புனே:சமீபத்தில் நடைபெற்ற மகாராஷ்டிர சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் சிவசேனை-பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சியைப் பிடிக்கத் தவறியதால் மகாராஷ்டிரத்தின் மண்ணின் மைந்தர்கள் (மராத்தி மனு) மீதும், கடவுள் மீதும் தனக்கிருந்த நம்பிக்கை போய்விட்டதாக பால் தாக்கரே கூறியிருக்கிறார்.
கட்சிப் பத்திரிகையான சாம்னா'வில் தன்னுடைய வேதனையையும் ஏமாற்றத்தையும் அவர் தலையங்கமாக எழுதியிருக்கிறார். மராட்டியர்களே என்னுடைய முதுகில் குத்திவிட்டனர். மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனை (சிவசேனையிலிருந்து பிரிந்து சென்றவர்களின் கட்சி) கை' கொடுத்திருக்கிறது என்று ஆங்கிலப் பத்திரிகையில் தலைப்பு போட்டிருக்கிறார்கள். இதற்கு மேல் இந்தத் துரோகம் குறித்து நான் எதையும் கூற விரும்பவில்லை.
என்னையும் உங்களையும் தீய சக்தி (அண்ணன் மகன் ராஜ் தாக்கரே) ஒன்று பிரிக்கிறது. இருவருடைய மனங்களும் ஒன்றுசேர விடாமல் தடுக்கிறது. எனக்கு மகாராஷ்டிரர்கள் மீதும் கடவுள் மீதுமே எனக்கு நம்பிக்கை போய்விட்டது. மிகுந்த வேதனையுடன் இந்தத் தலையங்கத்தை எழுதுகிறேன், உண்மையை மறைக்க விரும்பவில்லை. தங்களுக்காகவே தொடங்கப்பட்ட சிவசேனைக்கு வாக்களிக்க வேண்டும் என்று மராட்டியர்களுக்கு ஏன் தோன்றவில்லை என்று வியப்பாக இருக்கிறது.
தமிழ்நாட்டிலே கருணாநிதி தலைமையிலான திமுகவோ, ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவோதான் திரும்பத் திரும்ப ஆட்சிக்கு வருகின்றன. குஜராத்திலே நரேந்திர மோடி விடுக்கும் அழைப்பை அந்த மாநில மக்கள் ஏற்கிறார்கள். ஒரிசாவிலே ஒரியர்கள் நவீன் பட்நாயக்கைதான் மீண்டும் ஆட்சியில் அமர்த்தினார்கள். மராட்டியர்களுக்கு புத்திசாலித்தனம் இல்லையே, அவர்களுடைய மூளை செத்துவிட்டதே என்று வேதனைப்படுகிறேன்.
என் மனதில் இருந்த பாரங்களைக் கொட்டித் தீர்த்துவிட்டேன். என்னுடைய வாழ்க்கையின் 44 ஆண்டுகளை உங்களுக்காகவே தியாகம் செய்தேன். என்ன குற்றம் செய்தேன், எங்கே தவறினேன் என்று தெரியவில்லை. மராட்டியர்களின் மரத்துப்போன மூளைகளுக்கு இனி புத்துணர்ச்சி ஏற்படாது என்றால் நான் இந்த அளவுக்கு என்னை வருத்திக் கொண்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை' என்று பால் தாக்கரே அந்த தலையங்கத்தில் எழுதியிருக்கிறார்.
source:inneram
0 கருத்துகள்: on "மராட்டியர்களுக்கு மரத்துப்போன மூளை: பால் தாக்கரே!"
கருத்துரையிடுக