27 பிப்., 2011

லிபியாவில் மக்கள் எழுச்சி அதிகரிப்பு​ - சாலையெங்கு​ம் உடல்கள் கிடக்கின்ற​ன - மீண்டு வந்த இந்தியர்கள்

டெல்லி,பிப்.27:லிபியாவில் மக்கள் எழுச்சி அதிகரித்துள்ளது. அவர்கள் மீது மிகக் கடுமையான தாக்குதல் நடந்து வருகிறது. சாலையெங்கும் உடல்களாக கிடக்கின்றன. அவற்றை புல்டோசர்கள் மூலம் அகற்றி குப்பைகளில் வீசுகிறார்கள் என்று அங்கிருந்து மீண்டு வந்த இந்தியர்கள் கூறியுள்ளனர்.

லிபியாவில் சிக்கித் தவித்து வரும் இந்தியர்களை மீட்க இரண்டு சிறப்பு விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் இயக்குகிறது. இந்த விமானங்கள் நேற்று லிபியா சென்று இரண்டு கட்டமாக 528 இந்தியர்களை மீட்டு கொண்டு வந்துள்ளன.

முதல் விமானம் 291 பேருடன் டெல்லிக்கு வந்து சேர்ந்தது. அதேபோல 237 பேருடன் இரண்டாவது விமானம் வந்து சேர்ந்தது. இரு விமானங்களிலும் ஏராளமான தமிழர்களும் வந்துள்ளனர்.

விமான நிலையத்தில் முகம்மது சாலி என்ற என்ஜீனியர் கூறுகையில், லிபியாவில் நிலைமை மோசமடைந்துள்ளது. மக்கள் வீடுகளிலேயே அடைந்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் உயிரைக் கையில் பிடித்தபடி வீடுகளுக்குள் அடைந்து கிடந்தோம்.

தண்ணீர், உணவு கிடைப்பதில் பெரும் சிரமம் நிலவுகிறது. மக்கள் தெருக்களில் இறங்கிப் போராடி வருகின்றனர். போலீஸாரை எங்குமே காண முடியவில்லை. காவல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மக்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை காணப்படுகிறது.

இதை பயன்படுத்திக் கொண்டு பலர் வீடுகளை சூறையாடிக் கொண்டிருக்கின்றனர். இறந்தவர்களின் உடல்கள் சாலைகளில் விழுந்து கிடக்கின்றன என்றார்.

தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், மக்கள் போராட்டம் பெரும் கலவரமாக மாறியுள்ளது. நாங்கள் விமான நிலையத்திற்கு வரும் வழியெங்கும் உடல்களைப் பார்த்தோம். அவற்றை புல்டோசர் மூலம் அள்ளி குப்பைகளில் வீசுகின்றனர். பாதுகாப்பு சுத்தமாக இல்லை என்றார்.

அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இந்தியத் தூதரகம் இன்னும் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

லிபியாவிலிருந்து மீண்டு வந்த இந்தியர்களை விமான நிலையத்தில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் இ.அகமது, வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவ் ஆகியோர் வரவேற்றனர்.

நேற்று வந்த விமானங்களில் தமிழகம், உ.பி., கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்ளைச் சேர்ந்தவர்கள், வெளியுறவுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.

thatstamil

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "லிபியாவில் மக்கள் எழுச்சி அதிகரிப்பு​ - சாலையெங்கு​ம் உடல்கள் கிடக்கின்ற​ன - மீண்டு வந்த இந்தியர்கள்"

கருத்துரையிடுக