1 நவ., 2009

இந்திராவை போற்றுவோர் போபாலை மறந்தது ஏன்? பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் குமுறல்

போபால் : இந்திராவின் நினைவு நாளை பலவிதங்களில் அனுசரிக்கும் மத்திய அரசு, போபால் விஷ வாயு விபத்தில் இறந்துபோன அப்பாவி மக்களை மறந்தது ஏன் என்று போபால் விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் குரல் எழுப்பப்பட்டுள்ளது.

கடந்த 1984ம் ஆண்டு இந்திய வரலாற்றில் மறக்க முடியாத சோகங்கள் நிகழ்ந்தன. அந்த ஆண்டில் பஞ்சாப் சீக்கியர்களின் கலவரத்தைத் தொடர்ந்து அக்டோபர் 31ம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா சுட்டுக் கொல்லப்பட்டார். டிசம்பர் 3ம் தேதி இரவு மத்தியபிரதேசம் போபாலில் உள்ள கார்பைடு தொழிற்சாலையிலிருந்து விஷவாயு கசிந்து, அடுத்தடுத்த நாட்களில் 15 ஆயிரத்து 274 அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 50 ஆயிரம் பேர் கண்பார்வை குறைவு, சிறுநீரகம், கல்லீரல் பாதிப்பு போன்ற கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதி இந்திராவின் 25 வது நினைவு நாளை மத்திய அரசு பல்வேறு விதங்களில் அனுசரிக்க இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை மற்றும் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் இணைந்து செய்துள்ளன. இசை அஞ்சலி மற்றும், கண்காட்சி, இந்திரா குறித்த 41 நிமிட ஆவணப் படம் இவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இத்தனை ஏற்பாடுகள் இந்திராவுக்கு செய்தவர்கள், போபால் விஷ விபத்து ஏற்பட்டு 25 ஆண்டுகள் ஆனதை நினைவுகூரும் விதத்தில் என்ன செய்துள்ளனர் என்று கேள்வி எழுப்பியுள்ளது, "போபால் கேஸ் பீடித் மகிளா உத்யோக் சங்கதன்' என்ற அமைப்பு. போபால் விபத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்காகத் தொண்டாற்றும் தன்னார்வத் தொண்டு அமைப்புதான் இந்த உத்யோக் சங்கதன்.

இதன் தலைவர் அப்துல் ஜப்பார் இது குறித்து கூறியதாவது: இந்திராவின் நினைவுதின நிகழ்ச்சிகள் வரவேற்கத்தக்கவைதான். ஆனால், போபால் விபத்து நடந்து 25 ஆண்டுகள் ஆனதை நினைவுகூரும் விதத்தில் இவர்கள் என்ன செய்துள்ளனர்? அந்த விபத்தால் பாதிக்கப்பட்டவர்களின் கதி என்ன? டிசம்பர் 3ம் தேதி இரவு அன்று போபாலுக்கு வருகை தருமாறு பிரதமருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளேன். இந்த விபத்து குறித்து ஒரு நினைவுச் சின்னம் கிடையாது. ஒரு வெள்ளை அறிக்கை கிடையாது. நீண்டகால நிவாரணம் தரவில்லை. அங்கிருப்பவர்களைத் திரும்பவும் பழைய நிலைக்கு கொண்டு வர எந்தத் திட்டமும் இல்லை. இறப்பு என்பது எல்லாருக்கும் ஒன்றுதான். அதில் வித்தியாசமான அளவுகோல் கிடையாது. இந்திராவுக்காக சில நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தும் பிரதமர், போபாலின் அப்பாவி மக்களுக்காக சில நிமிடங்களை ஒதுக்க முடியாதா? இவ்வாறு ஜப்பார் தெரிவித்தார்.

அமெரிக்காவின் "டோ கெமிக்கல்ஸ்' நிறுவனம், போபால் யூனியன் கார்பைடு கம்பெனியை, 1989ல் வாங்கியது. விபத்தில் இறந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்காக அந்நிறுவனம் 2,200 கோடி ரூபாய் ஒதுக்கியது. இந்தத் தொகை மிகக் குறைவு என்றே அப்போது பலரும் கூறினர். யூனியன் கார்பைடு கம்பெனியின் நன்கொடையில், 350 படுக்கைகள் கொண்ட ஒரு மருத்துவமனை கோர்ட் உத்தரவின் படி 1998ல் அமைக்கப்பட்டது. அதிலும் குறைந்த ஊழியர்கள், தரமற்ற சிகிச்சை என்று புகார்கள் கிளம்பின.
source:indnav,dinamalar

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இந்திராவை போற்றுவோர் போபாலை மறந்தது ஏன்? பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் குமுறல்"

கருத்துரையிடுக