25 நவ., 2009

பாபர் மசூதி வழக்கு- ஆரம்பித்து வைத்த ஷேக்!

லக்னோ: பாபர் மசூதி தொடர்பாக முதன் முதலாக வழக்கு தொடர்ந்தவர் ஹாஜி ஷேக் என்பவர்தான். இன்று அந்த வழக்கை தொடர்ந்து நடத்தி வருகிறார் அவரது மகன் ஹாஜி மகபூப்.

1949ம் ஆண்டு டிசம்பர் மாதம், பாபர் மசூதியின் கதவுகளை உடைத்து சிலர் உள்ளே புகுந்து ராமர் சிலையை வைக்க முயன்றனர். இதையடுத்து ஹாஜி ஷேக் போலீஸில் புகார் கொடுத்தார். அதுதான் பாபர் மசூதி தொடர்பாக தொடரப்பட்ட முதல் வழக்காகும்.

ஷேக்குவின் மறைவுக்குப் பின்னர் அந்த வழக்கை தொடர்ந்து நடத்தி வருகிறார் அவரது மகன் மகபூப்.

லிபரான் கமிஷன் அறிக்கை குறித்து மகபூப் கருத்து தெரிவிக்கையில், "இது எங்களுக்குக் கிடைத்த முதல் வெற்றி.

பாபர் மசூதி தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நான்கு சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரேபரேலி, லக்னோ கோர்ட்டுகளில் தலா ஒரு கிரிமினல் வழக்கு உள்ளது. அனைத்தும் ஆமை வேகத்தில் நகர்ந்து வருகின்றன.

வழக்கு தொடர்பாக வாரத்திற்கு மூன்று முறை அயோத்திக்கும், லக்னோவுக்கும் நான் அலைந்து கொண்டிருக்கிறேன்.

1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி நடந்த வன்முறையில் எனது குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர். இதனால் எனது குடும்பம் சிதறிப் போனது, மனதொடிந்து போனேன். நானே கூட நான்கு முறை இதுவரை உயிர் தப்பியுள்ளேன்.

ஒவ்வொரு முறையும் நான் லக்னோ செல்லும்போது எனக்கு மிரட்டல் விடுக்கப்படும். இது வழக்கமாகி விட்டது. இதை நான் இப்போதெல்லாம் பெரிதுபடுத்துவதில்லை" என்கிறார் மகபூப்.

இதேபோல பாபர் மசூதிக்காக தொடர்ந்து சட்டரீதியாக போராடிக் கொண்டிருக்கும் இன்னொரு முதியவர் ஹாசிம் அன்சாரி. இவருக்கு வயது 90. பாபர் மசூதி தொடர்பாக தொடரப்பட்ட இன்னொரு வழக்கை முதன் முதலாக தொடர்ந்தவர் இவர்.

தற்போது மெக்காவுக்கு புனித யாத்திரை போயிருக்கிறாராம் அன்சாரி.
source:thatstamil

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பாபர் மசூதி வழக்கு- ஆரம்பித்து வைத்த ஷேக்!"

கருத்துரையிடுக