25 நவ., 2009

வரலாற்றுச் சின்னங்கள் தொடர்பான சர்ச்சைகளைத் தீர்க்க நிரந்தர தேசிய ஆணையம் - லிபரான்

டெல்லி: பாபர் மசூதி போன்ற வரலாற்றுச் சின்னங்கள், கலைப் பொக்கிஷங்கள் தொடர்பான சர்ச்சைகள், வழக்குகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டுமானால், தேசிய அளவில் நிரந்தரமான ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று லிபரான் கமிஷன் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆணையம் வழங்கும் தீர்ப்பே உறுதியானதாக, இறுதியானதாக இருக்க வேண்டும். அந்த அளவுக்கு இந்த ஆணையத்திற்கு அதிகாரங்கள், சட்ட அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்றும் லிபரான் கூறியுள்ளார்.

இதுகுறித்து அறிக்கையில் லிபரான் கூறியிருப்பதாவது...

வரலாற்றியலாளர்கள், தொல்பொருள் துறையினர் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த வல்லுநர்களைக் கொண்டு இந்த ஆணையம் அமைய வேண்டும். எந்தவித பாரபட்சமும் இல்லாமல் இவர்கள் செயல்பட வேண்டும். அதேசமயம், நாட்டின் ஒற்றுமை, சமூகங்களுக்கிடையிலான அமைதி, பிராந்தியங்களுக்கிடையிலான அமைதி, இணக்கம் ஆகியவை குலையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வரலாற்றுச் சின்னங்கள் தொடர்பான சர்ச்சைகளுக்கு தீர்வு காண நவீன வசதிகளுடன் கூடிய விசாரணை வாய்ப்பு அவரக்ளுக்கு அளிக்கப்பட வேண்டும். யாருக்கு இது சொந்தம் என்பதை உறுதியாகவும், இறுதியாகவும் ஆராய்ந்து இந்த ஆணையம் தீர்ப்பளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் லிபரான்.

ஆனால் மத்திய அரசு இந்த பரிந்துரையை தேவையில்லை என்று கூறி நிராகரித்துள்ளது. இதற்குப் பதிலாக, இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறைக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கினால் போதுமானது என்று அரசு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து லிபரான் கூறுகையில், சர்ச்சைக்குரிய கட்டடம் கோவிலா, மசூதியா என்பதை, தொல்பொருள் துறையினர், வரலாற்றியலாளர்கள் உள்ளிட்டோர் அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்து கண்டுபிடிக்க வேண்டுமே தவிர அரசியல்வாதியோ, நீதிபதியோ, பத்திரிக்கையாளரோ இதைக் கண்டுபிடிக்க முயலக் கூடாது.

இது இப்படி இருக்கலாம் என்று ஊகம் செய்யப் போவோமானால் அது 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி நடந்த சம்பவம் போன்ற பெரும் குழப்பத்திற்குத்தான் வித்திடும் என்று கூறியுள்ளார் லிபரான்.
source:thatstamil

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "வரலாற்றுச் சின்னங்கள் தொடர்பான சர்ச்சைகளைத் தீர்க்க நிரந்தர தேசிய ஆணையம் - லிபரான்"

கருத்துரையிடுக