ஹட்வாரா டவுணில் தீவிரவாதிகளை தேடுகிறோம் என்ற பெயரில் ராணுவம் நடத்திய தேடுதல் வேட்டையில் மன்சூர் அஹ்மத் மக்ரே(வயது.22) என்ற மாணவர் கொல்லப்பட்டார்.
இக்கொலையில் தொடர்புடைய ராணுவத்தினரை கைது செய்யக்கோரி மக்கள் போராட்டம் நடத்தினர். ராணுவத்தினர் மன்சூரை வீட்டிலிருந்து பிடித்துச் சென்று அடித்து உதைத்ததாக அவருடைய குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர். இக்கொலைக்கு காரணமான ராணுவ பிரிவின் மீது வழக்கு பதிவுச் செய்யப்படும் என உயர் ராணுவ அதிகாரிகள் அளித்த உறுதியைத் தொடர்ந்து மக்கள் அமைதியாகினர்.
தீவிரவாத நடவடிக்கைக் குறித்து சிறப்பு புலனாய்வுத் துறையின் அறிக்கையின் அடிப்படையில்தான் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதாக பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் லெஃப்டினண்ட் கர்னல் ஜெ.எஸ்.த்ரார் தெரிவித்தார். அவர் இக்கொலைக்கு வருத்தம் தெரிவித்தார்.
கொல்லப்பட்ட மாணவர் தேசிய மாநாட்டுக் கட்சியின் உறுப்பினர் ஒருவரின் மகனாவார். ஒருமுகப்படுத்தப்பட்ட ராணுவ தலைமையகத்தில் வைத்து நான் அளித்த நெறிமுறைக் கட்டளையை பின்பற்றியிருந்தால் இதனை தவிர்த்திருக்கலாம் என ஜம்மு கஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லாஹ் தெரிவித்தார்.
மாணவர் கொல்லப்பட்டதற்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால், என்ன நெறிமுறை கட்டளையை அவர் வழங்கினார் என்பதுக் குறித்து அவர் தெரிவிக்கவில்லை.
கடந்த ஜனவரி 4-ஆம் தேதி குப்வாரா மாவட்டம் வர்ணாவில் இளைஞர் ஒருவர் ராணுவத்தினரின் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டிருந்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "கஷ்மீரில் அநியாயம்:ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மாணவர் பலி"
கருத்துரையிடுக