11 பிப்., 2011

தமிழ்நாட்டில் இந்த ஆண்டும் மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு இல்லை - அரசு உறுதி

சென்னை,பிப்.11:தமிழகத்தில் இந்த ஆண்டும் மருத்துவ படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படாது என்று சட்டசபையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.

தமிழ்நாட்டில் மருத்துவ மற்றும் என்ஜினீயரிங் படிப்புகளுக்கு நடத்தப்பட்டு வந்த நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்போவதாக இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்தது. இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் மத்திய அரசு இது குறித்து இறுதி முடிவு எடுக்காமல் இழுத்தடித்து வருகிறது.

இந்நிலையில் தமிழக சட்டசபையில் நேற்று இது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இடைக்கால பட்ஜெட் மீதான பொதுவிவாதத்தின் மீது பேசிய அதிமுக எம்.எல்.ஏ. சி.வி.சண்முகம், மருத்துவ படிப்பில் சேர்வதற்கான பொது நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. அந்த சட்டம் இதுவரை திரும்பப் பெறப்படவில்லை. இதில், தமிழக அரசின் நிலை என்ன என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி, நிச்சயமாக தமிழகத்தில் நுழைவுத் தேர்வு வராது என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. மத்திய மனித வளத்துறை அமைச்சர் கபில்சிபலும் உறுதி அளித்திருக்கிறார். மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்காமல் நுழைவுத் தேர்வை அனுமதிக்கமாட்டோம் என்று தெரிவித்துள்ளார். அதனால் தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மருத்துவ படிப்பிற்கு பொது நுழைவுத் தேர்வு இருக்காது என்றார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "தமிழ்நாட்டில் இந்த ஆண்டும் மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு இல்லை - அரசு உறுதி"

கருத்துரையிடுக