28 பிப்., 2011

விடுதலையின் காற்றை சுவாசிக்கும் பெங்காசி

திரிபோலி,பிப்.28:புரட்சியின் சூறாவளி சுழன்று வீசிய லிபியாவின் இரண்டாவது பெரிய நகரமான பெங்காசியில் நேற்று வித்தியாசமான நாளாக மாறியது. மக்கள் எதிர்ப்புப் போராட்டம் வலுவடைந்ததைத் தொடர்ந்து பூட்டியிருந்த கடைகளும், அரசு அலுவலகங்களும் செயல்படத் துவங்கின.

நகரத்தின் நீதிமன்றக் கூட்டம் வழக்கத்தைவிட முன்னரே செயல்படத் துவங்கியது. ஆனால், அங்கு வந்தவர்களெல்லாம் அதிகாரிகளல்லர். எதிர்கட்சியினரின் கட்டுப்பாட்டிலுள்ள நீதிமன்றக்கூடம் இப்பொழுது ஊடக மையமாக செயல்படுகிறது. நீதிமன்றத்தின் முதல் அறை சமையலறையாக மாற்றப்பட்டுள்ளது. பெரும்பாலான நபர்களும் தங்களது பணியில் மூழ்கியிருந்தனர்.

நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக பதவியில் தொடரும் கத்தாஃபியை வெளியேற்றும் போராட்டத்திற்கு உத்வேகமளிக்கின்றார்கள் அவர்கள்.

நகரத்தில் சீறிப்பாயும் காரிலிருந்து குழந்தையை வெளியே காண்பித்து அக்குழந்தையின் தந்தை கூறுகிறார், 'எனது மகன் கத்தாஃபியை தேடிக் கொண்டிருக்கிறான்' என.

பாதுகாப்பு படையினரின் தலைமையகத்தில் மக்கள் ஆயுதங்களை சேகரித்துக் கொண்டிருக்கின்றார்கள். லிபியாவின் இரண்டாவது சுதந்திரம் என எல்லாச் சுவர்களிலும் எழுதப்பட்டுள்ளது. இரண்டாவது நீதிமன்ற அறை எதிர்க்கட்சியின் தலைமையகமாக செயல்படுகிறது. அஹ்மத் ஸானல்லாவும் அவரது தோழர்களும் லேப்டாப்புக்கு முன்பாக அமர்ந்துக் கொண்டு நாட்டில் நடக்கும் போராட்டத்தில் கலந்துக் கொண்ட மக்களுக்கு இணையதளத்தின் வாயிலாக உத்வேகமளித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இரத்தக் களறியாக மாறிய பெங்காசியில் 1000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு லிபியாவில் கத்தாஃபியின் பல சொத்துக்களையும் மக்கள் கைவசப்படுத்தினர். அல்பைதாவிலுள்ள மாளிகையும் இதில் அடங்கும். பூந்தோட்டமும், நீச்சல்குளமும் அலங்கரித்த வரவேற்பறைகளையும் கொண்ட மாளிகையில் பூமிக்கு கீழே விசாலமான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எந்த தாக்குதலையும் சமாளிக்கும் திறன் படைத்தவை இவை.

அதேவேளையில், மேற்கு பகுதியில் 100கி.மீ தொலைவில் பத்திரிகையாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் தலைநகரமான திரிபோலிக்கு செல்வதை தடுப்பதற்காக கத்தாஃபியின் ஆதரவாளர்களான ராணுவத்தினர் ரோந்து வருகின்றனர்.

ஆட்சியை காப்பாற்றுவதற்காக படாத பாடு படும் கத்தாஃபிக்கு பாதுகாவலுக்காக நிற்கின்றார்கள் அவர்கள். ஆனால், திரிபோலியின் பெரும்பகுதி மக்களின் வசம் வந்துவிட்டதாக செய்திகள் கூறுகின்றன.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "விடுதலையின் காற்றை சுவாசிக்கும் பெங்காசி"

கருத்துரையிடுக