இந்தியாவின் பிரதமர் ஆவதற்கு மதம் ஒரு தகுதி இல்லை என்றும், பிரதமர் பதவிக்குத் தகுதியுடைய முஸ்லிமும் பிரதமர் ஆகலாம் என்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.திங்கள் கிழமையன்று உத்திரப் பிரதேச மாநிலம் அலிகரில் அமைந்துள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழக மாணவர்களிடம் ராகுல் காந்தி கலந்துரையாடினார்."இந்தியா சுதந்திரம் பெற்று நீண்ட காலமாகியும் இதுவரை ஒரு முஸ்லிம் பிரதமராகவில்லை. ஒரு முஸ்லிம் பிரதமர் ஆவதற்கு இன்னும் எத்தனை காலம் பிடிக்கும்?" என்ற ஒரு மாணவரின் கேள்விக்குப் பதில் அளித்த ராகுல், "நீங்கள் எந்த மதத்தை அல்லது எந்த சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பது முக்கியமல்ல; ஆனால் அந்தப் பதவிக்கு உரிய தகுதிதான் முக்கியம்" என்று கூறினார்.
"இன்று மன்மோகன் சிங் சீக்கியர் என்பதற்காக இந்தியாவின் பிரதமராக இருக்கவில்லை. பிரதமராக இருப்பதற்கான அனைத்துத் தகுதிகளையும் பெற்றிருப்பதால்தான் அவர் பிரதமராக இருக்கிறார்" என்றும் ராகுல் கூறினார். "பிரதமர் ஆவதற்கான தகுதிகளைப் பெற்றுள்ள முஸ்லிம்கள் இருந்தால் அவர்களும் பிரதமர் ஆக முடியும்" என்றும் அவர் கூறினார்."
உங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமானோர் தலைவர்களாக ஆக வேண்டும். 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையை உடைய இந்தியாவில் மிகக் குறைந்த அளவில் மக்கள் தொகை கொண்ட சீக்கியர்களிலிருந்து ஒருவர் பிரதமர் ஆக முடியும் என்று எவருமே கற்பனை செய்திருக்க முடியாது. ஆனால் இன்று மன்மோகன் சிங் பிரதமராக ஆகியுள்ளார்" என்றும் ராகுல் கூறினார்.
"அதிக அளவிலான முஸ்லிம் இளைஞர்கள் தேசிய அரசியலில் பங்கேற்க வேண்டும். அவ்வாறு அவர்கள் பங்கேற்றால் அதன் மூலம் முஸ்லிம் சமுதாயத்தின் பிரச்சனைகள் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பிரச்சனைகளும் தீர்க்கப்படும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இளைய முஸ்லிம் தலைவர்களைத் தேசிய அரசியலில் காண்பது மிகவும் அரிதாகிவிட்டது" என்றும் ராகுல் காந்தி கூறினார். "அடுத்த 5 ஆண்டுகளில் குறைந்தது 25 இளைய முஸ்லிம் தலைவர்களாவது தேசிய அரசியலில் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்பதே தன்னுடைய குறிக்கோள்" என்றும் அவர் கூறினார்.
source:thatstamil

0 கருத்துகள்: on "முஸ்லிம்களும் பிரதமராகலாம் : ராகுல்!"
கருத்துரையிடுக