2 மார்., 2011

லிபியாவின் புரட்சியை முறியடிக்க முயலும் ஏகாதிபத்திய வல்லூறுகள்

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக லிபியாவை தனது குடும்பச் சொத்தைப்போல் ஆண்டுவந்த சர்வாதிகாரி முஅம்மர் கத்தாஃபியை அதிகாரத்திலிருந்து அகற்றிவிட்டு ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

லிபியாவை குருதிக் காடாக மாற்றி சொந்த நாட்டுமக்களை ஒட்டுமொத்தமாக கொன்றொழிக்கும் கத்தாஃபியின் எல்லாவித கொடூரமான நடவடிக்கைகளையும் துணிவுடன் எதிர்கொண்டு போராடி வருகின்றார்கள் அந்நாட்டு மக்கள். போராட்டம் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆயிரக்கணக்கான விடுதலைப் போராளிகள் இதுவரை இரத்த சாட்சிகளாக மாறிய பொழுதும் கத்தாஃபியும் அவரது மகன்களும் கொலை வெறிப்பிடித்து கோரத்தாண்டவமாடும் மரண விளையாட்டு எதிர்ப்பாளர்களை சற்றும் தளரச் செய்யவில்லை.

எண்ணெய் வளமிக்க பகுதிகள் உள்பட லிபியாவின் முக்கிய பிரதேசங்களையெல்லாம் கைப்பற்றியுள்ள போராளிகள் திரிபோலிக்கு 50 கி.மீ தொலைவிலுள்ள ஸாவியாவையும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டனர்.

தனக்கு ஆதரவான ராணுவத்தின் தோல்வியினால் கொதிப்படைந்த கத்தாஃபி அயல் நாடுகளிலுருந்து கூலிப் படைகளை இறக்குமதிச் செய்து ஆட்சியை காப்பாற்றுவதற்கான இறுதிப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார்.

நாட்டின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள லிபியன் நேசனல் ட்ரான்ஸிசனல் கவுன்சில் உருவாக்கப்பட்டுள்ளதாக அதன் செய்தித் தொடர்பாளர் ஹாஃபிஸ் கோகா தெரிவித்துள்ளார்.

முன்னர் முன்னாள் சட்ட அமைச்சர் முஸ்தஃபா அப்துல் ஜலீலின் தலைமையில் தற்காலிக அரசு நிறுவப்பட்டுள்ளதாக புரட்சியாளர்கள் அறிவித்திருந்தனர்.

கத்தாஃபி பதவி விலகவோ அல்லது கொல்லப்படவோ செய்தால் லிபியா தலைமை இல்லாமல் திண்டாடும் சூழலுக்கு தள்ளப்படாது என்பதைத்தான் இச்சம்பவங்கள் நிரூபிக்கின்றன.

மறுபுறத்தில் கத்தாஃபியின் வீழ்ச்சியும், மக்கள் எழுச்சியும் நிதர்சனமாகும் என்பதை அறிந்துக்கொண்ட அமெரிக்கா புரட்சியை முறியடிக்கவும், அதன் வெற்றியை தட்டிச் செல்லவும் முயன்று வருகிறது. கத்தாஃபியை வீழ்த்த ஆயுதம் தருகிறோம் என்ற அமெரிக்காவின் வாக்குறுதி இதனை நிரூபிக்கிறது.

எல்லாவித உதவிக்கும் நாங்கள் தயார் என்பதை ஹிலாரி கிளிண்டன் அறிவித்துள்ளார். லிபியாவின் கடற்பகுதிக்கு போர் கப்பல்களையும், போர் விமானங்களையும் அனுப்பியுள்ளன அமெரிக்காவும் சில மேற்கத்திய நாடுகளும். ஆனால், அமெரிக்காவின் சதிவலையை அடையாளங்கண்ட தேசிய தற்காலிக ஆட்சிமாற்றக் குழு எல்லாவிதமான வெளிநாட்டு தலையீட்டையும், ராணுவ தலையீட்டையும் தாங்கள் எதிர்ப்பதாக உறுதியாக தெரிவித்துள்ளது.

உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீடு இல்லாமலேயே லிபியாவின் எதிர்கட்சியினருக்கு அவர்கள் பொறுப்பேற்ற வேலையை பரிபூரணப்படுத்த முடியும் என்ற தன்னம்பிக்கையை ஹாஃபிஸ் கோகா வெளிப்படுத்தியுள்ளார். இது லிபியா புரட்சியாளர்களின் தீரமிக்க விவேகப் பூர்வமான முதிர்ச்சியான நிலைப்பாடு என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பான OIC யும் வெளிநாட்டுதலையீட்டை கண்டித்துள்ளது. தினமும் ஏறத்தாழ 10 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை உற்பத்திச் செய்யும் லிபியாவின் எண்ணெய் வளத்தின் மீதுதான் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் நோட்டமிடுகின்றன. அதுதான் அவர்களின் லட்சியமுமாகும். மாறாக, உள்நாட்டு ஜனநாயகமோ, மக்களுக்கு சுதந்திரமோ நோக்கமல்ல என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும்.

ஈராக், ஆப்கானிஸ்தான் இன்னும் பல நாடுகளைப் போல் லிபியாவிலும் ஒரு கைப்பாவை அரசை உருவாக்குவதுதான் அமெரிக்காவின் லட்சியம். அந்நாடுகளிலெல்லாம் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பிற்கு பின்னரும் உள்நாட்டு அமைதியோ, ஜனநாயகமோ தழைத்தோங்கவில்லை என்பது நிரூபணமாகியுள்ளது.

தம்மை ஆதரிக்கும் சர்வாதிகார ஆட்சியாளர்கள் அவர்கள் எவ்வளவு கொடூரங்களை புரிந்த பிறகும் இறுதிவரை ஆதரிப்பதும், கடைசியில் அவர்கள் மக்கள் எழுச்சியினால் பதவி விலக நேரும் வேளையில் ஆட்சியை தந்திரமாக தட்டிப்பறிப்பதும்தான் அமெரிக்க ஏகாதிபத்தியம் இதுநாள் வரை கடைப்பிடித்துவரும் கொள்கையாகும்.

சில நாடுகளில் அவர்களின் லட்சியம் நிறைவேறாமலோ அல்லது தந்திரங்கள் பலிக்காமலோ இருக்கலாம். லிபியா மக்களின் எழுச்சியும், சுதந்திரத்திற்கான போராட்டமும் எவ்வித வெளிநாட்டு சக்திகளின் தலையீடின்றி உருவானதாகும். ஆகவே அதனை முழுமைப்படுத்தவும் அவர்களுக்கு தெரியும்.

இவ்விவகாரத்தில் அவர்களுக்கு உதவுவதுதான் ஜனநாயக நாடுகள் மற்றும் அமைப்புகளின் கடமையாகும். ராட்சசனாக மாறியுள்ள கத்தாஃபிக்கு எதிரான ஐ.நா-அமெரிக்க-ஐரோப்பிய யூனியனின் தடைகள் தற்காலிக நியாயமாக இருக்கலாம். ஆனால், அவை ஒருபோதும் லிபியாவின் மக்களை தண்டிப்பதாக இருக்கக் கூடாது.

கத்தாஃபியின் ஆட்சிக் கவிழ்ந்து புதிய அரசு உருவாகும் பொழுது ஜனநாயக லிபியாவிற்கு அதன் இறையாண்மையையும், சுய நிர்ணய உரிமையையும் பாதுகாக்க உதவிச் செய்வதுதான் சர்வதேச சமூகத்தின் கடமையாகும்.
ASA

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "லிபியாவின் புரட்சியை முறியடிக்க முயலும் ஏகாதிபத்திய வல்லூறுகள்"

கருத்துரையிடுக