கடந்த ஆண்டு நடந்த மும்பைத் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த மராட்டிய பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறையின் தலைவர் ஹேமந்த் கார்கரே அணிந்திருந்த ‘புல்லட் புரூஃப்’ கவச உடை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்கரேவின் புல்லட் புரூஃப் கவச உடை காணாமல் போனது பற்றி அவரது மனைவி கவிதா சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு அந்த புல்லட் புரூஃப் உடை காணாமல் போய்விட்டதாகப் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு கவிதா கார்கரே அளித்துள்ள பேட்டியில், “மும்பைத் தாக்குதலின் போது அவரது (கார்கரே) உடல் கண்டறியப்பட்ட சமயத்தில் அவர் அணிந்திருந்த புல்லட் புரூஃப் கவச உடையைக் காணவில்லை. மருத்துவமனையிலும் அது கிடைக்கவில்லை.
இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இதுபற்றி விளக்கம் கோரி மனு செய்திருந்தேன். அதற்கு புல்லட் புரூஃப் கவச உடை காணவில்லை என்று பதிலளிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
புல்லட் புரூஃப் கவச உடை அணிந்திருந்த போதிலும், கார்கரேவின் மார்புப் பகுதியில் 3 குண்டுகள் பாய்ந்ததால் அவர் உயிரிழந்தார். இதனால் அரசு வழங்கிய புல்லட் புரூஃப் தரமற்றதா அல்லது இந்த கொலையில் ஏதேனும் மர்மம் உள்ளதா என பல சந்தேகங்கள், வினாக்கள் எழுகின்றன.
source:oneindia
0 கருத்துகள்: on "கார்கரே அணிந்திருந்த ‘புல்லட் புரூஃப்’ கவச உடை எங்கே?"
கருத்துரையிடுக