24 நவ., 2009

நடவடிக்கை ரிப்போர்ட்- யாரையும் குற்றம் சாட்டாத அரசு!

டெல்லி: அயோத்தி பாபர் மசூதி இடிப்பு குறித்து விசாரித்த லிபரான் கமிஷன் அறிக்கையுடன் சேர்த்து நாடாளுமன்றத்தில் சமர்க்கப்பட்ட அரசின் நடவடிக்கை அறிக்கையில் (Action taken report-ATR) யார் மீதும் தனிப்பட்ட நடவடிக்கை குறித்து பரிந்துரைக்கப்படவில்லை. யார் மீதும் குற்றம் சாட்டப்படவில்லை.

கிட்டத்தட்ட 17 ஆண்டு கால விசாரணைக்குப் பின்னர் நீதிபதி லிபரான் தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். இது நாடாளுமன்றத்தில் இன்று வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்பாகவே அதன் பல பகுதிகள் லீக் ஆனதால் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

இந் நிலையில் இன்று லிபரான் கமிஷன் அறிக்கை மற்றும் நடவடிக்கை அறிக்கை ஆகியவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

13 பக்கங்களைக் கொண்ட நடவடிக்கை அறிக்கையில், யார் மீதும் தனிப்பட்ட முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரைக்கப்படவில்லை. எந்த தனி நபரின் பெயரும் குறிப்பிட்டு அதில் இடம் பெறவில்லை.

நடவடிக்கை அறிக்கையில் இடம் பெற்றுள்ளதாவது.

லிபரான் கமிஷன் அறிக்கையை மத்திய அரசு ஏற்கிறது. அதன் பரிந்துரைகளையும் அரசு ஏற்கிறது. மத வன்முறைகளை ஒடுக்க தனிச் சட்டம் இயற்றுவது குறித்து அரசு பரிசீலிக்கும். மேலும், இதுபோன்ற வழக்குகளை விசாரிக்க தனி கோர்ட்டுகளும் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில், எந்த தனிப்பட்ட நபர் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து பரி்ந்துரைக்கப்படவில்லை.

யாருடைய பெயரையும் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு அறிக்கையி்ல் இல்லை. யார் மீதும் புதிதாக வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என்றும் நடவடிக்கை அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

எந்த அரசியல் தலைவரும், அரசிலும், மத அமைப்புகளிலும் ஒரே சமயத்தில் பங்கு வகிக்க முடியாது என்று மட்டும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் லாபத்திற்காக மதத்தையும் ஜாதியையும் யாராவது பயன்படுத்தினால் அவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வகை செய்யும் சட்டம் கொண்டு வரப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக 55 பேர் மீது ரேபரேலி தனி கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத கரசேவகர்கள் மீதும் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகளை விரைவாக நடத்தி முடிக்க வகை செய்யப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஒருங்கிணைப்புக் கவுன்சிலுக்கு நீதிமன்றங்களுக்கான அங்கீகாரத்தை அளிக்க வேண்டும் என்ற நீதிபதி லிபரான் கமிஷன் பரிந்துரையை நிராகரிப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதக் கலவரங்கள், ஜாதிக் கலவரங்களால் ஒரு பகுதி பாதிக்கப்படும்போது அந்தப் பகுதியை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அங்கு சிறப்பு புலனாய்வுப் படைகளை அனுப்பி விசாரணை நடத்த வகை செய்யும் புதிய சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

கமிஷன் அறிக்கையை ஏற்கிறோம்-மொய்லி:

நடவடிக்கை அறிக்கை மற்றும் லிபரான் கமிஷன் அறிக்கை குறித்து சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி செய்தியாளர்களிடம் பேசுகையில்,

பாபர் மசூதி இடிப்புக்குக் காரணமானவர்கள் என்று குறிப்பிட்டு யார் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க லிபரான் கமிஷன் பரிந்துரைக்கவில்லை.

மத ரீதியாக நாட்டை துண்டாடச் செய்த நிகழ்வுக்கு வித்திட்டவர்கள் என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய், எல்.கே.அத்வானி உள்ளிட்ட 68 பேரை லிபரான் கமிஷன் குற்றம் சாட்டியுள்ளது.

பாஜக மற்றும் சங் பரி்வார் தலைவர்கள் மீது லிபரான் கமிஷன் இவ்வாறு குற்றம் சாட்டியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. நாட்டுக்கு இது பெருத்த அவமானமாகும்.

வழக்கமாக ஒரு கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யப்படும்போது அதுகுறித்த தொடர் நடவடிக்கைகள் அமைவது இயற்கை. அதேபோல லிபரான் கமிஷன் அறிக்கை மீதும் தொடர் நடவடிக்கைகள் இருக்கும். இந்த தொடர் நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ளப்படும் என்றார்.

முக்கியப் புள்ளிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு இது ஒரு சாதாரண தனி நபரின் கிரிமினல் செயல் மட்டுமல்ல, நாட்டின் மீதான தாக்குதல் செயலாகும் என்றார் மொய்லி.

பாபர் மசூதி இடிப்பில் அப்போதைய நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு மீது எந்தத் தவறும் இல்லை என்று லிபரான் கமிஷன் அறிக்கை கூறியுள்ளது குறித்து மொய்லி தெரிவிக்கையில், பாபர் மசூதி இடிப்பு என்பது நமது நாட்டின் மதச்சார்பற்ற கட்டமைப்பையும், தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கவும் நடந்த முயற்சி. அந்த செயலுக்குக் காரணமானவர்கள் யாரோ அவர்கள் அதற்கான பலனை அனுபவிக்க வேண்டும் என்றார்.
source:thatstamil

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "நடவடிக்கை ரிப்போர்ட்- யாரையும் குற்றம் சாட்டாத அரசு!"

கருத்துரையிடுக