத் தண்டனையை உறுதிப்படுத்தி மும்பை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. மேலும் நிரபராதிகளான பஹீம் அன்சாரி,சபாவுதீன் ஆகியோருக்கு தனி நீதிமன்றம் வழங்கிய விடுதலையையும் உறுதி செய்தது

2008ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி, கசாப் உள்பட 10 பேர் மும்பைக்குள் புகுந்து தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டு 166 பேரின் உயிரைப் பறித்தனர். 3 நாள் நீடித்த இந்த பயங்கர சம்பவத்தில், கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான். மற்ற 9 பேரும் கமாண்டோப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

கசாப் மீதான வழக்கை விசாரித்த மும்பை தனி நீதிமன்றம், அவனுக்கு தூக்குத் தண்டனை அளித்து உத்தரவிட்டது. இந்த தண்டனை தற்போது உறுதிப்படுத்தப்படுவதற்காக மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. இன்று அந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

வீடியோ கான்பரன்ஸிங் மூலம் நீதிபதிகள் ரஞ்சனா தேசாய், ஆர்.வி.மோரே ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு கசாப் ஆஜர்படுத்தப்பட்டான். அப்போது, தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி கசாப் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பாதுகாப்பு கருதி கசாப்பை, உயர்நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லவில்லை. தீர்ப்பை எதிர்கொள்ள கசாப் இன்று அதிகாலையிலேயே தயாராகி விட்டான்.

உயர்நீதிமன்றத்தில் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இதை எதிர்த்து அடுத்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்ய கசாப்புக்கு வாய்ப்பளிக்கப்படும். அதிலும் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டால், மறு ஆய்வு மனு தாக்கல் செய்யலாம். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டால், தூக்கிலிடுவதற்கு நாள் குறிக்கப்படும். இருப்பினும் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் என பல்வேறு வசதிகள் தூக்குத் தண்டனைக் கைதிகளுக்கு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியர்கள் விடுதலை
இதேபோல மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த பஹீம் அன்சாரி, சபாவுதீன் அகமது ஆகிய இரு இந்தியர்களையும் விடுதலை செய்து மும்பை தனி நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதை எதிர்த்து அரசுத் தரப்பு தாக்கல் செய்திருந்த மேல் முறையீட்டு மனு மீதும் இன்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதில், தனி நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த இருவர் மீதான வழக்கை சரிவர விசாரிக்கவில்லை என்று அப்போது தனி நீதிமன்றம், போலீஸைக் கண்டித்திருந்தது. இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டிற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும் ஆதாரங்கள் சரிவர திரட்டப்படவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது நினைவிருக்கலாம்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மும்பை தாக்குதல் வழக்கு கசாபுக்கு தூக்கு உறுதி, ஃபஹீ​ம் அன்சாரி, சபாவுதீன் அஹமது விடுதலையும் உறுதி"

கருத்துரையிடுக