13 பிப்., 2011

எகிப்து:ஜனநாயகத்தை உறுதிச் செய்வோம் - ராணுவம்

கெய்ரோ,பிப்.13:எகிப்தில் 30 ஆண்டுகாலமாக சர்வாதிகார ஆட்சிபுரிந்த ஹுஸ்னி முபாரக் மக்கள் புரட்சியைத் தொடர்ந்து பதவியிலிருந்து விலகினார்.

எகிப்தின் அரசு அதிகாரத்தை அந்நாட்டு ராணுவம் தம் வசம் கொண்டுவந்தது. இந்நிலையில் எகிப்தில் ஜனநாயக ரீதியிலான அரசு அமைவது குறித்து தீவிரமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

சுதந்திர ஜனநாயக நாட்டை உருவாக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுக்கு வழிவகைச் செய்வோம் என ராணுவம் அறிவித்துள்ளது. அதேவேளையில், ஜனநாயக கட்டமைப்பு உருவாகும்வரை முந்தைய ஆட்சியாளர்கள் பதவியில் தொடருமாறு ராணுவம் கேட்டுக்கொண்டுள்ளது.

தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் மூலம் ஜனநாயகத்தை உறுதிச் செய்வோம் என்ற வாக்குறுதியை எகிப்து ராணுவத்தின் சுப்ரீம் கவுன்சில் அளித்தது. ஆனால், எப்பொழுது ஆட்சியை ஒப்படைப்போம் என்பது குறித்த நேர நிர்ணயத்தை ராணுவம் இதுவரை அறிவிக்கவில்லை.

ஜனநாயகத்திற்கான அமைதியான மாற்றத்தை உறுதிச் செய்வோம். எல்லா பிராந்திய-சர்வதேச ஒப்பந்தங்களையும், உடன்படிக்கைகளையும் மதிப்போம் என ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

உயர் அதிகாரிகள் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு ராணுவம் தடை விதித்துள்ளது. அரசியல் மாற்றத்திற்கு பிறகும் எகிப்து தங்களுடனான உறவை பழையதுபோல் தொடரும் என நம்புவதாக இஸ்ரேல் அறிவித்திருந்தது. இதற்கான பதிலாக பிராந்திய-சர்வதேச ஒப்பந்தங்களை பேணுவோம் என ராணுவம் அறிவித்தது.

முபாரக்கின் ராஜினாமாவுக்கு வழி ஏற்படுத்திய எழுச்சிப் போராட்டம், எகிப்தில் ஜனநாயக கட்டமைப்பு உருவாகும்வரை தொடரும் என கூறியவாறு ஆயிரக்கணக்கானோர் தற்பொழுதும் தஹ்ரீர் சதுக்கத்தில் திரண்டுள்ளனர். எகிப்து விரைவாக ஜனநாயக ஆட்சிக்கு மாறவேண்டுமென அமெரிக்கா உட்பட பல்வேறு உலக நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

ஹுஸ்னி முபாரக்கின் ஆட்சியில் பதவி வகித்த எத்தனைபேர் தொடர வேண்டுமென்றோ அல்லது பதவி விலகவேண்டுமென்றோ தெளிவுப்படுத்தப்படவில்லை. ஆனால், தற்போதைய அமைச்சரவையை கலைத்து விடுவதாகவும், புதியதாக தேர்தல் நடத்தப்படும் எனவும் ராணுவ சுப்ரீம் கவுன்சில் அறிவித்துள்ளது.

ராணுவ ஜெனரல்களைக் கொண்ட சுப்ரீம் கவுன்சிலின் தலைவர் எகிப்தின் பாதுகாப்புத்துறை அமைச்சரான தன்தாவி ஆவார். தன்தாவி அரசியல் மாற்றத்தை விரும்புகிறார் என சமீபத்தில் விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்கள் தெரிவித்தன.

துணை அதிபர் உமர் சுலைமானும், பிரதமர் அஹ்மத் ஷஃபீக்கும் முன்னாள் ராணுவ அதிகாரிகளாக இருப்பதால் அதிகாரத்தை மக்களிடம் ஒப்படைப்பதற்கான கால தாமதம் மீண்டும் புரட்சிக்கு வழிவகுக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

ராணுவம் அதிகாரத்தை மக்களிடம் ஒப்படைக்க வேண்டும். சுதந்திரமும், மனித உரிமைகளும் உறுதிச்செய்யும் அரசியல் சட்டம் உருவாக்க வேண்டுமென பிரதான எதிர்கட்சியான இஃவானுல் முஸ்லிமீன் வலியுறுத்தியுள்ளது. தங்களின் லட்சியம் நிறைவேறும்வரை போராட்டத்தை தொடருவோம் எனக்கூறி ஆயிரக்கணக்கானோர் தற்பொழுதும் தஹ்ரீர் சதுக்கத்தில் திரண்டுள்ளனர்.

அரசியல் கைதிகளை விடுதலைச் செய்யவேண்டும், ராணுவ நீதிமன்றத்தை கலைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை இவர்கள் முன்வைத்துள்ளனர். தேர்தல் நடக்கும்வரை மக்கள் அரசுதான் எகிப்தை ஆளவேண்டுமென இஃவானுல் முஸ்லிமீனின் ரஷாத் பயூமி தெரிவித்துள்ளார். மக்கள் தலைமை வகிக்கு முதன்மை கவுன்சில்தான் நாட்டை ஆளவேண்டும் என 'ஏப்ரல் 6 மூவ்மெண்டும்' வலியுறுத்தியுள்ளது.

அதேவேளையில் தஹ்ரீர் சதுக்கத்திலிருந்து தடுப்புகளை ராணுவம் மாற்றத் துவங்கியுள்ளது. அமைதியான புரட்சியின் மூலமாக எகிப்து நாட்டு மக்கள் உலகமுழுவதும் உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கருத்துத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல், ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து அரசியல் மாற்றத்தின் செல்வாக்கை புரிந்துகொள்ள ராணுவத்தின் சீஃப் ஆஃப் ஸ்டாஃப் அட்மிரல் மைக் முல்லனை ஒபாமா நியமித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "எகிப்து:ஜனநாயகத்தை உறுதிச் செய்வோம் - ராணுவம்"

கருத்துரையிடுக