2 மார்., 2011

சுனில் ஜோஷி கொலை: குற்றப்பத்திரிகை தாக்கல்

தேவாஸ்(மத்தியபிரதேசம்),மார்ச்.2:ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷியை கொலை செய்த வழக்கில் பிரக்யாசிங் தாக்கூர் உள்பட 7பேர் மீது குற்றப்பத்திரிகையை தேவாஸ் போலீஸ் தாக்கல் செய்துள்ளது.

கடந்த 2007-ஆம் ஆண்டு ஜோஷி கொலை செய்யப்பட்டார். இக்கொலைத் தொடர்பாக சம்ஜோதா எக்ஸ்பிரஸ் வழக்கில் கைதான அஸிமானந்தா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜோஷியை கொன்றது பிரக்யாசிங் உள்பட ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள்தாம் என்பது தெரியவந்தது.

சிகிட்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரக்யாசிங் தாக்கூரை அதிகாரப்பூர்வமாக கைது செய்து ஒரு நாள் கழித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முதல் வகுப்பு ஜூடிஸியல் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் நீதிபதி பத்மேஷ் ஷாவின் முன்னிலையில் 432 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 124 சாட்சிகளின் வாக்குமூலங்கள் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆனந்த் கதாரியா, ஹர்ஷத் சோலங்கி, வாசுதேவ் வார்மன், ராமச்சந்திர பட்டேல் ஆகியோர் இவ்வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கில் இதரக் குற்றவாளிகளான மெஹுல், ராகேஷ் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். இவர்கள் குஜராத்தைச் சார்ந்தவர்களாவர்.

ஜோஷியை கைது செய்தால் இந்தியாவில் நடந்த பல குண்டுவெடிப்புகளின் சதித்திட்டங்களும் வெளிவரும் என்பதால் அவரைக் கொலை செய்ததாக பிரக்யாசிங் போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெஸ்ட் பேக்கரி வழக்கில் தலைமறைவுக் குற்றவாளிகளான ஹர்ஷத், மெஹுல், ராகேஷ், உஸ்தாத் ஆகியோருடன் மோசமாக நடந்துக்கொண்டதும் ஜோஷியை கொலை செய்ய காரணமாக கூறப்பட்டுள்ளது.

இவர்கள் தேவாஸில் ஜோஷியுடன் தங்கியிருந்தனர். கொலை நடைபெறும் பொழுது பிரக்யாசிங் இந்தூரில் தங்கியிருந்தார்.

இவர்களின் மொபைல் ஃபோன் பதிவுகளை பரிசோதித்த பொழுது கொலையாளிகளுடன் அவர்கள் தொடர்ந்து தொடர்பை ஏற்படுத்தியிருந்தது நிரூபணமாகியுள்ளது. முன்னரே திட்டமிட்டப்படி ஜோஷி கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கின் இதர குற்றவாளிகளின் முன்னிலையில் ஹர்ஷத் சோலங்கி ஜோஷியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். கொலைக்குப் பிறகு ஆனந்த் கதாரியா ஏற்பாடுச்செய்த வாகனத்தில் ஹர்ஷத்தும் அவருடைய கூட்டாளிகளும் தப்பிச் சென்றுள்ளனர் என குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

ஜோஷி மரணித்த தினத்தில் அவருடைய உறவினர்களின் ஒருவருடைய வீட்டிற்கு சென்று பிரக்யாசிங் ஜோஷியின் சூட்கேஸை எடுத்துச் சென்றார் என்பது நிரூபணமாகியதைத் தொடர்ந்து பிரக்யாசிங் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டார்.

ஜோஷியின் உடலைக் கொண்டுசென்ற மருத்துவமனைக்கும் பிரக்யாசிங் உடன் சென்றுள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சுனில் ஜோஷி கொலை: குற்றப்பத்திரிகை தாக்கல்"

கருத்துரையிடுக