கோவை: கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 21 பேரின் அப்பீல் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அந்தத் தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டது. அதேசமயம், 16 பேரின் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது.
அதேபோல மதானி இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்துத் தொரப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ம் தேதி அத்வானி தேர்தல் பிரசாரத்திற்காக கோவை வந்தார். அவர் வருவதற்கு முன்பு மாலை 4 மணியளவில், ஒரே நேரத்தில் 17 இடங்களில் பயங்கர குண்டுகள் வெடித்தன. இதில் 58 பேர் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த வழக்கை விசாரித்து வந்த கோவை தனி நீதிமன்றம் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி உள்ளிட்ட 8 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டது.
அல் உம்மா தலைவர் பாட்சா உள்ளிட்ட 43 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
64 பேருக்கு 3 ஆண்டு முதல் 13 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2007 ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து 43 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர்.
அதேபோல, மதானி உள்பட 8 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து குண்டு வெடிப்பில் மரணம் அடைந்த ஒருவரின் தந்தை மனுதாக்கல் செய்தார். மேலும், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அனைவருக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும் என்றும் மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் பிரபாஸ்ரீதேவன், எம்.சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்தனர்.
சம்பவம் நடந்தபோது மைனர்களாக இருந்ததால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முஜ்புர் ரகுமான், முகமது அம்ஜத் அலி ஆகியோரை நீதிபதிகள் விடுதலை செய்து உத்தரவிட்டனர்.
மற்றவர்களின் அப்பீல் மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் கடந்த அக்டோபர் மாதம் 7 ந் தேதி தள்ளி வைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில் 39 பேரில் 16 பேரின் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது. 21 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் ரத்து செய்யப்பட்டது.
மேலும் மதானி உள்ளிட்ட 6 பேர் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மனுவையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
source:thatstamil
0 கருத்துகள்: on "கோவை தொடர் குண்டுவெடிப்பு: 21 பேர் ஆயுள் தண்டனை ரத்து"
கருத்துரையிடுக