3 மார்., 2011

இறைவிசுவாசியின் இயற்கைக் குணம்

சுமார் 20 தினங்கள் நீண்ட முற்றுகைக்குப் பின் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படாததால் ஸகீஃப் கோத்திரத்திற்கெதிராக தற்காலிகமாக போரை நிறுத்திவிட்டு தாயிஃபிலிருந்து திரும்பியது முஸ்லிம் படை.

மதீனா நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த முஸ்லிம் படையை உர்வா இப்னு மஸ்ஊத் என்பவர் அணுகி அண்ணல் நபிகளார் (ஸல்) அவர்களின் கரங்களைப் பிடித்து முஸ்லிமானார். உர்வா ஸகீஃப் கோத்திரத்தைச் சார்ந்தவர். தாயிஃபிலிருந்து முஸ்லிம் படை திரும்பியபொழுது அதனைப் பின்தொடர்ந்து உர்வா வந்தார்.

இஸ்லாம் குறித்த அடிப்படை விஷயங்களை அண்ணலார் உர்வாவுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். அதன்பின் அவர் தன் கோத்திரத்தாரிடம் போவதற்குப் புறப்பட்டார். அவர்களை இஸ்லாத்தின் பக்கம் அழைப்பதே அவரது இலட்சியம்.

ஸகீஃப் கோத்திரத்தாரின் குணத்தை நன்கு அறிந்திருந்த அண்ணலார், "அவர்கள் உங்களைத் தாக்குவார்களே..." என்று தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள்.

அதற்கு உர்வாவின் பதில் இவ்வாறாக இருந்தது: "அண்ணலாரே, அதற்குச் சாத்தியமில்லை. நான் அவர்களின் பொருத்தத்தைப் பெற்றவன். கன்னிப் பெண்களை விடவும் அவர்கள் என்னை அதிகம் நேசிக்கின்றனர்."

உர்வா இப்னு மஸ்ஊதின் இந்த நல்லெண்ணம் தவறிவிட்டது. ஸகீஃப் கோத்திரத்தாரிடம் சென்று அவர் இஸ்லாத்தின்பால் அழைத்தபொழுது அவர்களது சுபாவமே மாறியது. உறவினர்களும், நண்பர்களும் கூட அவருக்கெதிராகக் கொதித்தெழும்பினர்.

நிராயுதபாணியாக இருந்த உர்வாவை அவர்கள் ஆயுதங்கள் கொண்டு தாக்கினர். அம்புகளின் தாக்குதலில் அவர் வீழ்ந்தார். மரண வேதனையில் கிடந்த அவரிடம் சிலர் இவ்வாறு கிண்டலாகக் கேட்டனர்: "இப்பொழுது உங்கள் மதம் எப்படி இருக்கிறது?"

அதற்கு உர்வா இவ்வாறு பதிலளித்தார்: "மகத்தான இறைவன் என்னை மாண்பு படுத்தியுள்ளான். என்னைக் கண்ணியப்படுத்தியுள்ளான். அவன் எனக்களித்த கௌரவம்தான் இந்த ரத்த சாட்சியம்."

அண்டை கோத்திரங்கள் ஒவ்வொன்றாக இஸ்லாத்தைத் தழுவ ஆரம்பித்தபொழுது ஸகீஃப் கோத்திரத்தாரால் தாக்குப் பிடித்து நிற்க முடியவில்லை. அவர்கள் அண்ணலாரிடம் வந்து தாங்கள் இஸ்லாத்தைத் தழுவ தயாராக இருப்பதாக அறிவித்தார்கள். ஆனால் அவர்கள் அதற்கு சில நிபந்தனைகளை விதித்தார்கள்.

அவர்களது பிரதேசத்தை இராணுவத் தளமாக ஆக்காமல் இருக்க வேண்டும், தொடர்ந்து சில காலங்களுக்கு சிலை வணக்கங்களை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும், தொழுகையிலும், ஜக்காத்திலும் சலுகைகள் வேண்டும், ஜிஹாதில் கலந்துகொள்ள நிர்ப்பந்திக்கக் கூடாது, அவர்களுடைய தலைவராக அவர்களிலிருந்தே ஓர் ஆளை நியமிக்க வேண்டும் ஆகியவைகளே அந்த ஐந்து நிபந்தனைகள்.

அந்த நிபந்தனைகளில் மூன்றை அண்ணலார் ஏற்றுக் கொண்டார்கள். அவர்களது பிரதேசத்தை இராணுவத்தளமாக மாற்றுவது இல்லை. ஜிஹாதில் கலந்துகொள்ள வேண்டியதில்லை. அவர்களுக்குத் தலைவராக அன்னியரை நியமிப்பதில்லை.

இந்த முடிவைத் தெரிவித்தபொழுது கூடியிருந்தவர்களிடம் அண்ணலார் இவ்வாறு தெரிவித்தார்கள்: "இஸ்லாத்திற்குள் வந்துவிட்டால் இவர்கள் தானாகவே ஜிஹாதில் கலந்துகொள்வார்கள்."

ஒருவருக்கு இறைவிசுவாசம் வந்து விட்டால் அவரது மனதில் தீமைக்கெதிரான போராட்ட குணம் வந்து விடும் என்பது அண்ணலாருக்குத் தெரியும்.

அது ஒரு பொழுதும் தவறியதில்லை. ஸகீஃப் கோத்திரத்தார் இஸ்லாத்தைத் தழுவிய பின் ஒருபொழுதும் இந்தச் சலுகைகளைக் கேட்டதேயில்லை.

அண்ணலாரின் சலுகை இருந்தும் தீமைக்கெதிரான போராட்டத்தில் அவர்கள் கலந்துகொண்டார்கள். ஏனெனில் இறைவிசுவாசத்தில் அதற்கு அனுமதியில்லை என்பதை அவர்கள் நன்கு உணர்ந்து கொண்டதுதான்.

இதனைத்தான் இறைவன் இறைமறையில் இப்படி இயம்புகின்றான்:

"அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொண்டவர்கள் தங்கள் பொருட்களையும், உயிர்களையும் அர்ப்பணம் செய்து, போர் புரியாமலிருக்க உம்மிடம் அனுமதி கேட்கவே மாட்டார்கள். பயபக்தி உடையவர்களை அல்லாஹ் நன்கறிவான்." (அத் தவ்பா 9:44)

நன்றி : தேஜஸ் மலையாள நாளிதழ்
தமிழில் : MSAH

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இறைவிசுவாசியின் இயற்கைக் குணம்"

கருத்துரையிடுக