சென்னை : "இல்லாத லவ் ஜிகாத் அமைப்புக்கும், எங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது,'' என்று, கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் பொதுச்செயலர் செய்யது அலி அசாருதீன் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பெண்களை கட்டாயப்படுத்தி, முஸ்லிம் மதத்திற்கு மாற்றுவதாக, ஷாஹின் ஷா, சிராஜ் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதற்கு, "லவ் ஜிகாத், ரோமியோ ஜிகாத்' என்றும் பெயரிடப்பட்டது. இது தொடர்பாக, கேரள ஐகோர்ட்டில் வழக்கை விசாரித்த நீதிபதி சங்கரன், "லவ் ஜிகாத்" குறித்து எட்டு கேள்விகளை எழுப்பி, கேரள மாநில டி.ஜி.பி.யை அறிக்கை தாக்கல் செய்யுமாறு, கடந்த செப்டம்பரில் உத்தரவிட்டார்.
அக்டோபர் மாதம், டி.ஜி.பி., தாக்கல் செய்த அறிக்கையில், "லவ் ஜிகாத், ரோமியோ ஜிகாத்' என்று எதுவும் செயல்படவில்லை. லவ் ஜிகாத் தொடர்பாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை' என்று தெரிவித்திருந்தார். நவம்பர் மாதம் தாக்கல் செய்த மற்றொரு அறிக்கையில், "லவ் ஜிகாத்" செயல்படுவதற்கான ஆதாரப்பூர்வமான தகவல் இல்லை. இது குறித்த குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்படவில்லை' என்றும் டி.ஜி.பி. குறிப்பிட்டிருந்தார்.
சம்பந்தபட்ட இரண்டு பெண்களும், "தாங்கள் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யப்படவில்லை' என்று, கோர்ட்டில் தெரிவித்துள்ளனர். இதன் பிறகும், திருப்தியில்லாமல், கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தை இயற்ற நீதிபதி சங்கரன் பரிந்துரை அளித்துள்ளார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாணவர் அமைப்பான கேம்பஸ் ஃப்ரண்ட் திட்டமிட்டு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது என்று செய்தியில் வெளிவந்த கருத்து, அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. "லவ் ஜிகாத்" என்று ஒன்று இல்லை. பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாணவர் அமைப்பான, கேம்பஸ் ஃப்ரண்ட், பல சமூக சேவைகளை செய்து வருகிறது. எங்களுக்கும், இல்லாத லவ் ஜிகாத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இவ்வாறு செய்யது அலி அசாருதீன் கூறியுள்ளார்.
source:dinamalar
0 கருத்துகள்: on ""இல்லாத லவ் ஜிகாத் அமைப்புக்கும், எங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது"- கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியா"
கருத்துரையிடுக