சவுதி அரேபியாவில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளத்திற்கு இதுவரை 48 பேர் பலியாகி உள்ளதாக அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் வெள்ளத்தில் சிக்கியிருந்த சுமார் 900 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
ஹஜ் நடைமுறைகள் புதன் கிழமை முதல் தொடங்கி உள்ளதை அடுத்து இலட்சக் கணக்கான பயணிகள் குழுமியுள்ள நிலையில், இதுவரை பலியாகி உள்ள எவரும் ஹஜ் பயணிகள் இல்லை என்று சவுதி உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
உலகின் பல பாகங்களிலிருந்தும் சுமார் 30 இலட்சம் பயணிகள் ஹஜ் கடமையை நிறைவேற்ற வந்துள்ளனர். வியாழக்கிழமையும் மழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. புதன் கிழமை வரை வெள்ளத்தினால் நிகழ்ந்த மரணங்கள் மக்கா, ஜித்தா மற்றும் ரபீக் ஆகிய நகரங்களில் ஏற்பட்டதாக சவுதி செய்தி நிறுவனம் கூறியுள்ளது. வெள்ளத்தினால் வீடுகள் இடிந்ததே பலி எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கான காரணம் என்றும் அந்நிறுவனம் கூறுகிறது.
முன்னதாக கடுமையான மழையை அடுத்து மக்கா செல்லும் வழி முழுமையாக தடுக்கப்பட்டிருந்ததாகவும், இதனால் ஹஜ் பயணிகள் மக்கா சென்றடைய முடியவில்லை என்றும் செய்திகள் தெரிவித்தன.
source:inneram,buisness24/7
0 கருத்துகள்: on "சவுதி வெள்ளம்: பலி எண்ணிக்கை 48ஆக உயர்வு!"
கருத்துரையிடுக